லிட்டருக்கு 28 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை இந்தியர்கள் மறந்துட்டாங்களா! சேல்ஸ் ரிப்போர்ட் என்ன சொல்லுது!
டொயோட்டா (Toyota) கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 18,700 யூனிட்டுகள் கார்களை இந்தியாவில் மட்டும் விற்பனைச் செய்திருக்கின்றது. நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக கிளான்ஸா (Glanza) இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இன்னோவா ஹைகிராஸ் (Innova HyCross) இருக்கின்றது.
மூன்றாவது இடத்திலேயே மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டொயோட்டா (Toyota) கூட்டணியில் உருவாக்கப்பட்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Urban Cruiser HyRyder) கார் மாடல் இருக்கின்றது. இந்த கார் மாடலின் விற்பனை விபரம், சிறப்பம்சங்கள் மற்றும் மைலேஜ் திறன் பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆண்டு -டூ- ஆண்டு ஒப்பிடுகையில் 24.31 சதவீதம் விற்பனை வளர்ச்சியை பெற்றிருக்கின்றது. அதாவது, 2024 ஏப்ரல் மாதத்தில் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் கார் மாடல் மட்டும் 3,252 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றது. இதே கார் மாடல் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2,616 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால் இந்த விற்பனை மிகப் பெரிய சரிவு ஆகும். 45 சதவீத சரிவையே அது மார்ச்சுடன் ஒப்பிடுகையில் சந்தித்து இருக்கின்றது. மார்ச் மாதத்தில் மட்டும் 5,965 யூனிட்டுகள் வரை அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனையாகின. நிதியாண்டின் இறுதியை முன்னிட்டு டொயோட்டா அனைத்து கார்களுக்கும் மிகப் பெரிய சலுகையை வழங்கயது.
இதன் விளைவாகவே மார்ச் மாதத்தில் மிகப் பெரிய வளர்ச்சியை அந்த கார் மாடல் பெற்றது. மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இணைவில் டொயோட்டாவிற்காக தயார் செய்யப்பட்ட இந்த கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஆண்டு -டூ- ஆண்டு விற்பனை புள்ளி விபரம் அமைந்திருக்கின்றது.
இந்த கார் மாடலை விரைவில் டொயோட்டா நிறுவனம் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற காராக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி இந்த கார் மாடல் 5 சீட்டர் வாகனமாகவே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதில் 7 சீட்டர் வெர்ஷனே அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது அர்பன் க்ரூஸர் ஹைரைடரின் விற்பனையை இன்னும் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இப்போதைய நிலவரப்படி டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun), கியா செல்டோஸ் (Kia Seltos), மாருதி கிராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara) உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக விற்பனையில் இருக்கின்றது.
இதன் 7 சீட்டர் வெர்ஷன் விற்பனைக்கு வரும்பட்சத்தில் அது எம்ஜி ஹெக்டர் பிளஸ் (MG Hector Plus), டாடா சஃபாரி (Tata Safari), சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் (Citroen C3 Aircross) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாளனாக மாறும்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய ஆப்ஷன்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் ரூ. 11.14 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், சிஎன்ஜி ரூ. 13.71 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இத்துடன், பெட்ரோல்-ஹைபிரிட் ஆப்ஷனும் இந்த கார் மாடலில் வழங்கப்படுகின்றது.
அது ரூ. 16.66 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். இதன் சிஎன்ஜி ஆப்ஷன் ஒரு கிலோவிற்கு 26.6 கிமீ மைலேஜையும், வழக்கமான பெட்ரோல் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 19.39 கிமீ முதல் 21.12 கிமீ வரையிலம், ஹைபிரிட் ஆப்ஷன் ஒரு லிட்டருக்கு 27.97 கிமீ வரையிலும் மைலேஜ் தரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அதிக மைலேஜை வழங்கக் கூடிய காராக இருக்கின்ற காரணத்தினாலேயே டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. வரும் நாட்களில் இதற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு இன்னும் பலமடங்கு அதிகரிக்கக் கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








