வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
மத்திய அரசு எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்கள் இந்தியாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்வதற்கான சில சட்ட விதிமுறை மாற்றங்களை செய்துள்ளது. அதன் படி சில நிபந்தனைகளுக்கு கீழ் ஒப்பந்தம் செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் குறைந்த வரியில் இறக்குமதி செய்யும் வாய்ப்பை வழங்குகிறது.
மத்திய அரசு இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்ததால் சர்வதேச அரங்கில் உள்ள மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடித்தடத்தை பதிப்பதற்காக வழியை மத்திய அரசு செய்துள்ளதாக பேசப்பட்டது. இதனால் விரைவில் டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

மத்திய அரசு வழிவகை செய்துள்ள இந்த குறைந்த வரிவிதிப்பு முறையில் ஏற்கனவே இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது கார்களை ஆலை திறப்பதற்கு முன்பாகவே வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர தற்போது வழி கிடைத்துள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 4160 கோடியை முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்து செய்துள்ளது. இதை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் செய்ய திட்டமிட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு குறைவான வரியில் கார்களை இறக்குமதி செய்ய சில கண்டிஷன்களை வைத்துள்ளது.

அதன்படி குறைவான வரியில் வாகனங்களை இறக்குமதி செய்யும் நிறுவனம் அடுத்த குறிப்பிட்ட ஆண்டுக்குள் குறிப்பிட்ட அளவிலான முதலீடுகளை இந்தியாவிற்குள் செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் முதலீடு செய்து ஆலை ஆரம்பித்த அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 50 சதவீதத்திற்கும் அதிகமான உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் வின்ஃபாஸ்ட் நிறுவனமும் குறைந்த விலையில் சர்வதேச மார்க்கெட்டில் அந்நிறுவனம் விற்பனை செய்யும் கார்களை எல்லாம் இந்தியாவில் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும். அப்படியாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு தற்போது உள்ள 100 சதவீத இறக்குமதி வரிக்கு பதிலாக வெறும் 15 சதவீத இறக்குமதி வரி மட்டுமே விதிக்கப்படும்.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்திடம் தற்போது சர்வதேச மார்க்கெட்டில் 6 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் உள்ளன. விஎஃப்5, விஎஃப் 6, விஎஃப் இ34, விஎஃப்7, விஎஃப்8 மற்றும் விஎஃப் 9 ஆகிய கார்கள் உள்ளன. இந்த கார்கள் எல்லாம் சர்வதேச மார்க்கெட்டில் ரூபாய்15 லட்சம் முதல் ரூபாய் 75 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இதில் அனைத்து கார்களையும் இறக்குமதி செய்ய முடியாவிட்டாலும் குறிப்பிட்ட சில கார்களை இறக்குமதி செய்ய முடியும்.
இந்தியாவில் உள்ள இறக்குமதி வரி குறைப்பு விதியின்படி வாகனத்தின் விலை, அதற்கான இன்சூரன்ஸ், மற்றும் போக்குவரத்து கட்டணம் என அனைத்தும் சேர்ந்து இந்தியாவிற்குள் அந்த கார் வரும்போது அதன் மதிப்பு 35 ஆயிரம் அமெரிக்க டாலருக்கும் குறைவாக இருக்க வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 29 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
இதனால் வின்ஃபாஸ்ட் நிறுவனம் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை இறக்குமதி செய்யும் முன்பே தனது வாகனங்களை இறக்குமதி செய்து இந்திய மக்கள் குறிப்பிட்ட வாகனங்களை விரும்புகிறார்களா? என்ன விதமான அம்சங்களை எதிர்பார்க்கிறார்கள்? என ஒரு சோதனை செய்ய ஒரு நல்ல தருணம் கிடைத்துள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவனம் இதை பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பார்க்கலாம்
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கவும், மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும் மத்திய அரசு இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து இந்தியாவில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கும் இந்திய மக்களுக்கும் அதிகமான லாபம் இருக்கிறது


Click it and Unblock the Notifications









