பெட்ரோல் கார்களை வாங்க போறீங்களா.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க அடுத்தடுத்துனு நிறைய மின்சார கார்கள் அறிமுகமாகபோது!
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) ஆன வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. விரைவில் பெட்ரோல், டீசல் வாகன விற்பனையையே மின்சார வாகன விற்பனை மிஞ்சுவிடும் என கூறும் அளவிற்கு அது அசூர வேகத்தில் வளர்ச்சி அடைந்துக் கொண்டு இருக்கின்றது.
இத்தகைய சூழல் இந்தியாவில் நிலவுவதனாலேயே டாடா போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன பிரிவை மையப்படுத்தி தங்களின் புதுமுக வாகனங்களை அதிகளவில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. டாடா மட்டுமல்ல மேலும் சில நிறுவனங்களும் இந்த பிரிவை மையப்படுத்தியே தங்களின் புதுமுக இ-வாகனங்களை களமிறக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

ஆகையால், இந்த ஆண்டில் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகவாதற்கான சூழல் உருவாகியுள்ளது. அவை எவை என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்தியாவில் நடப்பு 2024ஆம் ஆண்டில் அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படும் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் லிஸ்டையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.
டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக பஞ்ச் இருக்கின்றது. இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே டாடா நிறுவனம் பஞ்ச் காரின் மின்சார வெர்ஷனை சமீபத்தில் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது.
இதற்கு விலை ரூ. 11 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இப்போது புக்கிங்குகளை ஏற்கும் பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் இதனை டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. டாடாவின் பட்ஜெட் ஃப்ரெண்டி எலெக்ட்ரிக் கார் மாடல் இதுவாகும்.
மேலும், டாடா டிகோர் இவி மற்றும் நெக்ஸான் இவி இவை இரண்டிற்கும் இடையில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் காரில் 315 கிமீ தொடங்கி 421 கிமீ வரையில் நம்மால் பயணிக்க முடியும். டாடா மோட்டார்ஸ் இந்த காரை ஆல்ஃபா ட்ரிம்மில் வைத்தே தயாரித்து இருக்கின்றது.
மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX): மாருதி சுஸுகி நிறுவனத்தின்கீழ் விற்பனைக்கு வரும் முதல் மின்சார கார் மாடல் இவிஎக்ஸ் என கருதப்படுகின்றது. இந்த காரை நிறுவனம் ஏற்கனவே வெளியீடு செய்துவிட்டது. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் இந்த ஆண்டின் இறுதிக்குள் அரங்கேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஓர் முழு சார்ஜில் 550கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரும். இதற்காக இந்த காரில் 60kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
பிஒய்டி சீல் இவி (BYD Seal EV): சீன நிறுவனமான பிஒய்டி இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் மூன்றாவது எலெக்ட்ரிக் கார் மாடலே இதுவாகும். இது ஓர் செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த காரின் சோதனையோட்டத்தை ஏற்கனவே பிஒய்டி இந்தியாவில் தொடங்கிவிட்டது. இது ஓர் முழு சார்ஜில் 700கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளில் இந்த கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மஹிந்திரா எக்ஸ்யூவி 300 இவி (Mahindra XUV300 EV) மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி.இ8 (Mahindra XUV.e8): இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி400 இவி எனும் ஒற்றை எலெக்ட்ரிக் கார் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனையே சமீபத்தில் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
இந்த நிலையிலேயே தன்னுடை எலெக்ட்ரிக் கார் பிரிவிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி300 இவி மற்றும் எக்ஸ்யூவி.இ8 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த இரண்டும் அடுத்தடுத்து என சிறிய இடைவெளியில் இந்த ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த இரண்டில் எக்ஸ்யூவி 300இவி சற்று விலை குறைவான எலெக்ட்ரிக் காராகவும், எக்ஸ்யூவி.இ8 சற்று அதிக விலைக் கொண்டதாகவும் விற்பனைக்கு வர இருப்பதாகக் கூறப்படுகின்றது. ரேஞ்ஜிலும் விலைக்கேற்ப மிகப் பெரிய வித்தியாசத்தை இந்த இரண்டு கார்களும் கொண்டிருக்கும். ஒன்று 350 கிமீட்டருக்கும் குறைவான ரேஞ்ஜையும், மற்றொன்று 450 கிமீட்டருக்கும் அதிகமான ரேஞ்ஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டாடா ஹாரியர் இவி (Harrier EV), சஃபாரி இவி (Safari EV) மற்றும் கர்வ் இவி (Curvv): டாடா மோட்டார்ஸே ஏற்கனவே இந்திய மின்சார வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக இருக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அது மிகப் பெரிய பிளானை இவி விஷயத்தில் போட்டுக் கொண்டிருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே அந்நிறுவனம் அதன் புகழ்பெற்ற கார் மாடல்களான ஹாரியர், சஃபாரி ஆகியவற்றில் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது. இதுதவிர, கர்வ் எனும் புதுமுக மாடலையும் மின்சார ஆப்ஷனில் விற்பனைக்குக் களமிறக்க அது திட்டமிட்டுள்ளது. இந்த கர்வ் எலெக்ட்ரிக் வெர்ஷனில் மட்டுமின்றி ஐசிஇ ஆப்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையைத் தொடர்ந்தே முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இந்தியாவில் அதிக ஆர்வத்துடன் எலெக்ட்ரிக் கார்களைக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், இப்போது பெட்ரோல் வாகனங்கள் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போல மிகப் பரந்தளவில் மின்சார கார்கள் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








