இனி பென்ஸ், பிஎம்டபிள்யூ கார்கள் விற்பனையான மாதிரிதான்.. ரூ. 48லட்சத்திற்கு டொயோட்டா கார் விற்பனைக்கு அறிமுகம்
டொயோட்டா (Toyota) நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் கார் மாடல்களில் கேம்ரி (Camry)-யும் ஒன்றாகும். இதன் புதிய தலைமுறை வெர்ஷனையே டொயோட்டா தற்போது நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இன்றே அதன் அறிமுகம் அரங்கேறியது. ஒன்பதாம் தலைமுறை வெர்ஷன் கேம்ரியே இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. அறிமுகமாக ரூ. 48 லட்சம் இதற்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த ஆண்டின் இறுதியை சிறப்பிக்கும் விதமாக டொயோட்டா நிறுவனம் ஒன்பதாம் தலைமுறை கேம்ரி-யை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இது சொகுசு அம்சங்கள் நிறைந்த மற்றும் அதிக மைலேஜை வழங்கும் திறன் கொண்ட செடான் ரக கார் மாடல் ஆகும். இந்திய தொழிலதிபர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக கேம்ரி காட்சியளிக்கின்றது. சொகுசான டிராவல் அனுபவத்தை வழங்குவதிலும், அதிக ஆயுட் காலத்திற்கும் பெயர்போன கார் மாடலாக கேம்ரி உள்ளது.

இதுதவிர, ஆடி, பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ பிராண்டுகளின் சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வசதிகளைக் கொண்ட காராகவும் கேம்ரி காட்சியளிக்கின்றது. இதனால்தான் இந்த காருக்கு பெரும் பணக்காரர்களின் ஆதரவு மிகப் பெரிய அளவில் கிடைத்து வருகின்றது. இந்த ஆதரவை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே கூடுதல் அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்ட ஒன்பதாம் தலைமுறை கேம்ரி தற்போது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
டொயோட்டா நிறுவனம் இந்த புதிய தலைமுறை கேம்ரியை அதன் டிஎன்ஜிஏ-கே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே தயார் செய்திருக்கின்றது. ஷார்ப்பான முன் பக்கம், மெல்லிய இழை போன்ற லுக் கொண்ட எல்இடி ஹெட்லேம்ப், யு வடிவ பகல் நேரத்திற்கான மின் விளக்கு என ஒட்டுமொத்த வெளிப்புற தோற்றத்தில் மிகவும் அசத்தலான காராக கேம்ரி காட்சியளிக்கின்றது.
சிறப்பம்சங்களும் இந்த காரில் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 7 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், 12.3 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிக் கொண்டவை ஆகும்.
இதுதவிர, ஒன்பது ஸ்பீக்கர்களைக் கொண்ட ஜேபிஎல் சவுண்டு சிஸ்டம், 10 அங்குல ஹெட்ஸ்-அப் திரை, டிஜிட்டல் சாவி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது கவனிக்கத்தகுந்தது. இதுதவிர, பயணிகளின் வசதிக்காக பின் பக்கத்தில் ரெக்லைனிங் மற்றும் வெண்டிலேஷன் வசதிகள் கொண்ட இருக்கை வழங்கப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், 3 ஜோன்கள் கொண்ட ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் சன்ஷேட் உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல அம்சங்கள் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பிற்கான அம்சங்களையும் இந்த காரில் மிக தாராளமாக டொயோட்டா வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 9 ஏர் பேக்குகள், பார்க்ங் சென்சார், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, ரேடார் வசதிக் கொண்ட க்ரூஸ் கன்ட்ரோல், லேன் டிரேசிங் அசிஸ்ட், சிக்னல் அசிஸ்ட் மற்றும் ஆட்டோமேட்டிக் ஹை பீம் அம்சம் உள்ளிட்டவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எஞ்சினைப் பொருத்த வரை இந்த காரில் 2.5 லிட்டர் பெட்ரோல் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், தன்னுடைய ஐந்தாம் தலைமுறை ஹைபிரிட் தொழில்நுட்பத்தையும் இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இந்த இரண்டும் சேர்ந்து 230 எச்பி ஆற்றலை வெளியேற்றும். இ-சிவிடி கியர்பாக்ஸே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் வருகை ஸ்கோடா சூப்பர்ப் செடான் காருக்கு போட்டி அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதற்கு மட்டுமல்ல சொகுசு கார் பிராண்டுகளின் செடான் ரக கார்களுக்கும் இந்த வருகை தலைவலியை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கின்றது. புதிய கேம்ரி காருக்கு இந்திய பணக்காரர்கள் மத்தியில், குறிப்பாக, செடான் கார் விரும்பிகள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








