ராஜாவாக நீங்க மட்டும் தான் இருக்கனுமா? டெஸ்லாவுக்கு அதிர்ச்சி கொடுத்த டொயோட்டா!!
டெஸ்லா மாடல் ஒய் (Tesla Model Y), 2022ஆம் ஆண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார். ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டில் மாடல் ஒய் காரை விற்பனையில் டொயோட்டா கரோல்லா (Toyota Corolla) கார் முந்தி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
எதிர்காலத்தில் எலக்ட்ரிக் கார்களே அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் என்பது சமூக ஆர்வலர்கள் பலரது கருத்தாக உள்ளது. ஆனால், அத்தகைய எதிர்காலத்திற்குள் நாம் ஏற்கனவே நுழைய ஆரம்பித்துவிட்டோம் என மறைமுகமாக கூறும் விதமாக கடந்த 2022ஆம் ஆண்டில் உலகளவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட காராக டெஸ்லா மாடல் ஒய் என்ற எலக்ட்ரிக் கார் முதலிடத்தை பிடித்தது.

ஒரு வருடத்தில், மற்ற பெட்ரோல்/ டீசல் கார்களை காட்டிலும் ஒரு எலக்ட்ரிக் கார் அதிக மக்களால் வாங்கப்பட்டது இதுவே முதல்முறை என அப்போதே நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம். ஆனால், கடந்த 2023இல் மாடல் ஒய் எலக்ட்ரிக் காரை டொயோட்டா நிறுவனத்தின் கரோல்லா என்ற பிரபலமான ஜப்பானிய-ஸ்டைல் கார் முந்தியுள்ளது.
இதுகுறித்து தற்போது வெளியிடப்பட்டு உள்ள சேல்ஸ் விபரங்களின்படி பார்க்கும்போது, கடந்த 2023ஆம் ஆண்டில் உலகளவில் மொத்தம் 16.4 லட்ச கரோல்லா கார்களை டொயோட்டா விற்பனை செய்துள்ளது. ஆனால், ஜாடோ டைமானிக்ஸ் என்ற அமைப்பு டெஸ்லா மாடல் ஒய் கடந்த 2023ஆம் ஆண்டில் 12.3 லட்ச கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதான் கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட கார் எனவும் அறிவித்தது.

அதாவது, அந்த சமயத்தில் டொயோட்டா தனது கார்களின் விற்பனை எண்ணிக்கைகளை கணக்கிட்டு கொண்டு இருந்தது. இதனால், 2023இன் சிறந்த விற்பனை கார் பட்டம் டெஸ்லா மாடல் ஒய் எலக்ட்ரிக் காருக்கு வழங்கப்பட்டது. அதன்பின், தனது கரோல்லா கார்கள் 16.4 லட்ச யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் டொயோட்டா வெளியிட்டதை அடுத்து, கிரீடம் மாடல் ஒய் காரில் இருந்து அப்படியே கரோல்லா காருக்கு மாற்றப்பட்டுள்ளது.
டெஸ்லா மாடல் ஒய் ஆனது டெஸ்லாவின் சிறிய அளவிலான க்ராஸ்ஓவர் எஸ்யூவி கார் ஆகும். அளவில் சிறிய காராக இருப்பதால், பல்வேறு நாடுகளில் இந்த காரை குறைந்த விலையில் டெஸ்லா நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிகிறது. ஆனால் அதுவே, டொயோட்டா கரோல்லா கார்கள் செடான், ஹேட்ச்பேக், வேகன் மற்றும் கரோல்லா கிராஸ் என பல விதமான உடலமைப்புகளில் கிடைக்கின்றன.

ஜப்பானிய காராக இருப்பினும், டொயோட்டா கரோல்லா கார்களுக்கு அமெரிக்காவிலும் நல்ல வரவேற்பு உள்ளது. இத்தனைக்கும் டெஸ்லா ஓர் அமெரிக்க கார் நிறுவனமாகும். அப்படியிருந்தும், அந்த நாட்டில் டெஸ்லா கார்களுக்கு நேரெதிர் போட்டியாக டொயோட்டா கரோல்லா கார்கள் விளங்குகின்றன. அதேநேரம், டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார்கள் உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையான சீனாவில் அதிகம் விற்பனையாகுகின்றன.
பொதுவாக, சீனாவில் வெளிநாட்டு கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகாது. ஆனால், இந்த கருத்தை சில வருடங்களுக்கு முன்பே டெஸ்லா உடைத்துவிட்டது. இதன் காரணமாகவே, அமெரிக்காவுக்கு வெளியே முதல் தொழிற்சாலையை சீனாவில் டெஸ்லா நிறுவனம் நிறுவியது. டெஸ்லா மாடல் ஒய் மற்றும் டொயோட்டா கரோல்லா இந்த இரு கார்களும் உலகின் 3வது பெரிய ஆட்டோமொபைல் சந்தையான நமது இந்தியாவில் விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: விவாதத்திற்கு வேண்டுமாயின் சரியாக இருக்குமே தவிர்த்து, டெஸ்லா மாடல் ஒய் மற்றும் டொயோட்டா கரோல்லா கார்களை ஒப்பீடு செய்யவே கூடாது. ஏனெனில் ஏற்கனவே கூறியதுபோல், கரோல்லா கார்கள் பல்வேறு பாடி ஸ்டைல்களில் விற்பனை செய்யப்படுகின்றன. அப்படியென்றால், மாடல் ஒய் கார் உடன் அதன் செடான் வெர்சனான டெஸ்லா மாடல் 3 காரின் விற்பனை எண்ணிக்கையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications









