புது, புது ஃபேமலி கார்ஸ் வரிசையா அறிமுகமாகுது!! மார்ச் வரை வெயிட் பண்ணுங்க... புதுசா ஒரு சீன எலக்ட்ரிக் காரும்
அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிட்டால், நம் இந்தியாவில் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும், உலகின் மிக பெரிய கார் சந்தையாக நம் நாடு உள்ளது. இதனாலேயே ஒவ்வொரு மாதத்திலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய கார்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. இந்த வகையில் இந்த 2024 மார்ச் மாதத்திலும் சில கார்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. அவற்றை இனி பார்க்கலாம்.
ஹூண்டாய் கிரெட்டா என் லைன் (Hyundai Creta N Line): இந்தியாவில் மிக பிரபலமான எஸ்யூவி கார், ஹூண்டாய் கிரெட்டா. இந்த கார் விரைவில் என் லைன் வெர்சனை பெற உள்ளது. மார்ச் 11ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள கிரெட்டா என் லைன் கார் ஆனது வழக்கமான கிரெட்டா காருடன் ஒப்பிடுகையில் அதிசெயல்திறன்மிக்க வெர்சனாக கொண்டுவரப்படுகிறது.

புதிய கிரெட்டா என் லைன் காரில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 158 பிஎச்பி மற்றும் 253 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த டர்போ என்ஜின் இருக்கும். ஆற்றல்மிக்க டர்போ என்ஜின் மட்டுமின்றி, ரீ-ட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் உள்பட வேறு சில பிரத்யேகமான வசதிகளையும் கிரெட்டா என் லைன் காரில் எதிர்பார்க்கிறோம்.
டாடா நெக்ஸான் டார்க் எடிசன் (Tata Nexon Dark Edition): கிரெட்டாவை போல், டாடா நெக்ஸானும் இந்தியாவில் பிரபலமான எஸ்யூவி காராக விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவின் பாதுகாப்பான எஸ்யூவி கார் டாடா நெக்ஸான் ஆகும். நெக்ஸான் காரில் புதியதாக டார்க் எடிசனை கொண்டுவரும் திட்டத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்ளது.

2024 டாடா நெக்ஸான் டார்க் எடிசனின் அறிமுகத்தை வருகிற மார்ச் மாத துவக்கத்தில் எதிர்பார்க்கிறோம். தற்சமயம் நெக்ஸானில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. நெக்ஸான் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.8.14 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. புதிய டார்க் எடிசனின் விலையை ரூ.30,000 அதிகமாக எதிர்பார்க்கலாம்.
மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV300 Facelift): பலர் கண்டுக்கொள்ளாத, ஆனால் போற்றப்பட வேண்டிய மஹிந்திரா கார் எக்ஸ்யூவி300 ஆகும். இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், புதிய எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரின் அறிமுக தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், இன்னும் 2 வாரங்களில் இதன் அறிமுகம் இருக்கலாம்.

எக்ஸ்யூவி300 கார் அப்டேட் செய்யப்பட்டு நீண்ட மாதங்கள் ஆகி விட்டதால், புதிய எக்ஸ்யூவி300 காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் தோற்றத்தில் அதிக மாற்றங்களை எதிர்பார்க்கிறோம். அதேபோல், புதிய எக்ஸ்யூவி300 ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய தொழிற்நுட்ப அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.
பிஒய்டி சீல் இவி (BYD Seal EV): சீனாவை சேர்ந்த எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி-இல் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு எதிர்பார்க்கப்படும் புதிய எலக்ட்ரிக் கார் இதுவாகும். சீனாவில், பிரபலமான டெஸ்லா மாடல் 3 எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் சீல் இவி கார் இந்தியாவில் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த காருக்கான முன்பதிவுகளும் துவங்கப்பட்டு உள்ளன.

பிரீமியம் தரத்திலான தோற்றத்துடன், லக்சரியான தொழிற்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டு உள்ளதால், இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.50 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். இந்த விலைமிக்க எலக்ட்ரிக் காரை வருகிற மார்ச் 5ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக பிஒய்டி நிறுவனம் அறிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த லிஸ்ட்டின்படி பார்க்கும்போது, இந்த 2024 மார்ச் மாதத்தில் மொத்தம் 4 புதிய கார்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றின் அறிமுகம் இந்த மார்ச் மாதத்தில் இல்லாமலும் போகலாம். அதாவது, அடுத்த மாதத்திற்கு தள்ளிப் போகலாம். அதேபோல், இந்த லிஸ்ட்டில் இல்லாத ஏதேனும் ஒரு புதிய கார் இந்த மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications









