பைக்குகளுக்கு செக்... 2 இருக்கைகள் மட்டுமே கொண்ட இ-காரை உற்பத்தி செய்ய அனுமதி கிடைச்சிருச்சு!
இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கின்ற வகையில் 2 இருக்கைகள் வசதிக் கொண்ட காரை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை ஓர் நிறுவனம் அராய் (ARAI) இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விங்ஸ் இவி (Wings EV), இதுவே அந்த அனுமதியைப் பெற்ற நிறுவனம் ஆகும். இரண்டு இருக்கைகள் மட்டுமே கொண்ட எல்7 (L7) வகை மைக்ரோ ரக காரை (Micro Car)-யே உருவாக்க இருக்கின்றது. இந்த காருக்கு ராபின் (Robin) என பெயர் சூட்டப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மைக்ரோ ரக கார் விற்பனைக்கு வரும் பட்சத்தில் இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அது மாறும். குறிப்பாக, மோட்டார்சைக்கிள்களுக்கு இதன் வருகை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இரண்டு இருக்கைகளை மட்டுமே இந்த கார் கொண்டிருக்க போவதால் அதை நிறுத்த பெரிய அளவில் இட வசதி தேவைப்படாது.

அதேபோல், இரண்டு சக்கர வாகனங்களைப் போல குட்டியான தெருக்களிலும் இதனால் புகுந்து பயணிக்க முடியும். இதனால்தான் இந்த வாகனத்தின் வருகை டூ-வீலர்களுக்கு மிகப் பெரிய அளவில் சவால்விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இது நான்கு சக்கரங்களைக் கொண்டிருந்தாலும், இது கார் அல்ல என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாகன உலகில் இந்த வகை வாகனத்தை குவாட்ரிசைக்கிள் வகை வாகனம் என்று அழைப்பர். ராபின், மணிக்கு 60 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. அதேவேளையில், வெறும் 5 செகண்டுகளிலேயே இந்த வாகனம் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிடும் என்றும் கூறப்படுகின்றது.
மேலும், இதில் ஒரு முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியுமாம். இதற்காக 5.6 kWh திறன் கொண்ட எல்எஃப்பி (LFP) வகை பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அதிக வெப்பத்தை தாங்கும் திறன் கொண்டது என கூறப்படுகின்றது.
இது மிகவும் மெல்லிய மற்றும் உயரமான பேட்டரியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. உயரம் 69 மிமீ என கூறப்படுகின்றது. இதேபோல், இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது. எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்த வரை ராபின் குவாட்ரிசைக்கிள் எலெக்ட்ரிக் வாகனத்தில் 6 kW திறன் கொண்ட பிஎல்டிசி ஹப் மோட்டாரே பயன்படுத்தப்பட இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 282 என்எம் டார்க் வரை வெளியேற்றும். இரண்டு பேர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வகையில் இந்த வாகனத்தை விங்ஸ் இவி தயார் செய்திருந்தாலும், அதை தாராளமான இட வசதிக் கொண்டதாகவும் வடிவமைத்திருக்கின்றனர். 2250 X 945 X 1560 என்கிற அளவுகளைக் கொண்ட வாகனமாகவே ராபினை அது வடிவமைத்திருக்கின்றது.
நான்கு கதவுகள் இந்த வாகனத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. சுலபமாக பயணிகள் மற்றும் டிரைவர் ஏறி, இறங்குவதற்கு ஏதுவாக அதை அவர்கள் வழங்கி இருக்கின்றனர். இந்த வாகனம் சுமார் 2 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையிலேயே விற்பனைக்கு வரும் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தகைய மலிவு விலை வாகனத்தை தயாரிப்பதற்கான அனுமதியையே விங்ஸ் இவி தற்போது அராயிடம் இருந்து பெற்றிருக்கின்றது. விரைவில் இதற்கான புக்கிங் பணிகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, அடுத்து ஆண்டு இறுதிக்குள் இதன் டெலிவரி பணிகளும் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது. விங்ஸ் இவி இந்த வாகனத்தின் உற்பத்தி ஆலையை இந்தூரிலேயே அமைத்துள்ளது.
அங்கிருந்தே இந்தியா முழுவதிற்கும் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றன. ராபின் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இ, எஸ் மற்றும் எக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இந்த வாகனம் பாதுகாப்பு விஷயத்தில் மேம்பட்டதாகவே இருக்கும் என கூறப்படுகின்றது.
ஆனால், இவ்வளவு குட்டி கார் எந்த அளவிற்கு பாதுகாப்பு தரும் என்பதில் சற்று சந்தேகமே. அதேவேளையில், நிறுவனம் இதை முழுமையாக மோதல் ஆய்விற்கு உட்படுத்தியே விற்பனைக்குக் கொண்டு வரும் என தெரிகின்றது. தொடர்ந்து பிரீமியமான ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக டிஜிட்டல் திரை, பன்முக கன்ட்ரோல்கள் கொண்ட ஸ்டியரிங் வீல் மற்றும் சன் ரூஃப் உள்ளிட்ட அம்சங்களும் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே மின்சார வாகன பிரியர்களையும், இரண்டு சக்கர வாகன காதலர்களையும் கவரக் கூடிய ஓர் வாகனமாக விங்ஸ் இவியின் இந்த மைக்ரோ கார் சந்தையைக் களம் காண இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும் டாடா நானோ இல்லாத குறையை தீர்த்து வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








