டொயோட்டா களமிறக்கும் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! சிங்கிள் சார்ஜில் சென்னைல இருந்து கோவை போயிரலாம்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று மாருதி சுஸுகி (Maruti Suzuki). இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனமாக இருந்தாலும் கூட, இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை (Electric Car) கூட மாருதி சுஸுகி விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. ஆனால் இந்த குறை இன்னும் 1 வருட காலத்தில் நிவர்த்தியாகவுள்ளது.
ஆம், மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அது மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX) ஆகும். இது எலெக்ட்ரிக் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. இதை தொடர்ந்து இந்த காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார் ஒன்றை டொயோட்டா (Toyota) நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

இதுதான் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த கூட்டணியின் மூலம் ஏற்கனவே நிறைய கார்கள் இந்திய சந்தையில் விற்பனையில் உள்ளன.
டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza) மற்றும் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) போன்ற கார்களை இதற்கு உதாரணமாக கூற முடியும். இவை முறையே மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார்களின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்கள் ஆகும்.

இதே பாணியில்தான் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனையும் தனது முதல் எலெக்ட்ரிக் காராக டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த எலெக்ட்ரிக் கார் 2025ம் ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
60 kWh மற்றும் 48 kWh என மொத்தம் 2 பேட்டரி ஆப்ஷன்களில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரலாம். இதில், 60 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் சுமார் 550 கிலோ மீட்டர்களாக இருக்கும் எனவும், 48 kWh பேட்டரி ஆப்ஷனின் ரேஞ்ச் சுமார் 400 கிலோ மீட்டர்கள் என்ற அளவில் இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொயோட்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை அனேகமாக வெறும் 20 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் நடப்பு 2024ம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் ஹூண்டாய் க்ரெட்டா இவி (Hyundai Creta EV) உள்ளிட்ட எலெக்ட்ரிக் கார்களுடன் டொயோட்டா நிறுவனத்தின் இந்த எலெக்ட்ரிக் கார் போட்டியிடும். அத்துடன் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.


Click it and Unblock the Notifications








