டொயோட்டா உருவாக்கும் 2 கோடி ரூபாய் காரில் பிரச்சனை!! இவ்வளவு பணம் கொடுத்து வாங்கிட்டு, இதையும் பண்ணனுமா...
டொயோட்டா (Toyota) நிறுவனம் உலகளவில் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. 2021ஆம் ஆண்டில் இருந்து உருவாக்கப்பட்ட சில குறிப்பிட்ட கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பிரச்சனையை டொயோட்டா கண்டறிந்துள்ளது. அந்த கார்கள் அனைத்தையும் டீலர்ஷிப் ஷோரூமுக்கு திரும்ப அழைத்து, சரிச்செய்து கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் டொயோட்டா உள்ளது.
ஏனெனில், இந்த பிரச்சனையை சரிச்செய்யவில்லை எனில் விபத்துகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. ஆதலால், டொயோட்டா பிரச்சனையில் சிக்கியுள்ளது என சொல்வதை காட்டிலும், டொயோட்டா முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். அமெரிக்காவில் சுமார் 2 லட்சத்து 80,000 பிக்-அப் டிரக்குகள் மற்றும் எஸ்யூவி கார்களை டொயோட்டா திரும்ப அழைக்கிறது.

2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உற்பத்தி செய்யப்பட்ட டொயோட்டா துண்ட்ரா பிக்-அப் டிரக்குகளையும், லெக்ஸஸ் எல்.எக்ஸ்600 எஸ்யூவி கார்களையும் அமெரிக்காவில் டொயோட்டா திரும்ப அழைக்கிறது. அதேபோல், கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து இப்போதுவரையில் உற்பத்தி செய்யப்பட்ட டொயோட்டா செக்வோயா எஸ்யூவி கார்களும் அந்த நாட்டில் திரும்ப அழைக்கப்படுகின்றன.
2021ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட எந்த காரையும் அமெரிக்காவில் டொயோட்டா திரும்ப அழைக்கவில்லை. ஆனால், இந்தியாவில் 2021 பிப்ரவரி 12ஆம் தேதியில் இருந்து 2023 பிப்ரவரி 1ஆம் தேதி வரையில், இந்த 2 வருட காலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர் எல்சி300 என்ற லக்சரி எஸ்யூவி கார்களை டொயோட்டா திரும்ப அழைக்கிறது. அதாவது, இந்த காலக்கட்டத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் வாங்கப்பட்ட லேண்ட் க்ரூஸர் கார்கள் திரும்ப அழைக்கப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள டொயோட்டா தொழிற்சாலையில் லேண்ட் க்ரூஸர் கார்கள் உருவாக்கப்படுவது இல்லை. முற்றிலுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. 2021 பிப்ரவரி 12 - 2023 பிப்ரவரி 1 வரையிலான காலக்கட்டத்தில் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார்கள் இந்தியாவில் இப்போதும் கூட சில டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கலாம்.
ஆதலால், இந்தியாவில் லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரை வைத்திருப்போர் தங்களது கார் எப்போது உருவாக்கப்பட்டது என்பதை முதலில் பார்க்கவும். சம்பந்தப்பட்ட எல்சி300 கார் உரிமையாளர்களை டொயோட்டா டீலர்ஷிப் அதிகாரிகள் தொடர்புக் கொள்வர். ஆனால், இந்தியாவில் பெரியதாக பிரச்சனை இல்லை. ஏனெனில், இந்தியாவில் லேண்ட் க்ரூஸர் கார்கள் அதிகளவில் விற்பனையாகுவது இல்லை.

மேலே குறிப்பிட்ட காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்டு, இந்தியாவில் மொத்தமாகவே வெறும் 269 லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார்கள் மட்டுமே இப்போதுவரையில் விற்கப்பட்டுள்ளன. ஆதலால், அவை மட்டுமே பழுதுப்பார்ப்புக்காக திரும்ப அழைக்கப்படுகின்றன. இதுகுறித்து டொயோட்டா சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திரும்ப அழைக்கப்படும் எல்சி300 கார்களில் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனின் என்ஜின் கண்ட்ரோல் யூனிட் அப்டேட் செய்யப்பட உள்ளது.
இந்த பழுதுப் பார்ப்பு பணிகளை இலவசமாக டொயோட்டா செய்துக் கொடுக்கும். லேண்ட் க்ரூஸர் எல்சி300 காரில் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. அமெரிக்காவில், குறிப்பிட்ட ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்ட கார்களில் கியரை நியூட்ரலுக்கு கொண்டுவந்தாலும், அடுத்த கொஞ்ச நேரத்திற்கு என்ஜினில் இருந்து சிறிது ஆற்றல் காருக்கு செல்கிறது. இதன் மூலமாக கார் முன்னோக்கி குறைவான வேகத்தில் செல்லும் என்பதால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவிலும் இதே காரணத்திற்காகவே விற்பனை செய்யப்பட்ட லேண்ட் க்ரூஸர் எல்சி300 கார்களை டொயோட்டா நிறுவனம் திரும்ப அழைக்கிறது என நினைக்கிறோம். அப்படியென்றால், அமெரிக்கா, இந்தியாவை போல் வேறு சில நாடுகளிலும் டொயோட்டா கார்கள் பழுதுப்பார்ப்புக்கு அழைக்கப்படலாம். ஆதலால், நிச்சயமாக இது டொயோட்டாவுக்கு பெரிய வேலையாக இருக்க போகிறது.


Click it and Unblock the Notifications









