தூரத்து சொந்தங்களைகூட சந்தோஷமாக கூட்டி போகலாம்.. அதிக இருக்கைகளுடன் விற்பனைக்கு வர இருக்கும் கார் மாடல்கள்!
இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குடும்பத்துடன் அல்லது நண்பர்களின் பட்டாளத்துடன் பயணிக்க ஏதுவான வாகனங்கள் அவை என்பதால் சந்தையில் அவற்றிற்கு எப்போதும் தனித்துவமான டிமாண்ட் நிலவிக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களின் அறிமுகமும் சமீப சில காலமாக அதிகளவில் அரங்கேறிக் கொண்டு இருக்கின்றன. வரும் நாட்களிலும் இந்தியாவின் அதிக இருக்கைகள் கார் பிரிவை அலங்கரிக்கும் விதமாக சில புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு வர உள்ளன.
அவற்றை பற்றியே தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். குறிப்பாக, அடுத்த மாதம் அல்லது அடுத்த மூன்று மாதங்களுக்குள் விற்பனைக்கு வர இருப்பதாக நம்பப்படும் குறிப்பிட்ட சில 5 மற்றும் 7 இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

பிஒய்டி இ-மேக்ஸ் 7 (BYD eMax 7): இது ஓர் எலெக்ட்ரிக் எம்பிவி ரக கார் மாடல் ஆகும். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார் மாடலே இ6. இதன் அப்டேட் வெர்ஷனே இந்த இ-மேக்ஸ் 7 ஆகும். இப்போது விற்பனையில் இருக்கும் இ6 கார் மாடலைக் காட்டிலும் அதிக சிறப்பம்சங்களைத் தாங்கியதாக இது விற்பனைக்கு வர இருக்கின்றது.
குறிப்பாக, அதிக இருக்கைகளைக் கொண்டதாக இது விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், 5 மற்றும் 7 இருக்கைகள் தேர்வுகள் இந்த காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர இன்னும் பல புதிய பிரீமியம் அம்சங்களையும் இந்த காரில் பிஒய்டி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்தவகையில், 12.8 அங்குல திருப்பும் வசதிக் கொண்ட தொடுதிரை, வயர்லெஸ் செல்போன் சார்ஜர், பெரிய பனோரமிக் சன்ரூஃப், 6 ஏர் பேக்குகள், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் லெவல் 2 வகை அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS)-ம் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த காருக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. பிஒய்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காரை வருகின்ற அக்டோபர் 8 ஆம் தேதி அன்றே அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
கியா கார்னிவல் மற்றும் இவி9 (Kia Carnival and EV9): இந்திய பணக்கார குடும்பஙக்ளின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வரும் கார் மாடலாக கார்னிவல் இருக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எம்பிவி ரக கார் மாடல் ஆகும்.
இதுவும் இந்தியாவிற்கு ஏற்கனவே பழக்கப்பட்ட கார் மாடல் ஆகும். ஆனால், இது தற்போது விற்பனையில் இல்லை. இந்த நிலையிலேயே இதன் புதிய தலைமுறை வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது, கியா நிறுவனம். இந்த புதிய தலைமுறை கார்னிவல் மிக மிக அதிக இருக்கைகளைக் கொண்டதாக தயார் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
உலக சந்தையில் அது 6, 7,8 மற்றும் 11 இருக்கைகள் தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தியாவில் 7, 8 மற்றும் 9 ஆகிய இருக்கைகள் தேர்வுகளிலேயே விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் ஒன்றாக பயணிக்கும் காராக கார்னிவல் இருக்கும் என தெரிகின்றது.
இதுமட்டுமில்லைங்க, ஆடம்பர அம்சங்கள் நிறைந்த ஓர் எம்பிவி ரக கார் மாடலாகவும் இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த கார் மாடலுடன் சேர்த்து கியா நிறுவனம் அதன் உலக புகழ்பெற்ற இவி9 கார் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது.
இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். உலக அளவில் பல்வேறு விருதுகளை பயன்பாடு, அழகு மற்றும் உறுதியான கட்டமைப்பு உள்ளிட்டவற்றிற்காக பெற்றிருக்கும் ஓர் கார் மாடலே இதுவாகும். இதன் அறிமுகம் அக்டோபர் 3ஆம் தேதி அரங்கேற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இன்றைய நாளிலேயே கார்னிவலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆகையால், அக்டோபர் 3ஆம் தேதிக்கும் இந்தியாவில் எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
ஜீப் மெரிடியன் ஃபேஸ்லிஃப்ட் (Jeep Meridian Facelift): இந்திய பணக்காரர்கள் பலரின் பிரியமான கார் மாடலாக ஜீப் மெரிடியன் உள்ளது. இந்த கார் மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே ஜீப் இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. மிகவும் பிரெஷ்ஷான லுக்கைக் கொண்டிருக்கும் ஓர் சொகுசு வாகனமாக இதனை ஜீப் தயார் செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது.
ஆனால், இதுபற்றிய உறுதியான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், முன், பக்கவாட்டு மற்றும் பின் பக்கங்கள் மிகவும் புதிய லுக்கைக் கொண்டிருக்கும் என்றும், அடாஸ் போன்ற அதி-நவீன அம்சங்களை இது தாங்கியிருக்கும் என்றும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துள்ளியமான அறிமுக நாள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. விரைவில் இதுபற்றிய விபரங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எம்ஜி குளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (MG Gloster Facelift): இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படும் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடலாக இது இருக்கின்றது. இந்த காரிலும் 7 பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த காரின் அறிமுக நாள் பற்றிய விபரமும் வெளியாகவில்லை. அடுத்த ஓரிரு மாதங்களில் அது விற்பனைக்கு வந்துவிடும். என எதிர்பார்க்கப்படுகின்றது. மற்ற ஃபேஸ்லிஃப்ட் கார் மாடல்களைப் போலவே இதுவும் புதிய லுக்கைக் கொண்டதாக இருக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக இருக்கைகளைக் கொண்ட கார் மாடல்களுக்கு வரவேற்பு அதிகம். இதனைக் கருத்தில் கொண்டே முன்னணி நிறுவனங்கள் 5 மற்றும் 7 இருக்கைள் கொண்ட காரை விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றன. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல்களைப் போலவே இன்னும் சில புதுமுக கார்களும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








