ஃபேக்ட்ரியை சுற்றிக் காட்டுவதற்காகவே ஃபோக்ஸ்வேகன் உருவாக்கி உள்ள கார்!! விசிட் அடிச்சவரு அவ்வளவு பெரிய ஆளு!
ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் (Volkswagen Virtus) செடான் காரின் புதிய கன்வெர்டபிள் வெர்சன் பிரேசில் நாட்டில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விர்டுஸ் காரை பற்றியும், எப்போது? எந்த சமயத்தில் இந்த கார் வெளியீடு செய்யப்பட்டது? என்பதை பற்றியும் விரிவாக இனி பார்க்கலாம்.
ஃபோக்ஸ்வேகனின் வெண்டோ செடான் காருக்கு இந்தியாவில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்தது. இருப்பினும், சில வருடங்களுக்கு முன்பு வெண்டோ காரின் விற்பனையை நிறுத்துவிட்டு, அதற்கு பதிலாக விர்டுஸ் காரை இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் அறிமுகப்படுத்தியது. ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து ஃபோக்ஸ்வேகன் உருவாக்கிய மாடர்ன் செடான் கார், விர்டுஸ் ஆகும்.

இந்தியாவில் விர்டுஸ் காரின் கன்வெர்டபிள் வெர்சனை அறிமுகப்படுத்தும் எந்தவொரு திட்டத்திலும் ஃபோக்ஸ்வேகன் இல்லை. ஆனால், பிரேசில் நாட்டில் தற்போது விர்டுஸ் கன்வெர்டபிள் கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையை சமீபத்தில் அந்த நாட்டின் குடியரசு தலைவர் நேரில் பார்வையிட்டு உள்ளார்.
அந்த நிகழ்வின்போதுதான், புதிய விர்டுஸ் கன்வெர்டபிள் கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் விற்கப்படும் விர்டுஸ் காருக்கும், பிரேசிலில் விற்கப்படும் காருக்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன. தற்போது பிரேசிலில் வெளியீடு செய்யப்பட்டுள்ள விர்டுஸ் கன்வெர்டபிள் கார் அந்த நாட்டில் விற்பனையில் உள்ள மாடலை அடிப்படையாக கொண்டதாக உள்ளது.

அதாவது, இந்த கன்வெர்டபிள் காரில் 1.4 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் இந்திய மார்க்கெட்டில் விர்டுஸ் காரில் கிடைப்பதில்லை. கன்வெர்டபிள் தோற்றத்திற்காக, காரின் மேற்கூரையை மட்டும் சும்மா நீக்கவில்லை. அதாவது, இதை தாண்டி காரில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக, காரின் சஸ்பென்ஷன் செட்-அப் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், கதவுகளின் வடிவம் மாற்றப்பட்டு உள்ளது. அத்துடன், காரின் ஸ்டெபிளிட்டிக்காக முன் இருக்கை வரிசைக்கும், பின் இருக்கை வரிசைக்கும் இடையில் ஒரு ராட் கம்பி கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கமான விர்டுஸ் காரை காட்டிலும், இந்த கன்வெர்டபிள் காரின் உட்பக்க கேபின் சற்று அதிக நீளமாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, காருக்குள் கூடுதல் லெக் ரூம் கிடைத்துள்ளதாக ஃபோக்ஸ்வேகன் தெரிவிக்கிறது.

பிஸ்கே நீல நிறத்தில் இருக்கும் இந்த காரின் உட்பக்க கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப இந்த காரின் 18-இன்ச் சக்கரங்கள் டார்க் ஃபினிஷிங்கில் உள்ளன. 30 நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் இந்த விர்டுஸ் கன்வெர்டபிள் காரை வெறும் 6 வாரங்களில் வடிவமைத்துள்ளதாக கூறும் ஃபோக்ஸ்வேகன் இந்த காரை நாட்டின் குடியரசு தலைவருக்கு தொழிற்சாலையை சுற்றிக் காட்டுவதற்காக பிரத்யேகமாக உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆதலால், இந்த கன்வெர்டபிள் கார் பொது விற்பனைக்காக உற்பத்தி செய்யப்பட போவதில்லை. இதேபோன்று, கடந்த 2023இல் இந்தியாவிலும் பள்ளி மாணவர்கள் இணைந்து ஸ்கோடா ராபிட் செடான் காரின் கன்வெர்டபிள் காரை உருவாக்கி காட்சிப்படுத்தி இருந்தனர். ஸ்கோடா ராபிட் மற்றும் ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் இரண்டும் ஒரே விதமான பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட செடான் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: செடான் கார்களை கன்வெர்டபிள் தோற்றத்திற்கு மாற்றினாலே பார்ப்பதற்கு அழகாக இருக்கும். சாதாரண மெக்கானிக்குகள் மாடிஃபை செய்வதை விட, இவ்வாறு கார் நிறுவனத்தால் உருவாக்கப்படும் கன்வெர்டபிள் கார்கள் எப்போதும் சிறப்பானவைகளாக இருக்கும். அதிலிலும், இந்த விர்டுஸ் கன்வெர்டபிள் காரை பிரேசில் குடியரசு தலைவரின் பயன்பாட்டிற்காக இன்னும் பார்த்து, பார்த்து ஃபோக்ஸ்வேகன் உருவாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications









