பெட்ரோல், டீசல் கார்களுக்கு குட் பை சொல்லும் நேரம் வந்தாச்சு! எல்லாமே மேட்-இன்-இந்தியா எலக்ட்ரிக் கார்கள்!!
எலக்ட்ரிக் கார்களை வாங்கும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 1 வருடத்தில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது என்றாலும், இந்தியாவில் சீரான முன்னேற்றம் இருந்துக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இப்போதும் மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருகிறது என்றாலும், அதில் சீரான முன்னேற்றம் இருக்கிறது. இதன் காரணமாகவே, டாடா, மஹிந்திரா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள் தங்களது புதிய எலக்ட்ரிக் கார்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய தயாராகி வருகின்றன.
குறிப்பாக, மஹிந்திரா (Mahindra) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் இரு புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களை நாளை (நவம்பர் 26) வெளியீடு செய்ய உள்ளது. அதாவது, படங்களுடன் காரை பற்றிய அனைத்து விபரங்களும் வெளியீடு செய்யப்பட உள்ளன. கார்களின் விலைகளும் கூட அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பு வலுத்து வருகிறது.

மறுப்பக்கம், டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் இந்த அளவிற்கு எலக்ட்ரிக் கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து இருப்பதற்கு முக்கியமான காரணமாகும். டாடா, மஹிந்திரா இந்த இரு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளன. அவற்றின்படி, இந்த நிறுவனங்களில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படும் 5 எலக்ட்ரிக் கார்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா ஹெரியர் இவி (Tata Harrier EV): இந்தியாவில் அடுத்ததாக விற்பனைக்கு வர உள்ள டாடா எலக்ட்ரிக் கார். இதன் காரணமாகவே ஹெரியர் இவி மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஹெரியர் இவி எலக்ட்ரிக் கார் அடுத்த 2025 மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம். அதற்கு முன்னதாக, வருகிற ஜனவரி மாதத்தில் நடைபெறவுள்ள பாரத் மொபைலிட்டி கண்காட்சியில் இந்த எலக்ட்ரிக் காட்சிக்கு நிறுத்தப்படலாம்.

டாடா சஃபாரி இவி (Tata Safari EV): டாடா ஹெரியர் காரும், சஃபாரி காரும் பெரிய அளவில் வேறுப்பட்டவை கிடையாது என்பது மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள கார்களை பற்றிய புரிதல் உள்ள அனைவருக்கும் தெரியும். ஆதலால், ஹெரியர் கார் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே அதன் தொடர்ச்சியாக சஃபாரி இவி எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராகிவிடும். ஹெரியர் இவி, சஃபாரி இவி இவை இரண்டுமே டாடா மோட்டார்ஸின் புதிய ஆக்டி.இவி பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட உள்ளன.
மஹிந்திரா பிஇ 6இ (Mahindra BE 6e): மஹிந்திரா நவ.26இல் வெளியீடு செய்ய உள்ள இரு எலக்ட்ரிக் கார்களுள் பிஇ 6இ ஒன்றாகும். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.18 லட்சம்- 20 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஹிந்திராவின் இன்னொரு புதிய எலக்ட்ரிக் காருடன் ஒப்பிடுகையில் இந்த காரின் விலை குறைவாகவே இருக்கும். அதற்கேற்ப, பிஇ 6இ காரின் தோற்றமும், அளவும் இருக்கும்.
மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (Mahindra XEV 9e): நவ.26இல் மஹிந்திரா வெளியீடு செய்ய உள்ள மற்றொரு எலக்ட்ரிக் கார். பிஇ 6இ காரை விட அளவில் பெரியது. அதுமட்டுமின்றி, லக்சரியான மஹிந்திரா எலக்ட்ரிக் காராகவும் எக்ஸ்.இ.வி 9இ விளங்கவுள்ளது. ஆனால், பிஇ 6இ உருவாக்க பயன்படுத்தப்படும் அதே மஹிந்திரா இன்க்லோ பிளாட்ஃபாரத்தில் தான் இதுவும் உருவாக்கப்பட உள்ளது.

டாடா சியார்ரா இவி (Tata Sierra EV): மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக டாடா மோட்டார்ஸ் கொண்டுவரும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் கார். ஆனால், 2025ஆம் ஆண்டு இறுதியில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. அளவில் பெரியதான எலக்ட்ரிக் காராக இருப்பினும், 5-சீட்டர் மற்றும் 4-சீட்டர் ஆப்ஷன்களில் சியார்ரா இவி விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டியாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய உள்ளன. நாம் இந்த தொகுப்பில் பார்த்துள்ள 5 எலக்ட்ரிக் கார்களும் விலையுயர்ந்தவை ஆக உள்ளன. குறைந்த விலையிலான எலக்ட்ரிக் காராக அறிமுகம் செய்யப்பட உள்ள ஹெரியர் இவி-இன் விலையும் ரூ.20 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படும். இதில் இருந்து டாடா, மஹிந்திரா இந்த இரு நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய தற்போதைக்கு தயாராக இல்லை என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









