குடும்பத்தோட போற மாதிரியான காருக்கு புக்கிங் தொடங்கிருச்சு.. என்ன இத்தன பேரு இந்த காருல போகலாமா!..
இந்தியர்களின் ஃபேவரிட் கார் பிராண்டாக மாறி இருக்கும் தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia), குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற அதிக இருக்கைககளைக் கொண்ட கார் மாடல் ஒன்றை இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரவிருப்பதாக சமீப சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக கியா கார் விற்பனையாளர்கள் அந்த அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடலுக்கான புக்கிங் பணிகளை தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன கார் மாடல்?, அதன் சிறப்புகள் என்ன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
கியா நிறுவனம் கார்னிவல் (Kia Carnival) கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனையே இந்தியாவில் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த கார் மாடல் இந்தியாவிற்கு புதிது அல்ல என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், இந்த கார் மாடல் இப்போது விற்பனையில் இல்லை.

Source: autocarindia குறிப்பிட்ட சில காரணங்களுக்காக இந்த கார் மாடலை விற்பனையில் இருந்து கியா அகற்றியது. இந்த நிலையிலேயே இதன் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் அது களமிறங்கியது. இதன் அடிப்படையிலேயே தற்போது புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. இதன் அறிமுகம் வருகின்ற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி அன்றே அரங்கேற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில் இப்போது தொடங்கி இருப்பது அதிகாரப்பூர்வ புக்கிங் அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. முன்னதாக கூறியதைப் போல டீலர்கள் அளவிலேயே புதிய தலைமுறை கார்னிவல் காருக்கான புக்கிங் பணிகள் தொடங்கி இருக்கின்றன. கியா கார்னிவல் ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் ஆகும்.
இந்த காரை வெளிநாட்டில் இருந்தே இறக்குமதி செய்து விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, கியா. அதேவேளையில், இதற்கு கிடைக்கும் டிமாண்டைப் பொருத்து நிறுவனம் அதன் உற்பத்தி பணிகளை உள் நாட்டிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் புதிய தலைமுறை வெர்ஷன் என்பதால் மிகப் பெரிய மாற்றங்களை தன்னுள் தாங்கி இருக்கின்றது.
உருவம், சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்பம் என அனைத்திலும் மிகப் பெரிய மாற்றத்தை இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. 12.3 அங்குல திரை, முன் மற்றும் பின் பக்கத்தில் கேமிரா, ஹெட்-அப் திரை, டிஜிட்டல் ரியர் வியூ கேமிரா, டிஜிட்டல் சாவி, ஆம்பியன்ட் லைட் செட்-அப் ஆகிய சிறப்பம்சங்களை இந்த காரில் புதிதாக காண முடியும்.
மேலும், இதுபோன்று இன்னும் பல புதிய வகை தொழில்நுட்பங்களை இந்த காரில் காண முடியும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதேபோல், எஞ்சின் விஷயத்தில் இந்தியாவிற்கான கார்னிவல் சொகுசு எம்பிவி-யில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினே எதிர்பார்க்கப்படுகின்றது. இதே மோட்டாரே முன்னதாக விற்பனையில் இருந்த கார்னிவலிலும் பயன்படுத்தப்பட்டு இருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது.
அதேவேளையில், உலக சந்தையில் விற்பனையில் உள்ள கார்னிவல் கார் மாடலில் ஹைபிரிட் வசதிக் கொண்ட 1.6 லிட்டர் டர்போ பெட்ரோல் மோட்டார் மற்றும் 3.5 லிட்டர் வி6 பெட்ரோல் மோட்டார் ஆகிய ஆப்ஷன்களுடனேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த கார் இந்தியாவில் ரூ. 50 லட்சம் என்கிற விலையிலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் லக்சூரி அம்சங்கள் நிறைந்த டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Velfire), லெக்சஸ் எல்எம் 350எச் (Lexus LM 350h) போன்ற கார் மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய கியா கார்னிவல் 7 மற்றும் 9 ஆகிய இரண்டு விதமான இருக்கைகள் தேர்விலேயே விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே ஒன்றல்ல, இரண்டு குடும்பங்கள் தாராளமாக பயணிக்கக் கூடிய காராக கியா கார்னிவல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கியா நிறுவனம் இந்தியாவில் கார்னிவல் கார் மாடலுடன் சேர்த்து மற்றுமொரு புதுமுக கார் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இவி9 எலெக்ட்ரிக் கார் மாடலையே அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இது ஓர் முழு அளவு எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். மேலும், இந்த கார் மாடல் பல்வேறு விருதுகளை வென்ற கார் மாடல் என்பதும் கவனிக்கத்தகுந்தது. இத்தகைய ஓர் எலெக்ட்ரிக் காரையே இந்தியாவில் கார்னிவலுடன் சேர்த்து கியா விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முந்தைய தலைமுறை கார்னிவல் கார் மாடலுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிக சிறப்பான விற்பனைக்கு கிடைத்தது. இதேபோல், புதிய தலைமுறை கார்னிவலுக்கும் இந்திய பணக்காரர்கள் மத்தியில் நல்ல டிமாண்ட் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதன் வருகைக்கு பின்னரே இதற்கு என்னமாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பது தெரிய வரும்.


Click it and Unblock the Notifications








