34கிமீ மைலேஜ் தரக்கூடிய இந்த மாருதி காரை தான் அதிக பேர் வாங்க விரும்புறாங்க! பயங்கர டிமாண்டில் 5 மாருதி கார்ஸ்
மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 1 லட்சத்தில் இருந்து 2 லட்ச கார்களை விற்பனை செய்யும் மாருதி சுஸுகியில் இருந்து கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 60,272 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையை விட இது 9% அதிகமாகும். ஏனெனில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 47,467 மாருதி சுஸுகி கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும், 2024 ஜனவரி உடன் ஒப்பிட்டால், கடந்த மாதத்தில் 4% குறைவான எண்ணிக்கையிலேயே கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

ஏனென்றால், இந்த ஆண்டின் துவக்க மாதத்தில் 1 லட்சத்து 66,802 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது. கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக முதலிடத்தில் வேகன்ஆர் ஹேட்ச்பேக் கார் உள்ளது. ஒட்டுமொத்தமாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் வேகன்ஆர் ஆகும்.
அதாவது, கடந்த மாதத்தில் மொத்தம் 19,412 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத்தனை எண்ணிக்கையில் வேறெந்த காரும் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்படவில்லை. 16,889 வேகன்ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த 2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 15% அதிகமாகும். அதேபோல், 2024 ஜனவரி மாதத்திலும் 17,756 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்த்தால், கடந்த ஜனவரியை விட பிப்ரவரியில் 1,656 வேகன்ஆர் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த பிப்ரவரியில் இரண்டாவதாக அதிகம் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி காராக பலேனோ உள்ளது. மாருதி சுஸுகியின் கொஞ்சம் விலையுயர்ந்த ஹேட்ச்பேக் காரான பலேனோ கடந்த மாதத்தில் 17,517 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இது 6% குறைவாகும். அதேபோல், 2024 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையிலும் இது 11% குறைவாகும்.
3வது இடத்தில் டிசைர் என்கிற சப்-காம்பெக்ட் செடான் கார் 15,837 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2023 பிப்ரவரியிலும், கடந்த 2024 ஜனவரியிலும் இதனை காட்டிலும் அதிகமாக ஏறக்குறைய 16,700 மாருதி சுஸுகி டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இவ்வாறு டிசைர் கார்களின் விற்பனை தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து, 2024 டிசைர் காரை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் மாருதி சுஸுகி உள்ளது.

இருப்பினும், 2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்ட பின்னரே 2024 டிசைர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வரிசையில் 4வது இடத்தை மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 15,765 யூனிட்களின் விற்பனை உடன் பிடித்துள்ளது. 2023 பிப்ரவரியிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பிரெஸ்ஸா கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், 2024 ஜனவரியில் 15,303 பிரெஸ்ஸா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்து இருந்தது.
டாப்-5 லிஸ்ட்டில் கடைசி 5வது இடத்தில் நீண்ட மாத இடைவெளிக்கு பிறகு எர்டிகா பிடித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெறும் 6,472 எர்டிகா கார்களை மட்டுமே மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் சுமார் 140% அதிகமாக 15,519 எர்டிகா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் டாப்-5 எம்பிவி கார்களுள் ஒன்றாக எர்டிகா விளங்குகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2024 பிப்ரவரியில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 மாருதி சுஸுகி கார்கள் இவை ஆகும். இவற்றில் முதல் 3 இடங்களில் இருக்கும் பலேனோ மற்றும் டிசைர் மாடல்களின் விற்பனை சமீப காலமாக குறைந்து வருகிறது. ஆதலால், அவற்றை அப்டேட் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மாருதி சுஸுகி நிறுவனம் உள்ளது.


Click it and Unblock the Notifications









