மாதம் 30 ஆயிரம் கார்களை விற்றுவந்த டொயோட்டா... இந்தியாவில் இப்படி ஆகும்னு எதிர்பார்த்திருக்காது!!
டொயோட்டா (Toyota), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று என்பது நம் எல்லாருக்குமே தெரியும். ஒவ்வொரு மாதத்திலும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் கார்களை அசால்ட்டாக விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில மாதங்களாக டொயோட்டா கார்கள் விற்பனை எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனை வெளிகாட்டும் வகையில் நடந்து முடிந்த கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார்கள் குறித்த எண்ணிக்கைகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் மாருதி சுஸுகி உடன் டொயோட்டா கூட்டணியில் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இதன் காரணமாகவே, மாருதி சுஸுகியில் விற்பனை செய்யப்படும் நிறைய கார்களை அடிப்படையாக கொண்டு டொயோட்டா தனது கார்களை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. இந்த பாணியை கடந்த சில வருடங்களாகவே டொயோட்டா பின்பற்றி வருகிறது.

இந்த யுக்தி டொயோட்டாவுக்கு உண்மையில் பலனை கொடுத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நடந்து முடிந்த கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 23,802 கார்களை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2023ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் மாதத்தில் 22,168 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்த்தால், இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,634 அதிகரித்துள்ளது.
அதாவது, கடந்த ஆண்டு செப்டம்பரை விட இந்த ஆண்டு செப்டம்பரில் 1,634 கார்களை டொயோட்டா அதிகமாக விற்பனை செய்துள்ளது. இது ஒருபுறம் டொயோட்டாவுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், மறுப்பக்கம் பெரிய கவலையை அளிக்கும். ஏனெனில், கடந்த 5 மாதங்களிலேயே கடந்த செப்டம்பர் மாதத்தில்தான் இந்தியாவில் டொயோட்டா கார்களின் விற்பனை குறைந்துள்ளது. இந்த ஆண்டு ஜூலையில் 29,536 கார்களையும், ஆகஸ்ட்டில் 28,589 கார்களையும் டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

கடந்த செப்டம்பர் மாதத்திலும் வழக்கம்போல் டொயோட்டாவில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்பட்ட காராக முதலிடத்தில் இன்னோவா உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 8,052 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு செப்டம்பரில் 8,900 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இன்னும் அதிகமாக 9,687 இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இன்னோவா கார்கள் ஹைகிராஸ் மற்றும் கிரிஸ்ட்டா என 2 விதமான மாடல்களாக விற்பனை செய்யப்படுகின்றன. இதில், இன்னோவா ஹைகிராஸ் கார்கள் கடந்த மாதத்தில் 4,606 கார்களும், 3,446 இன்னோவா கிரிஸ்ட்டா கார்களும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. டொயோட்டா இன்னோவாவிற்கு அடுத்து இந்த லிஸ்ட்டில் 2வது இடத்தில் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் உள்ளது.

கடந்த மாதத்தில் 5,385 ஹைரைடர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. செப்டம்பரில் 3,804 ஹைரைடர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 3வது இடத்தில் டொயோட்டா கிளான்ஸா என்கிற ஹேட்ச்பேக் கார் உள்ளது. கடந்த செப்டம்பரில் 3,246 கிளான்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2023 செப்டம்பரில் 4,727 கிளான்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
4வது மற்றும் 5வது இடங்களில் ஃபார்ச்சூனர் மற்றும் டைசர் கார்கள் உள்ளன. இவை இரண்டும் கடந்த மாதத்தில் முறையே 2,473 மற்றும் 2,278 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஃபார்ச்சூனர் கார்கள் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை. இவற்றிற்கு அடுத்து 6வது இடத்தில் 1,968 யூனிட்கள் விற்பனை உடன் ரூமியன் உள்ளது. இவை இல்லாமல், 186 ஹைலக்ஸ், 127 காம்ரி மற்றும் 87 வெல்ஃபையர் கார்களையும் கடந்த செப்டம்பரில் டொயோட்டா விற்பனை செய்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2 மாதங்களாக டொயோட்டாவின் விற்பனை எண்ணிக்கை கிட்டத்தட்ட 30 ஆயிரமாக பதிவாகி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் 23,802 ஆக குறைந்திருப்பது டொயோட்டாவுக்கு சற்று அதிர்ச்சியாக இருக்கும். இருப்பினும், அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார்கள் விற்பனை அதிகரிப்பு டொயோட்டாவுக்கு சற்று ஆறுதலை வழங்கும். தீபாவளியை முன்னிட்டு ஸ்பெஷல் எடிசன் கார்களை அறிமுகம் செய்துள்ளதால், டொயோட்டா கார்கள் விற்பனை எண்ணிக்கை வரும் மாதங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









