டாடாவுக்கு நெருக்கடி கொடுக்க அவசரம் காட்டும் வின்ஃபாஸ்ட்.. தூத்துக்குடில உற்பத்திக்கான பணிகள் தீவிரம்!
உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான வின்ஃபாஸ்ட் (VinFast), இந்தியாவில் வெகு விரைவில் கால் தடம் பதிக்க இருக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் உற்பத்தி ஆலையை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஒன்றான தூத்துக்குடியிலேயே இதன் வாகன உற்பத்தி ஆலை உருவாகிக் கொண்டிருக்கின்றது.
ஆலைக் கட்டுமான பணிகள் நிறைவடைய இன்னும் சில மாதங்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையிலேயே ஆலை முழுமையாக கார் உற்பத்திக்கு தயாராகுவதற்கு முன்னரே அந்த நிறுவனம் அதன் தயாரிப்புகள் சிலவற்றை இந்தியாவில் அறிமுகம் செய்ய விரும்புவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதன் அடிப்படையில் இரண்டு கார் மாடல்களை வெளிநாடுகளில் இருந்து முழுமையாக கட்டியமைக்கப்பட்ட வாகனங்களாக வின்ஃபாஸ்ட் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அந்த இரண்டு கார் மாடல்கள் என்ன என்பது பற்றிய விபரங்களே தற்போது வெளியாகி உள்ளன. வின்ஃபாஸ்ட் ஓர் வியட்நாமைச் சேர்ந்த மின்சார கார் உற்பத்தி நிறுவனம் ஆகும்.
இந்த நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இரண்டு கார் மாடல்களில் ஒன்று டாடா நெக்ஸான்.இவி (Tata Nexon.EV)-க்கு போட்டியாகவும், மற்றொன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 400 (Mahindra XUV 400 EV)-க்கும் போட்டியாக விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. நிறுவனம் விஎஃப் இ34 (VF e34) மற்றும் விஎஃப் 5 (VF 5), இந்த இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களையே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இதில் விஎஃப்5 கார் மாடலே டாடா நெக்ஸானுக்கான போட்டி மாடல் ஆகும். இந்த கார் ஓர் முழு சார்ஜில் 326 கிமீ ரேஞ்ஜை தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இத்துடன், இந்த எலெக்ட்ரிக் காரில் 136 எச்பி மற்றும் 135 என்எம் டார்க்கை வெளியேற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது வெறும் 10.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய திறன்களுடனேயே டாடா நெக்ஸானுக்கு போட்டியாக வின்ஃபாஸ்ட் விஎஃப் 5 விற்பனைக்கு வர இருக்கின்றது. டாடா நெக்ஸான்.இவி இந்தியாவில் ரூ. 14.49 லட்சம் தொடங்கி ரூ. 19.29 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.

இதைவிட சற்று அதிக விலையிலேயே வின்ஃபாஸ்ட் விஎஃப்5 எலெக்ட்ரிக் கார் மாடலின் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருப்பதனாலேயே இந்த அளவு அதிக விலையில் அது இருக்கும் என நம்பப்படுகின்றது. விஎஃப்5 கார் மாடலைப் போலவே அதிக திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் கார் மாடலாக விஎஃப் இ34 மாடல் இருக்கின்றது.
இது ஓர் 4.3 மீட்டர் கிராஸோவர் கார் மாடல் ஆகும். இதன் வருகைய ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி 400 இவி மற்றும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா கர்வ் இவி, ஹூண்டாய் இவி மற்றும் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக அமைய உள்ளது.
இது ஓர் முழு சார்ஜில் 318.6 கிமீ வரை ரேஞ்ஜ் தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இதற்காக 41.9 kWh பேட்டரி பேக்கே விஎஃப் இ34 மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 150 எச்பி மற்றும் 242 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்ட மின்சார மோட்டாரும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதற்கு ரூ. 25 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை விலையை வின்ஃபாஸ்ட் நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு கார் மாடல்களும் முழுமையாக கட்டியமைக்கப்பட்ட கார் மாடலாக விற்பனைக்கு வர இருக்கின்றன என்பதாலேயே இந்த அளவு அதிக விலையைக் கொண்டதாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விரைவில் இந்த நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியை உள்ளூர் மயமாக்க இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. நிறுவனம் இந்தியாவில் மின்சார கார்களை மட்டுமின்றி மின்சார இரண்டு சக்கர வாகனங்களின் உற்பத்தியையும் செய்ய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவும் தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் ஆலையிலேயே செய்யப்பட இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









