அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி கார்களை வாங்க ஆசை இல்லையா!.. அப்போ இந்த பதிவு உங்களுக்கானது இல்ல!
இந்தியாவில் சிஎன்ஜி (CNG) கார்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பெட்ரோல், டீசல் எரிபொருள்களைக் காட்டிலும் குறைவான விலையில் சிஎன்ஜி விற்பனைக்குக் கிடைக்கின்றது என்பதாலும், சிஎன்ஜி வாகனங்கள் மிக மிக அதிக மைலேஜை வழங்குகின்றன என்பதாலும் இந்தியர்கள் பலர் தற்போது சிஎன்ஜி வாகனங்களுக்கு மிக வேகமாக மாறிக் கொண்டிருக்கின்றனர். ஏன், ஒரு சிலர் சிஎன்ஜி வாகனங்கள் மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக தங்களின் வழக்கமான பெட்ரோலில் இயங்கும் கார்களையே சிஎன்ஜியால் இயங்கும் வாகனங்களாக மாற்றி வருகின்றனர்.
இதற்கேற்ப தற்போது சந்தையில் பெட்ரோல் கார்களை சிஎன்ஜி காராக மாற்றுவதற்கான கிட்-கள் பரந்த அளவிலும், மலிவான விலையிலும் விற்பனைக்குக் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அரசு சார்பிலும் சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான முயற்சிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சிஎன்ஜி வாகனங்களுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மாதிரியான சூழலிலேயே நம்முடைய வாசகர்களுக்கும், சிஎன்ஜி கார் விரும்பிகளுக்கும் விருந்தளிக்கும் விதமாக இந்த பதிவில் டாப் 3 அதிகம் மைலேஜ் தரும் சிஎன்ஜி எஸ்யூவி ரக கார்களின் பட்டியலை தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் அந்த கார்கள் பற்றிய விபரங்களை விரிவாக காணலாம்.
டாடா பஞ்ச் சிஎன்ஜி (Tata Punch CNG): இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் குட்டியான எஸ்யூவி ரக கார் மாடல்களில் இதுவும் ஒன்றாகும். இந்த கார் மாடலை பலதரப்பட்ட அவதாரங்களில் டாடா மோட்டார்ஸ் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றே சிஎன்ஜி அவதாரம் ஆகும்.
இதுதவிர, மின்சாரம் மற்றும் பெட்ரோல் வெர்ஷன்களிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனாலேயே இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் கார் மாடலாக பஞ்ச் தற்போது மாறி இருக்கின்றது. குறிப்பாக, சிஎன்ஜி தேர்விற்கு பலர் மிகப் பெரிய ரசிகர்களாக மாறி இருக்கின்றனர். காரணம் இந்த வாகனம் ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 26.9 கிமீ வரையில் மைலேஜ் தந்துக் கொண்டிருப்பதுதான்.
இது அராய் சான்றளித்த மைலேஜ் விபரம் ஆகும். அதேவேளையில், இதன் பெட்ரோல் வெர்ஷன் ஒரு லிட்டருக்கு 19 கிமீ முதல் 20 கிமீ வரையில் மட்டுமே மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது. ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமான விலையிலேயே பஞ்ச் சிஎன்ஜி இந்தியாவில் விற்கப்படுகின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
பஞ்ச் சிஎன்ஜியில் 1.2 லிட்டர் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 3 சிலிண்டர் மோட்டார் ஆகும். இந்த மோட்டார் சிஎன்ஜியில் இயங்கும்போது 72.39 பிஎச்பி பவரையும், 103 என்எம் டார்க்கையும், பெட்ரோலில் இயங்கும்போது அதே மோட்டார் 84.82 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
ஹூண்டாய் எக்ஸ்டர் சிஎன்ஜி (Hyundai Exter CNG): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மற்றுமொரு குட்டியான தோற்றம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் இதுவாகும். டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக கொண்டு வரப்பட்டதே இந்த எக்ஸ்டர் ஆகும். இதனாலேயே இந்த கார் மாடலில் சிஎன்ஜி வெர்ஷனையும் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும், சமீபத்திலேயே எக்ஸ்டர் சிஎன்ஜியில் இரண்டு சிலிண்டர்கள் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், டாடா மோட்டார்ஸ் அதன் பஞ்ச் சிஎன்ஜி காரை அறிமுகப்படுத்தியதே இரட்டை சிலிண்டருடன்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹூண்டாயின் எஸ் (S), எக்ஸ் (X) மற்றும் நைட் எடிசன் (Knight Edition) ஆகியவற்றிலேயே இரட்டை சிலிண்டர் வசதியை ஹூண்டாய் அறிமுகம் செய்திருக்கின்றது.
இதற்கு ரூ.8.50 லட்சம் முதல் ரூ.9.38 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. 1.2 லிட்டர் மோட்டாரே எக்ஸ்டர் சிஎன்ஜியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 27.1கிமீ மைலேஜை வழங்கும். இது சிஎன்ஜியில் இயங்கும்போது கிடைக்கக் கூடிய மைலேஜ் ஆகும். அதேவேளையில், பெட்ரோலில் இயங்கும்போது லிட்டர் ஒன்றிற்கு 19.2கிமீ தொடங்கி 19.4கிமீ வரையில் அது மைலேஜ் தரும்.
மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் சிஎன்ஜி (Maruti Fronx CNG): மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெஸ்ட் செல்லிங் கார் மாடல்களில் ஒன்றாக ஃப்ரான்க்ஸ் காட்சியளிக்கின்றது. பலினோ ஹேட்ச்பேக் கார் மாடலின் எஸ்யூவி வெர்ஷனே ஃப்ரான்க்ஸ் என்பது குறிப்பிடத்தகுந்தது. 1.2 லிட்டர் பெட்ரோல் மோட்டாரையே சிஎன்ஜியில் இயங்கும் வகையில் ட்யூன் செய்து இந்த காரில் மாருதி சுஸுகி பயன்படுத்தி இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 76 பிஎச்பி மற்றும் 98 என்எம் டார்க்கை வெளியேற்றும். எக்ஸ்டர் சிஎன்ஜி காரைக் காட்டிலும் அதிக திறன் இதுவாகும். மேலும், அதிகபட்சமாக ஒரு கிலோ சிஎன்ஜிக்கே 28.51 கிமீ வரையில் இது மைலேஜ் தரும். இந்த கார் மைலேஜ் திறனிலும் டாடா பஞ்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் இரண்டையும் பின்னுக்கு தள்ளி இருக்கின்றது. இது அராய் அமைப்பு வழங்கிய அதிகாரப்பூர்வ மைலேஜ் திறன் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த மூன்று எஸ்யூவி கார்களே மிக அதிகம் மைலேஜ் தரக் கூடிய சிஎன்ஜி கார்கள் ஆகும். ஆகையால் இவற்றிற்கு இடையேயான போட்டி, மிகப் பெரியதாகக் காட்சியளிக்கின்றது. சிஎன்ஜி கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதன் காரணத்தினால் வரும் நாட்களில் இன்னும் பல எஸ்யூவி கார் மாடல்களில் சிஎன்ஜி தேர்வு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








