டொயோட்டா இத்தனை நாள் அடக்கி வாசிச்சதே இதுக்கு தானா? தீபாவளியை டார்க்கெட் செய்து புது, புது கார்கள்!!
டொயோட்டா (Toyota) நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு புது, புது ஸ்பெஷல் எடிசன் கார்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக, டொயோட்டாவின் சிக்னெச்சர் எடிசன் கார்கள் இணையத்தில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த வரிசையில் டொயோட்டா அதன் மற்றொரு காரிலும் ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. எந்த டொயோட்டா காரில் இந்த ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், இந்த புதிய காரின் சிறப்பம்சங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று டொயோட்டா ஆகும். ஒவ்வொரு மாதமும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது. சமீப காலமாக, டொயோட்டாவில் அறிமுகம் செய்யப்படும் பெரும்பாலான கார்கள் மாருதி சுஸுகி கார்களின் அடிப்படையில் ஆனவைகளாக உள்ளன.

டொயோட்டா க்ளான்ஸா, டைசர் மற்றும் ஹைரைடர் உள்ளிட்டவை எல்லாம் மாருதி சுஸுகியின் பலேனோ, ஃப்ரான்க்ஸ் மற்றும் பிரெஸ்ஸா காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை ஆகும். அந்த வரிசையில், பிரபலமான மாருதி சுஸுகி எர்டிகா எம்பிவி காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதே ரூமியன் ஆகும்.
இந்த ரூமியன் காரில் தான் தற்போது புதியதாக ஃபெஸ்டீவ் எடிசன் (Festive Edition) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டொயோட்டா நிறுவனம் அதன் க்ளான்ஸா, டைசர் மற்றும் ஹைரைடர் கார்களில் சமீபத்தில் ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்தது. ஸ்பெஷல் எடிசனின் மூலம் மேற்கூறப்பட்ட டொயோட்டா கார்களில் விரிவான ஆக்ஸஸரீ பேக்கேஜ்ஜை பெற முடிகிறது.
அதேபோன்று, டொயோட்டா ரூமியன் ஸ்பெஷல் எடிசன் காரிலும் முழுமையாக அனைத்து ஆக்ஸஸரீகளையும் பெறலாம். இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், ரூமியன் காருக்கு டொயோட்டா ஜென்யூன் என்கிற பெயரில் ஆக்ஸஸரீஸ் பேக்கேஜ் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்பு, இந்த பேக்கேஜ்ஜை பெறுவதற்கு ரூ.20,608 செலுத்த வேண்டியதாக இருந்தது.
ஆனால், புதிய ரூமியன் ஃபெஸ்டீவ் எடிசனின் மூலம் அந்த ஆக்ஸஸரீகளை எந்தவொரு கூடுதல் தொகையும் இன்றி பெறலாம். இந்த டொயோட்டா ஜென்யூன் ஆக்ஸஸரீகளில் மட் ஃப்ளேப்ஸ், கார்பெட் மேட்கள், க்ரோம் டோர் விசர் மற்றும் ரூஃப் எட்ஜ் ஸ்பாய்லர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
காருக்கு வெளியே டெயில்கேட், பின்பக்க பம்பர், ஹெட்லேம்ப், நம்பர் பிளேட் மற்றும் பாடி சைடு மோல்டிங் உள்ளிட்ட பகுதிகளில் கார்னிஷை டொயோட்டா ஜென்யூன் ஆக்ஸஸரீஸ் மூலமாக பெறலாம். டொயோட்டா ரூமியன் ஃபெஸ்டீவ் எடிசனில் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறலாம்.
சிஎன்ஜி ஆப்ஷனிலும் டொயோட்டா ரூமியன் விற்பனை செய்யப்படுகிறது. டொயோட்டாவின் விலை குறைவான எம்பிவி காராக விளங்கும் ரூமியனின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10.44 லட்சத்தில் இருந்து ரூ.13.73 லட்சம் வரையில் உள்ளன. எஸ், ஜி மற்றும் வி என 3 விதமான வேரியண்ட்களில் ரூமியன் விற்பனை செய்யப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வழக்கமான ரூமியன் காருக்கும், புதிய ரூமியம் ஃபெஸ்டீவ் எடிசன் காருக்கும் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. அனைத்து ஆக்ஸஸரீகளும் பொருத்தப்படுவதால், ரூமியன் ஃபெஸ்டீவ் எடிசன் காஸ்டீலீயானதாக காட்சியளிக்கிறது. ரூமியன் காரை முன்னரும் இவ்வாறான தோற்றத்தில் பெற முடிந்தது. தற்போது டொயோட்டா ஜென்யூன் ஆக்ஸஸரீகள் அனைத்தும் தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு இலவசமாக வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications








