எல்லாருமே இந்த மாதிரியான கார்களை வாங்க தான் ஆசைப்படுறாங்க... எதிர்காலத்தில் ரோடு ஃபுல்லா இந்த கார்கள் தான்!!
காலம் செல்ல செல்ல கார்களின் அளவும் பெரியதாகி வருகிறது. 1990களில் விற்பனையில் இருந்து மாருதி 800 போன்ற காரை இன்றைய கால மாடர்ன் கார்களுடன் ஒப்பீடு செய்து பார்த்தால், பெரிய வித்தியாசம் இருக்கும். ஏனெனில், அந்த சமயங்களில் 4 அல்லது 5 பேர் பயணிக்கும் கார்களை உருவாக்கினர். ஆனால், இப்போது 7 சீட்டரில் இருந்து 9 சீட்டர் வரையில் உள்ளது. குறிப்பாக, 7 சீட்டர் கார்களை குறைவான விலையில் வாங்க முடிகிறது. இதனால், 7-சீட்டர் கார்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதினால், மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள 7-சீட்டர் கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
புதியது, புதியதாக 7-சீட்டர் கார்கள் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதேநேரம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் 7-சீட்டர் கார்களும் அப்டேட் செய்யப்பட உள்ளன. அந்த வகையில், இந்திய சந்தையில் அடுத்த 3 மாதங்களுள் மூன்று 7-சீட்டர் கார்கள் புதிய வெர்சனில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

கியா கார்னிவல் (Kia Carnival): லக்சரியான கொரியன் 7-சீட்டர் எம்பிவி கார். மிடில்-கிளாஸ் மக்களால் வாங்க முடியாத விலையை கொண்டது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கியா லக்சரி காரின் விற்பனை சமீப மாதங்களாக சுத்தமாக இல்லை. இதனால், கார்னிவலை அப்டேட் செய்யும் திட்டத்தில் கியா உள்ளது.
விலைக்கு ஏற்ப இந்த காரில் லக்சரியான கேபின் வழங்கப்படுகிறது. கேபினில் இருக்கும் மெட்டீரியல்கள் யாவும் உயர் தரத்திலானவை ஆகும். புதிய கார்னிவலில் இவற்றை எல்லாம் இன்னும் உயர் தரத்திலானதாக எதிர்பார்க்கலாம். வருகிற 2024 அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மேம்படுத்தப்பட்ட புதிய கார்னிவலின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.40 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.

ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar): இந்திய மார்க்கெட்டில் மிக பிரபலமான ஹூண்டாய் கிரெட்டாவின் 7-சீட்டர் வெர்சனாக அல்கஸார் விற்பனை செய்யப்படுகிறது. இதன் காரணமாகவே, இந்த 2024ஆம் ஆண்டு துவக்கத்தில் ஹூண்டாய் கிரெட்டா அப்டேட் செய்யப்பட்ட நிலையில், அதேபோல் விரைவில் அல்கஸாரை அப்டேட் செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய மேம்படுத்தப்பட்ட அல்கஸாரின் அறிமுகம் வருகிற செப்டம்பர் 12ஆம் தேதிக்கு ஒதுக்கிடப்பட்டு உள்ளது. காருக்குள் கேபினின் தோற்றம் கிட்டத்தட்ட கிரெட்டாவை போன்று இருக்கும். அதேநேரம், கூடுதலாக 3வது இருக்கை வரிசை வழங்கப்படுகிறது. புதிய அல்கஸார் கார் தோற்றத்திலும், தொழிற்நுட்ப அம்சங்களிலும் ஏற்றதாக இருக்கும்.

எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster): விற்பனையில் மேலே கண்ட கியா கார்னிவலுக்கு போட்டியாக இருக்கும் எம்ஜி கார். கார்னிவலை போன்று 7 இருக்கைகள் உடன் விற்பனை செய்யப்படுகிறது. க்ளோஸ்டரின் புதிய ஃபேஸ்லிஃப்ட் அப்டேட் வெர்சனை அறிமுகம் செய்ய எம்ஜி மோட்டார் திட்டமிட்டுள்ளது. புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை ஏற்கனவே இந்தியாவில் சிலமுறை சோதனை ஓட்டங்களின்போது பார்த்திருந்தோம்.
கடந்த 1 வருடத்தில் க்ளோஸ்டர் ஸ்னோஸ்டோர்ம் எடிசன் மற்றும் டெசர்ட்ஸ்டோர்ம் எடிசன் என 2 விதமான ஸ்பெஷல் எடிசன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் க்ளோஸ்டரில் மிக முக்கியமான அப்டேட் இனி தான் வர போகிறது. புதிய க்ளோஸ்டரில் லெவல்-2 அடாஸ் வசதிகள் வழங்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. அதேநேரம், காரின் தோற்றத்திலும் அப்டேட்கள் இருக்கும் என்றாலும், என்ஜினில் மாற்றம் இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பில் நாம் பார்த்துள்ளவை எல்லாமே சற்று அதிக விலை கொண்ட 7-சீட்டர் கார்கள் ஆகும். ஆனால், இந்திய மார்க்கெட்டில் குறைந்த விலையிலும் 7-சீட்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதை மறவாதீர்கள். மேலே குறிப்பிடப்பட்ட கார்கள் அவற்றின் விலைக்கேற்ப சிறப்பான தரத்தில் உருவாக்கப்படுகின்றன. இவற்றின் புதிய அப்டேட் வெர்சன்கள் இன்னும் மேம்பட்டதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









