போஸ்டர் அடி... அண்ணன் ரெடி... மிகவும் குறைவான விலையில் புதிய எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் முன்னணி நிறுவனம்!
இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து கொண்டுள்ளன. இதில், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம்தான் முன்னணி வகிக்கிறது.
ஆனால் வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடுமையான போட்டியை வழங்க பல்வேறு நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இதில், ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனமும் ஒன்றாகும். ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் விலை குறைவான மாஸ் மார்க்கெட் எலெக்ட்ரிக் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்பட போவதில்லை. மாறாக இந்தியாவில் இருந்து பல்வேறு வெளிநாடுகளுக்கும் இந்த எலெக்ட்ரிக் காரை ஏற்றுமதி செய்ய ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு மிகப்பெரிய அளவிலான முதலீடுகள் தேவைப்படும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
எனவே 2025ம் ஆண்டிற்கு பிறகுதான், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. PEAK EV என்ற திட்டத்தின் கீழ், எலெக்ட்ரிக் கார்களை உருவாக்குவதற்கு என புத்தம் புதிய பிளாட்பார்ம் ஒன்றை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த PEAK EV திட்டத்திற்கு 1 பில்லியன் யூரோக்களை முதலீடு செய்வதற்கும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள விலை குறைவான எலெக்ட்ரிக் காரின் உற்பத்தி தொடர்பான தகவல்களும் தற்போது நமக்கு ஓரளவிற்கு கிடைத்துள்ளன.
இதன்படி பார்த்தால், ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் ஒரு ஆண்டுக்கு 5 லட்சம் யூனிட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது இந்தியாவின் உள்நாட்டு சந்தை மற்றும் வெளிநாடுகளின் சந்தை என இரண்டுக்கும் சேர்த்து என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விலை குறைவானது என்பதால், இந்த எலெக்ட்ரிக் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் இது போன்ற விலை குறைவான எலெக்ட்ரிக் கார்கள்தான், இந்திய மக்களின் தேவையாக உள்ளது. ஏனெனில் போதுமான அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு விட்டாலும் கூட, நிறைய பேர் இன்னும் எலெக்ட்ரிக் கார்களுக்கு மாற தயாராக இல்லை.
எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம் என்பதுதான் இதற்கு காரணம். எனவே குறைவான விலையில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டால், அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நாங்கள் கருதுகிறோம். இது இந்தியாவின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவி செய்யும் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








