டெஸ்லாவையே தூக்கி சாப்பிடும் எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! டாடாக்கு இப்பவே தொடை நடுங்க ஆரம்பிச்சிருக்கும்
வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பிரபலமான நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (Vinfast). எலெக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) தயாரிப்பதில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் புகழ்பெற்று விளங்குகிறது. அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு நேரடி போட்டியாக கருதப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனம், இந்தியாவில் அமைக்கப்படவுள்ள புதிய தொழிற்சாலையில் கூடிய விரைவில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியை தொடங்கவுள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் (Tamil Nadu) அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்களில் ஒன்றான தூத்துக்குடிதான் (Thoothukudi), வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீட்டை ஈர்த்துள்ளது.
தூத்துக்குடியில் அமைக்கப்படவுள்ள வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் (M. K. Stalin) உள்பட பலரும் கலந்து கொண்டனர். வரும் 2025ம் ஆண்டு மே மாதம், இங்கு எலெக்ட்ரிக் கார் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கு ஏற்ற வகையில் தற்போது தொழிற்சாலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் இந்திய சாலைகளில் தனது எலெக்ட்ரிக் கார்களை சோதனை செய்யும் பணிகளை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக வின்ஃபாஸ்ட் விஎஃப் இ34 (Vinfast VF e34) எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இது மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். அதாவது கியா செல்டோஸ் (Kia Seltos), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta), மாருதி க்ராண்ட் விட்டாரா (Maruti Grand Vitara), டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder), ஹோண்டா எலவேட் (Honda Elevate) மற்றும் எம்ஜி அஸ்டர் (MG Astor) ஆகிய கார்களின் அளவில் இருக்கும்.

தற்போது வியட்நாம் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 318 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 318 கிலோ மீட்டர்கள் பயணம் செய்ய முடியும்.
லெவல் 2 அடாஸ், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கனெக்டட் கார் தொழில்நுட்பம், 360 டிகிரி கேமரா என வின்ஃபாஸ்ட் விஎஃப் இ34 எலெக்ட்ரிக் காரில், ஏராளமான வசதிகள் வழங்கப்படுகின்றன. இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியாக இது இருக்கும்.
இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்கள் டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காருடன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்தியாவில் வின்ஃபாஸ்ட் விஎஃப் இ34 எலெக்ட்ரிக் காரின் ஆரம்ப விலை 20 லட்ச ரூபாய் என்ற அளவிலும், டாப் வேரியண்ட்டின் விலை 25 லட்ச ரூபாய் என்ற அளவிலும் இருக்கலாம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வின்ஃபாஸ்ட் நிறுவனம் விஎஃப் இ34 எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ளன என்பது நமக்கு பெருமிதம் அளிக்க கூடிய ஒரு விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








