வாடிக்கையாளர்கள் மேல் திடீர் பாசம்... கார் நிறுவனங்கள் இந்த மாசம் தள்ளுபடியை வாரி வழங்க இதுதான் காரணமா!
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் தற்போது தென் மேற்கு பருவமழை (South West Monsoon) கொட்டி வருகிறது. கூடவே புதிய கார்களை வாங்குபவர்களுக்கு தள்ளுபடி (Discounts) மழையும் பெய்து வருகிறது. ஆம், இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல்வேறு முன்னணி கார் நிறுவனங்களும் தற்போது போட்டி போட்டு கொண்டு தள்ளுபடிகளை வழங்கி வருகின்றன. கார் நிறுவனங்கள் திடீரென ஏன் இவ்வளவு தள்ளுபடிகளை வாரி வழங்க தொடங்கியுள்ளன? என்ற சந்தேகம் நிறைய பேருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்ய வேண்டியது எங்களுடைய கடமை. சரி, வாருங்கள். நேரடியாக செய்திக்குள் செல்லலாம்.
இந்தியாவில் தற்போதைய நிலையில் சுமார் 6.50 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்படாமல் இருக்கின்றன. இது ஃபாடா என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA - Federation of Automobile Dealers Association) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான தகவல் ஆகும்.

விற்பனை செய்யப்படாமல் தேங்கியுள்ள 6.50 லட்சம் கார்களின் மதிப்பு சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இவ்வளவு அதிக மதிப்பில் சரக்குகள் தேங்கி இருப்பதுதான், முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் பலவும் தள்ளுபடிகளை வாரி வழங்கி கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெயில் சுட்டெரித்தது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் வெப்ப அலை வீசியது. அதை தொடர்ந்து தற்போது பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில், வரலாறு காணாத வகையில் கனமழை கொட்டியுள்ளது.

வரலாறு காணாத வெப்பம் மற்றும் அதை தொடர்ந்து பெய்து வரும் கனமழை ஆகிய இயற்கை காரணங்கள், வாடிக்கையாளர்கள் கார் ஷோரூம்களுக்கு வருகை புரிவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலும், கார் விற்பனையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
இதுதவிர புதிய கார் வாங்குபவர்களுக்கு லோன் வழங்குவதில், வங்கிகள் தற்போது கடுமை காட்ட தொடங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது முன்பு போல் கார் லோன் எளிமையாக கிடைப்பதில்லை என கூறப்படுகிறது. கார் லோன் வழங்குவதில் வங்கிகள் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருப்பதாக தெரிகிறது.
இந்திய சந்தையில் தற்போது கார்கள் விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருப்பதற்கு இதுவும் ஒரு மிக முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. இது போன்ற காரணங்களால்தான் கார்களின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தற்போது வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடிகளை வாரி வழங்க தொடங்கியுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவில் கூடிய விரைவில் பண்டிகை காலம் தொடங்கவுள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் புதிய கார்களை அதிகளவில் வாங்குவார்கள். எனவே பண்டிகை காலத்தில் கார் விற்பனை புதிய உச்சத்தை தொடும். அதேபோல் நடப்பு 2024ம் வருட பண்டிகை காலத்தின்போது, மந்த நிலை பிரச்னை முடிவுக்கு வரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








