டாடா நானோ இல்லா குறையை போக்க இருக்கும் காருக்கு புக்கிங் தொடக்கம்.. இதோட விலை 2 லட்சம்தானா!
இரண்டு இருக்கைகள் மட்டுமே கொண்ட கார் இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வர இருக்கின்றது. இதை உற்பத்தி செய்வதற்கான அனுமதியையே சமீபத்தில் அராய் அமைப்பிடம் இருந்து விங்ஸ் இவி (Wings EV) நிறுவனம் பெற்றது. இது ஓர் ஸ்டார்ட்-அப் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். நேற்றைய (ஜூலை 18) தினமே நிறுவனத்திற்கு இந்த வாகனத்தை உற்பத்தி செய்வதற்கான அனுமதி கிடைத்தது பற்றிய தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தற்போது குட்டி காருக்கான புக்கிங்கை ஏற்கும் பணிகளை விங்ஸ் இவி தொடங்கியிருக்கின்றது.
இதுபற்றிய தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. மேலும், விங்ஸ் இவி-யின் அந்த குட்டி கார் பற்றிய சில முக்கிய விபரங்களும் வெளியாகி உள்ளன. 2 சீட்டராக விற்பனைக்கு வர இருக்கும் இந்த காருக்கு 'ராபின்' (Robin) என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

இது நான்கு சக்கரங்களையும், நான்கு கதவுகளையும் மற்றும் பார்க்க கார் போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும் இது கார் அல்ல என்பதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இந்த வகை வாகனங்களுக்கு வாகன உலகில் குவாட்ரிசைக்கிள் (Quadricycle) எனும் பெயர் உண்டு.
பஜாஜ் நிறுவனத்தின் தயாரிப்பான க்யூட் (Bajaj Qute)-டை பற்றி கேள்விப் பட்டதுண்டா. அந்தவகை வாகனமே இந்த ராபின் ஆகும். அதேவேளையில், மின்சாரத்தில் இயங்கும். ஓர் முழு சார்ஜில் இந்த காரில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இதேபோல், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ என்றும் அது கூறியிருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் டாடா நானோ இல்லாத குறையை போக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இதன் வருகை இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
உருவத்திலும் இது ஓர் மோட்டார்சைக்கிள்களின் அளவிலேயே உள்ளது. அதாவது, நீளத்தில் கிளாசிக் 350 பைக்கிற்கு இணையானதாக இருக்கும் என தெரிகின்றது. ஆனால், அகலம் மட்டும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். 2250 X 945 X 1560 அளவிலேயே இந்த மைக்ரோ கார் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.
மேலும், இதற்கு ரூ. 2 லட்சம் மட்டுமே விலை நிர்ணயம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. ஆகையால், கட்டாயம் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு இதன் வருகை மிகப் பெரிய சவாலான சூழலை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், என்ன இதன் ரேஞ்ஜ் தரும் திறன் கொஞ்சம் மட்டும் கவலையளிக்கும் விதமாக உள்ளது.
நீண்ட தூர பயணங்களுக்கு இதை பயன்படுத்த முடியாது. அதேநேரத்தில், குட்டியான சந்து-பொந்துகளில்கூட இந்த வாகனத்தை வைத்து பயணித்துக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் ராபின் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இ, எஸ் மற்றும் எக்ஸ் ஆகியவையே அவை ஆகும்.
இதில் இ என்பதே ஆரம் நிலை தேர்வாகும். இதில் ஏசி போன்ற அம்சங்களே இடம் பெற்றிருக்காது என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், ஓர் முழு சார்ஜில் 60 கிமீ வரையில் மட்டுமே அது ரேஞ்ஜை தரும். இதற்கு அடுத்தபடியான மாடலாக எஸ் உள்ளது. இது 2.5 லட்ச ரூபாய்க்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், ஓர் முழுசார்ஜில் 90 கிமீ ரேஞ்ஜை இதுவே வழங்கும். கடைசி தேர்வாக எக்ஸ் உள்ளது. இந்த உயர்நிலை தேர்வில் ஏசி போன்ற பிரீமியம் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கும். ஆனால், இதன் விலை ரூ. 3 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிகின்றது.
போர் விமானம் மற்றும் எஃப் 1 வகை கார்களில் வழங்கப்படுவதைப் போல இந்த காரிலும் டிரைவ்-பை-ஒயர் டெக்னாலஜி வழங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இது வாகனத்திற்கு மிக சிறந்த ஸ்டெபிளிட்டியை வழங்கும். பாதுகாப்பு விஷயத்திலும் இந்த கார் சிறந்ததாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
அந்தவகையில், எளிதில் தீ பிடிக்காத 5.6 kWh எல்எஃப்பி வகை பேட்டரி பேக்கே இந்த ராபின் எலெக்ட்ரிக் மைக்ரோ காரில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த வாகனத்தை விங்ஸ் இவி பலகட்ட சோதனைக்கு உட்படுத்தி இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. அந்தவகையில், காரை மோதல் ஆய்விற்கும் உட்படுத்தி இருப்பதாக தெரிகின்றது. அனைத்திலும் வெற்றி பெற்ற நிலையிலேயே தற்போது அது விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகள் தொடங்கி இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த காரை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இப்போதே அதை அதிகாரப்பூர்வமாக உற்பத்திக்கான அனுமதி கிடைத்துள்ளது. எனவே விரைவில் இந்த வாகனம் சந்தையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்ததுதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








