எப்படி மோதி பார்த்தாலும் உள்ளே இருக்கவங்களுக்கு ஒண்ணும் ஆகல! 5 பேர் செல்வதற்கு ஏற்ற சிறிய கார்!!
வால்வோ (Volvo), பாதுகாப்பான கார்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனம் என்கிற பெயரை உலகளவில் கொண்டுள்ளது. இந்தியாவில் டாடா மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் எப்படி உள்ளதோ அதேபோன்று உலகளவில் வால்வோ கார்கள் என்றாலே பாதுகாப்பான கார்கள் என்கிற பார்வை மக்கள் மத்தியில் உள்ளது. இதற்கு மேலும் வலுச்சேர்ப்பது போல், மீண்டும் ஒரு வால்வோ எலக்ட்ரிக் கார் கிராஷ் டெஸ்ட்டில் 5க்கு முழு 5 நட்சத்திரங்களை பெற்று அசத்தியுள்ளது. இந்த குறிப்பிட்ட வால்வோ கார் இந்தியாவிலும் விற்பனை கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட அந்த வால்வோ எலக்ட்ரிக் காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
உலகளவில் கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதற்கேற்ப பாதுகாப்பான கார்களை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே, அந்தந்த சமயங்களில் கிடைக்கப்பெற்ற தரமான உலோகங்கள் மற்றும் தொழிற்நுட்பங்களை கொண்டு முடிந்தவரையில் பாதுகாப்பான கார்களை உருவாக்கவே முயற்சிக்கின்றனர்.

ஆனால், எப்போது என்சிஏபி கிராஷ் டெஸ்ட் முடிவுகள் வெளிவர துவங்கியதோ அப்போதில் இருந்தே கார் நிறுவனங்களுக்கு இடையே ஓர் ஆரோக்கியமான போட்டி உருவாகி உள்ளது. இதற்கேற்ப ஆங்காங்கே கார்களை சோதித்து பார்க்கும் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்புகளும் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளன. நம் இந்திய அரசு கடந்த 2023ஆம் ஆண்டு இறுதியில் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டை ஆரம்பித்ததை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.
ஐரோப்பாவுக்கென யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்பு செயல்பட்டு வருகிறது. யூரோ கிராஷ் டெஸ்ட்டில் கடந்த காலங்களில் இருந்து பல்வேறு வால்வோ கார்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. ஏனெனில், வால்வோ ஆனது ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த கார் நிறுவனமாகும். அந்த வரிசையில், வால்வோ இ.எக்ஸ்30 (EX30) என்கிற எலக்ட்ரிக் கார் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டு, அதன் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன.

எதிர்பார்த்ததை போன்று, வால்வோ இஎக்ஸ்30 எலக்ட்ரிக் காரும் 5க்கு முழு 5 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. மற்ற விலையுயர்ந்த வால்வோ கார்களுடன் ஒப்பிடுகையில் இஎக்ஸ்30 ஆனது சற்று அளவில் சிறிய கார் ஆகும். யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் அனைத்து பிரிவு சோதனைகளிலும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் 79க்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றுள்ளது.
பெரியவர்களுக்கான பாதுகாப்பில், வால்வோ இஎக்ஸ்30 எலக்ட்ரிக் காருக்கு 35.3 புள்ளிகளுடன் 100க்கு 88 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. காரை முன்பக்கமாக மோதவிட்டு பார்த்ததில், முன் இருக்கை பயணிகளின் கால்முட்டி பகுதிகளுக்கு அதிக பாதுகாப்பு கிடைக்காததை யூரோ என்சிஏபி சோதனையாளர்கள் கண்டறிந்தனர். இருப்பினும், இந்த மோதலின்போது கால்முட்டியை தவிர்த்து முன் இருக்கை பயணிகளின் மற்ற அனைத்து உடல் பகுதிகளுக்கும் சிறப்பான மற்றும் போதுமான பாதுகாப்பு கிடைத்துள்ளது.

காருக்கு பக்கவாட்டில் மோதலை ஏற்படுத்தி பார்த்ததில், முன் இருக்கை பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பு கிடைக்கிறது என்றாலும், பின் இருக்கை பயணிகளுக்கு அந்த அளவிற்கு அதிக பாதுகாப்பு கிடைக்கவில்லை. இந்த மோதல்கள் அனைத்திலும் முன் ஏர்பேக்குகள் டம்மிகளின் தலையை சிறப்பாக பாதுகாத்தன. கார் நீரில் மூழ்கும் நிலைமை ஏற்பட்டால், பயணிகள் காரின் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வெளியேற முடியும் என வால்வோ நிரூபித்து காட்டியுள்ளது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பை பொறுத்தவரையில், 42 புள்ளிகளுடன் இந்த எலக்ட்ரிக் கார் 85 மதிப்பெண்களை பெற்றுள்ளது. இதற்காக 6 வயது மற்றும் 10 வயதுடைய சிறுவர் டம்மிகள் சோதனையில் பயன்படுத்தப்பட்டன. 85 என்பது நல்ல மதிப்பெண்கள் தான் என்றாலும், காருக்குள் குழந்தை இருப்பதை கார் தெரிந்துக்கொள்வது போன்று எந்த சிஸ்டமும் இல்லாதது இஎக்ஸ்30 காருக்கு இந்த விஷயத்தில் சில மதிப்பெண்களை குறைத்துள்ளது. சாலை பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் இந்த காருக்கு வெறும் 79 மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாலை பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் பெரும்பாலான கார்கள் குறைவான மதிப்பெண்ணையே பெறுகின்றன என்றாலும், மற்ற வால்வோ கார்களின் ஸ்டாண்டர்டுக்கு 79 என்பது கொஞ்சம் குறைவாகும். பெரியவர்களுக்கான பாதுகாப்பை காட்டிலும், சிறியவர்களுக்கான பாதுகாப்பில் இந்த எலக்ட்ரிக் கார் அதிக மதிப்பெண்களை பெற்றிருப்பது கவனிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. இந்தியாவில் வால்வோ இஎக்ஸ்30 எலக்ட்ரிக் கார் வருகிற 2025ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









