கில்லி படம் மாதிரி... எத்தனை முறை ரீ-ரிலீஸ் செய்தாலும் பந்தயம் அடிக்கும் கார்கள்... இலாபம் கொட்டுது!!
ஒரு சில திரைப்படங்களை எத்தனை முறை பார்த்தாலும் புதியதாக பார்ப்பது போன்ற உணர்வை தரும். இதனாலேயே சில திரைப்படங்கள் பல வருடங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகளில் திரையிடப்படுவதை பார்த்திருப்பீர்கள். அதுபோன்று, மார்க்கெட்டில் இருந்து நிறுத்தப்பட்டு சில காலத்திற்கு பின் ஒரு சில கார்கள் மீண்டும் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் ஹைலைட் என்னவென்றால், அவ்வாறு மீண்டும் கொண்டுவரப்பட்ட கார்களில் சில மாடல்கள் மீண்டும் மக்கள் மத்தியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளன. அத்தகைய கார்களுள் 7 கிளாசிக் கார்களை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
டாட்ஜ் சேலஞ்சர் (Dodge Challenger): டாட்ஜ் கார்கள் எதுவும் இதுவரையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது கிடையாது. ஆனால், அமெரிக்காவில் இவை மிக பிரபலமானவை. குறிப்பாக, டாட்ஜ் சேலஞ்சர் கார் 1970 சமயங்களில் அமெரிக்காவில் விற்பனையில் பட்டையை கிளப்பிக் கொண்டிருந்தது. செவ்வக வடிவில் உருவாக்கப்பட்ட சேலஞ்சர் காரை மீண்டும் 2008ஆம் ஆண்டில் டாட்ஜ் நிறுவனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.

ஃபியாட் 500 (Fiat 500): உலகளவில் ஏழை, எளியோருக்கு ஏற்றதாக கருதப்பட்ட கார்களுள் ஒன்று இதுவாகும். வெறும் 2 கதவுகளை மட்டுமே கொண்ட காம்பெக்ட்டான ஹேட்ச்பேக் கார் ஆகும். 2000- 2010 சமயங்களில் கிளாசிக் கார்களை வாங்கும் டிரெண்ட் உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக ஃபியட் நிறுவனம் அதன் பிரபலமான 500 ஹேட்ச்பேக் காரை 2007ஆம் ஆண்டில் மீண்டும் அறிமுகம் செய்தது. இப்போதும் 4 கதவுகளுடன் ஃபியாட் 500 விற்பனை செய்யப்படுகிறது.

ஃபோர்டு மஸ்டங் ஜிடி (Ford Mustang GT): உலகில் மிக நீண்ட வருடங்களாக விற்பனையில் இருக்கும் கார் ஃபோர்டு மஸ்டங் ஆகும். 1964இல் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்டங் இப்போதுவரையில் விற்பனையில் உள்ளது. இடையில் 2005, 2015 மற்றும் கடைசியாக 2023ஆம் ஆண்டுகளில் மிக பெரிய அளவில் ஃபோர்டு மஸ்டங் காரின் தோற்றம் மேம்படுத்தப்பட்டது. 2023இல் அறிமுகம் செய்யப்பட்ட மஸ்டங் காரில் டார்க் ஹார்ஸ் என்கிற புதிய வேரியண்ட் கொண்டுவரப்பட்டது.

ஃபோர்டு ஜிடி (Ford GT): 1967ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரபலமான லேமேன்ஸ் எண்டூரன்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்று பலரது கவனத்தை பெற்ற ஜிடி40 பந்தய காரின் 50ஆம் ஆண்டு நிறைவை நினைவுக்கூரும் விதமாக 2017ஆம் ஆண்டில் ஃபோர்டு ஜிடி அறிமுகம் செய்யப்பட்டது. 1967இல் ஜிடி40 பந்தய கார் எவ்வாறான தோற்றத்தை கொண்டிருந்ததோ கிட்டத்தட்ட அதேபோன்றதான தோற்றத்தில் ஃபோர்டு ஜிடி வடிவமைக்கப்பட்டது.
செவ்ரோலெட் கமரோ (Chevrolet Camaro): செவ்ரோலெட் நிறுவனத்தின் இந்த காரை நம் இந்தியாவில் பலர் அறியாமல் இருக்கலாம். ஆனால், 2007இல் வெளிவந்த பிரபலமான டிரான்ஸ்ஃபார்மர்ஸ் திரைப்படத்தில் ரோபோட் ஆக மாறுவது போல் காட்டப்படுவது இந்த செவ்ரோலெட் கார் ஆகும். 2010ஆம் ஆண்டில் கமரோ காரை மீண்டும் செவ்ரோலெட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்தது. மேலே கண்ட ஃபோர்டு மஸ்டங் மற்றும் டாட்ஜ் சேலஞ்சர் கார்களுக்கு போட்டியாக இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது.

மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்.எஸ் ஏஎம்ஜி (Mercedes-Benz SLS AMG): 1960ஆம் காலக்கட்டத்தில் மெர்சிடிஸின் 300 எஸ்.எல் குல்விங் கார் உலகளவில் மிக பிரபலமானதாக இருந்தது. உலகின் மிக வேகமான கார் என்று எடுத்து பார்த்தால், அதில் மெர்சிடிஸ்-பென்ஸ் 300 எஸ்.எல் காரும் உள்ளது. மெர்சிடிஸ் நிறுவனத்தை உலகம் முழுவதும் பிரபலமடைய செய்த கார்களுள் முக்கியமானது 300 எஸ்.எல் ஆகும். இத்தகைய காரை மீண்டும் கொண்டுவரும் முயற்சியாக, கடந்த 2009ஆம் ஆண்டில் எஸ்.எல்.எஸ் ஏஎம்ஜி கார் அறிமுகம் செய்யப்பட்டது.

லம்போர்கினி கவுண்டச் எல்.பி.ஐ 800-4 (Lamborghini Countach LPI 800-4): 1980, 90ஆம் காலக்கட்டத்தில் விற்பனையில் இருந்த லம்போர்கினியின் பிரபலமான கவுண்டச் கார் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு 50 வருடங்களை சில வருடங்களுக்கு முன் நிறைவு செய்தது. இதனை நினைவுக்கூறும் விதமாக, 2021ஆம் ஆண்டில் புதிய கவுண்டச் எல்.பி.ஐ 800-4 கார் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், புதிய கவுண்டச் எல்.பி.ஐ 800-4 காரை அவேண்டேடார் காரின் அடிப்படையில் லம்போர்கினி வடிவமைத்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் கார் ஆர்வலர்கள் பலருக்கு பழமையான கார்களே அவர்கள் விரும்பக்கூடியவையாக உள்ளன. அதற்காக, இப்போது உள்ள மாடர்ன் கார்கள் தரத்தில் குறைந்தவை என சொல்ல முடியாது. ஏனெனில், இப்போது உள்ள இளைஞர்கள் இன்னும் 20, 30 வருடங்கள் கழித்து, இப்போதுள்ள கார்களை புகழ்வர். இந்த தொகுப்பில் கூறப்பட்டுள்ள 7 கார்களில் உங்களது ஃபேவரட் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









