வால்வோவில் இவ்வளவு கம்மியான விலையில் கார் கிடைச்சா... ஒருத்தரும் சீன எலக்ட்ரிக் காரை வாங்க போறது இல்ல!
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge) காரில் புதியதாக 'பிளஸ்' (Plus) என்கிற பெயரில் சிங்கிள்-மோட்டார் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. குறைந்த விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த புதிய வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
சீனாவை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான பிஒய்டி புதியதாக அதன் சீல் எலக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள். ரூ.41 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சீன எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் விற்பனையில் வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரும் போட்டியாக விளங்குகிறது.

பிஒய்டி சீல் எலக்ட்ரிக் கார் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் கார் ஒரேயொரு அல்டிமேட் வேரியண்ட்டில் மட்டுமே டபுள் எலக்ட்ரிக் மோட்டார் உடன் கிடைத்துவந்தது. இந்த நிலையில் தற்போது, பிளஸ் என்கிற பெயரில் புதிய எண்ட்ரீ-லெவல் வேரியண்ட் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வேரியண்ட் சிங்கிள் எலக்ட்ரிக் மோட்டார் உடன் கிடைக்கும். இதன் விளைவாக, இந்த வேரியண்ட்டை குறைந்த விலையில் வால்வோ அறிமுகப்படுத்தி உள்ளது. புதிய பிளஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.54.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே விற்பனையில் இருக்கும் அல்டிமேட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.57.90 லட்சம் ஆகும்.
அல்டிமேட் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், சில வசதிகள் புதிய சிங்கிள்-மோட்டார் வேரியண்ட்டான பிளஸ்-இல் கிடைக்காது. அல்டிமேட்டின் விலையை விட புதிய பிளஸ் வேரியண்ட்டின் விலை சற்று குறைவாக நிர்ணயிக்கப்பட்டு இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். இதன்படி, புதிய பிளஸ் வேரியண்ட்டில், காரின் முன்பக்கத்தில் பிக்சல் எல்இடி ஹெட்லேம்ப்களும், ஃபாக் விளக்குகளும் கிடைக்காது.
அத்துடன், 360-டிகிரி கேமரா மற்றும் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டத்தையும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் இந்த புதிய வேரியண்ட்டில் பெற முடியாது. புதிய பிளஸ் வேரியண்ட்டில் கிடைக்கக்கூடிய அம்சங்கள் என்று பார்த்தால், 8-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், ட்யூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், டிரைவர்களுக்கான 12-இன்ச் டிஜிட்டல் திரை, 9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் திரை உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

இவற்றுடன், டயர்களின் அழுத்தத்தை கண்காணிக்கும் சிஸ்டம், 19-இன்ச் அலாய் சக்கரங்கள், பனோராமிக் சன்ரூஃப், பவர்டு முன் இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜிங் வசதி போன்றவற்றையும் இந்த புதிய விலை குறைவான வேரியண்ட்டில் பெறலாம். வால்வோ கார்களில் பொதுவாகவே பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் அதிகமாக வழங்கப்படும் என்கிற கருத்து உள்ளது. அதன்படி, இந்த புதிய எக்ஸ்சி40 ரீசார்ஜ் பிளஸ் காரில் 7 ஏர்பேக்குகளை பெறலாம்.
மேலும், லேன் கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கிராஸ்-டிராஃபிக் அலார்ட்ஸ் மற்றும் ரியர் கொலிஷன் வார்னிங் உள்ளிட்டவை அடங்கிய அடாஸ் தொகுப்பையும் எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் இந்த புதிய வேரியண்ட்டில் பெறலாம். இந்த புதிய வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 238 எச்பி மற்றும் 420 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும் என்கிறது வால்வோ.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரில் புதியதாக பிளஸ் வேரியண்ட் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதற்கு பிஒய்டி சீல் எலக்ட்ரிக் காரின் அறிமுகம் முக்கிய காரணமாகும். எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் அல்டிமேட் வேரியண்ட் எவ்வாறான தோற்றத்தில் கிடைத்துவந்ததோ கிட்டத்தட்ட அதே தோற்றத்தில்தான் புதிய பிளஸ் வேரியண்டும் கிடைக்கும். போதுமான தொழிற்நுட்ப வசதிகளுடன் குறைந்த விலையில் எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரை வாங்க விரும்புபவர்களுக்கு இந்த புதிய வேரியண்ட் ஏற்றதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








