பென்ஸ் கார்களுக்கு இந்தியாவில் எப்போதும் நல்ல டிமாண்ட்! சீனாவை விட அதிகமா நம் நாட்டை மெர்சிடிஸ் நம்பியிருக்கு!
மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவின் முன்னணி லக்சரி கார் நிறுவனங்களுள் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மெர்சிடிஸ் விளங்குகிறது. ஜெர்மனியை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு நம் இந்தியா மிக முக்கியமான சந்தையாக விளங்குகிறது. அதேபோல், நம் அண்டை நாடான சீனாவும் மெர்சிடிஸின் பிரதானமான சந்தைகளுள் ஒன்றாகும். ஆனால், சமீப காலமாக சீனாவில் மெர்சிடிஸின் ஆதிக்கம் குறைந்து வருவதால், உலகளவில் மெர்சிடிஸ் நிறுவனத்தின் இலாபம் சுமார் 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
மக்கள் தொகை தான் எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திலும் முக்கியமான அடிப்படை விஷயமாக உள்ளது. இதன் மூலமாகவே கடந்த சில வருடங்களில் இந்தியாவின் பொருளாதாரம் பெரிய அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், மக்கள் தொகை அதிகரிப்பு ஒரு சில விவகாரங்களில் பிரச்சனையாக இருந்தாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது நம் மத்திய அரசின் நோக்கமாக இல்லை.

இந்தியாவை போன்று, சீனாவும் அதன் அதிக மக்கள் தொகையினால் உலகின் முக்கியமான வணிக சந்தையாக விளங்குகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக சீன சந்தையின் போக்கு மாறி வருகிறது. இதன் விளைவாக, சீன சந்தையில் பலத்த தடுமாற்றத்தை கண்டுவருவதாக வெளிப்படையாக தெரிவித்துள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், சீன கார்கள் சந்தையின் இந்த மாற்றத்தினால் உலகளவில் தங்களது இலாபம் 50%-க்கும் அதிகமாக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி பார்க்கும்போது, இந்த 2024ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து செப்டம்பர் வரையில் உலகளவில் 172 கோடி யூரோ நிகர இலாபத்தை மெர்சிடிஸ்-பென்ஸ் பெற்றுள்ளது. இந்திய ரூபாயில் இதன் தற்போதைய மதிப்பு ரூ.15,616 கோடி ஆகும். கடந்த 2023ஆம் ஆண்டில் இதே 3 மாதங்களில் இதனை காட்டிலும் டபுள் மடங்கிற்கும் அதிகமான இலாபத்தை மெர்சிடிஸ் பெற்றிருந்தது.

2023 ஜூலை- செப்டம்பரில் 370 கோடி யூரோ (ரூ.33.592 கோடி) நிகர இலாபத்தை மெர்சிடிஸ் நிறுவனம் பெற்றிருந்தது. அதேபோல், மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாயும் 3450 கோடி யூரோவாக (ரூ.3 லட்சத்து 13,228 கோடி) குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டில் இதே 3 மாதங்களில் சம்பாதித்த வருவாயை விட 7% குறைவு என மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முக்கிய காரணம், சீன சந்தை ஆகும். மெர்சிடிஸ் வாகனங்களின் டெலிவிரிகள் 3% குறைந்துள்ளது; குறிப்பாக, சீனாவில் 13% குறைந்துள்ளது. நல்ல இலாபத்தை தரும் லக்சரி கார்கள் விற்பனையில் உலகளவில் 12% வீழ்ச்சியை மெர்சிடிஸ் கண்டுள்ளது. சீன நாட்டில் மாறிவரும் மார்க்கெட் சூழலும், அதிகரித்துவரும் போட்டியும் தான் இதற்கு முக்கியமான காரணம் என மெர்சிடிஸ் ஓப்பனாக தெரிவித்துள்ளது.

மெர்சிடிஸின் முதன்மை நிதி அதிகாரி ஹாரல்ட் வில்ஹெல்ம், "எங்களது இலக்கை நெருங்கவில்லை" என தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக இந்த 2024இல் மெர்சிடிஸ் கார்கள் விற்பனையை எடுத்து பார்த்தாலும் கடந்த ஆண்டை விட குறைவாக உள்ளது. 2024ஆம் ஆண்டின் கடைசி 3 மாதங்களிலும் மெர்சிடிஸின் இந்த நிலைமை மாறாது என்றே கூறப்படுகிறது.
ஐரோப்பாவில் மக்களின் வசிப்பிடத்திற்கு தேவையான செலவு தொகை அதிகரித்து வருவது, அதன் தொடர்ச்சியாக அங்கு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறும் வேகம் குறைவது மற்றும் சீன சந்தையின் மாற்றம் உள்ளிட்டவை எல்லாம் சேர்ந்து மெர்சிடிஸ் நிறுவனத்தை மிகவும் நெருக்கி உள்ளன. அதுமட்டுமின்றி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலக்ட்ரிக் கார்களுக்கு சில நாடுகளில் அதிக வரி விதிக்க துவங்கியுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமெரிக்காவுக்கு அடுத்து உலகின் 2வது பெரிய சந்தையாக சீனா விளங்குகிறது. அத்தகைய நாட்டில் கார்கள் விற்பனையில் சரிவு ஏற்படும்போது அது மெர்சிடிஸ் போன்ற உலகின் மிக பெரும் நிறுவனங்களை கூட பாதிக்கிறது. அதுமட்டுமில்லாமல், சீனாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விற்பனை போட்டியும் மெர்சிடிஸ் நிறுவனத்திற்கு சவாலாக உள்ளது.


Click it and Unblock the Notifications









