ஏப்ரல் 3ஆம் தேதி புதிய காரை அறிமுகம் செய்கிறது டொயோட்டா... இது அதுல! எங்கேயோ பார்த்த மாதிரியே தெரியுதா?
இந்தியாவில் புதிய காரை அறிமுகம் செய்ய இருப்பதை டொயோட்டா (Toyota) நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. நிறுவனம் அர்பன் க்ரூஸர் டெய்ஸர் (Urban Cruiser Taisor) எனும் கார் மாடலையே இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகையை நாளையே தற்போது டொயோட்டா உறுதிப்படுத்தி உள்ளது.
ஏப்ரல் 3 ஆம் தேதி அன்றே இந்த காரை அதிகாரப்பூர்வமாக டொயோட்டா விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த காரை எங்கேயோ பார்த்ததைப் போல் தெரிகின்றதா.. இவ்வாறு தோன்றுவதில் எந்த தவறும் இல்லை. டெய்ஸர் இந்த பெயர் வேண்டுமானால் நமக்கு புதியதாக இருக்கலாம்.

ஆனால், இந்த கார் மாடல் ஏற்கனவே நமக்கு பழக்கப்பட்டதுதான். மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் எனும் கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பது நம்மில் பலருக்கு தெரிந்ததே. இந்த கார் மாடலின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷனே அர்பன் க்ரூஸர் டெய்ஸர் ஆகும்.
ப்ரான்க்ஸ் கார் மாடலில் இருந்து லேசாக மாறுபட்டுக் காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக கணிசமான மாற்றங்களைக் கொண்டு இந்த காரை டொயோட்டா விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. டொயோட்டா - மாருதி சுஸுகி கூட்டணியின் கீழ் சில கார் மாடல்களை பகிர்ந்துக் கொண்டு வருகின்றன.
அந்தவகையில், டொயோட்டாவின் புகழ்பெற்ற கார் மாடலான இன்னோவா க்ரிஸ்டாவை மாருதி சுஸுகி இன்விக்டோ என்கிற பெயரிலும், மாருதி சுஸுகியின் பலினோ கார் மாடலை டொயோட்டா கிளான்ஸா என்கிற பெயரிலும் ரீ-பேட்ஜ் செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல தயாரிப்புகளை இரு நிறுவனங்களுக்கும் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையிலேயே புதிய ஒன்றாக மாருதி சுஸுகியின் ஃப்ரான்க்ஸ் கார் மாடலை ரீ-பேட்ஜ் செய்து தன்னுடைய தயாரிப்பின் வரிசையில் இணைத்திருக்கின்றது டொயோட்டா. மாருதி சுஸுகி சென்ற ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023-லேயே ஃப்ரான்க்ஸ் கார் மாடலை முதல் முறையாக காட்சிப்படுத்தியது.
அன்றைய தினமே புக்கிங் பணிகளையும் இந்தியாவில் தொடங்கியது. தற்போது நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடலாக அது மாறி இருக்கின்றது. இத்தகைய ஓர் கார் மாடலையே கூட்டணியின் காரணமாக டொயோட்டாவுடன் பகிர்ந்துக் கொள்ள முன் வந்திருக்கின்றது மாருதி சுஸுகி. டொயோட்டா மற்றும் அர்பன் க்ரூஸர் டெய்ஸர் என்கிற பேட்ஜுடன் சேர்த்து இன்னும் பல மாற்றங்களை இந்த கார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தவகையில், காரின் கிரில், லைட் செட்-அப், பம்பர் என பல அம்சங்கள் புதியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, பனி மின் விளக்கைச் சுற்றியிருக்கும் பிளாஸ்டிக் மற்றும் இன்னும் பல பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக்குகளில் மாற்றப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டொயோட்டா ரூமியன் காரில் உள்ளதைப் போலவே அந்த அம்சங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல், காரின் உட்பக்கத்திலும் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. டேஷ்போர்டு, இன்செர்ட் பேனல்கள், இருக்கைகள் ஆகியவற்றிலேயே அந்த மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளையில், தொழில்நுட்பங்கள் மற்ற சில விஷயங்களில் இந்த கார் ஃப்ரான்க்ஸைப் போலவே இருக்கும் என கூறப்படுகின்றது.
அந்தவகையில், ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி கேமிரா, 6 ஸ்பீக்கர்கள் கொண்ட சவுண்ட் சிஸ்டம், எம்ஐடி, ஒயர்லெஸ் சார்ஜர், ஓடிஏ அப்டேட், 9 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சம் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், பாதுகாப்பு அம்சங்களையும் மிக அதிகளவில் கொண்ட கார் மாடலாக ஃப்ரான்க்ஸ் இருக்கின்றது.
அந்தவகையில், ஆறு ஏர் பேக்குகள் டெய்ஸரில் எதிர்பார்க்கப்படுகின்றது. எஞ்சினிலும் ஃப்ரான்க்ஸ் மற்றும் டெய்ஸர் ஆகிய இரண்டும் ஒரே மாதிரியாக இருக்கும். 1.2லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் மோட்டார் மற்றும் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனே டெய்ஸரில் கிடைக்க இருக்கின்றது. இந்த மோட்டார்கள் 20.1கிமீ தொடங்கி 21.79கிமீ வரையில் தரக்கூடியவை ஆகும். இத்தகைய சிறப்பு வசதிகள் தாங்கிய காரின் அறிமுக நாளையே தற்போது டொயோட்டா உறுதி செய்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டொயோட்டாவின் மாருதி ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட தயாரிப்புகளுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு மிக சிறந்த சான்றாக டொயோட்டா கிளான்ஸா இருக்கின்றது. இதைப்போலவே இரு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட ஹைரைடர் கார் மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








