வெறும் 230 நாளில் 1 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! அப்படி இதுல என்ன இருக்குது தெரியுமா?
ஷாவ்மி இவி நிறுவனம் தனது ஒரு லட்சமாவது எஸ்யூ 7 என்ற எலெக்ட்ரிக் காரை தயாரித்து புதிய மைல் கல்லை எட்டி படித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக இந்த நிறுவனம் தனது எலெக்ட்ரிக் காரை தயாரித்து விற்பனை செய்து வரும் நிலையில், சுமார் 230 நாட்களிலேயே இவ்வளவு பெரிய சாதனையை படைத்துள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு மிகப்பெரிய சாதனையை நிறுவனம் படைத்தது எப்படி என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
சீனாவின் பிஜிங் தலைநகராகக் கொண்ட நிறுவனம்தான் ஷாவ்மி நிறுவனம் செல்போன் தயாரிப்பில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. உலகில் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் நிலையில், இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களையும் தயாரிக்கும் களத்தில் இறங்கியது. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதமே இந்நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான எஸ்யூ 7 என்ற எலெக்ட்ரிக் காரை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த கார் டெஸ்லா நிறுவனத்தின் மாடல் 3 காருக்கு போட்டியாக தயாரிக்கப்பட்டு இருந்தது. இதனால் நிறுவனத்திற்கு போட்டியாக இந்த கார் களம் இறங்கி இருப்பதாக பல பேசினார்கள்.
ஷாவ்மி நிறுவனத்தின் எஸ்யூ 7 காரைப் பொறுத்தவரை மொத்தம் மூன்று விதமான வேரியண்ட்களில் இருக்கிறது. ஸ்டாண்டர்டு, ப்ரோ, மேக்ஸ் ஆகிய வேரியன்ட்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த காரின் விலையை பொறுத்தவரை இந்திய மதிப்பில் ரூபாய் 25 லட்சம் முதல் ரூபாய் 35 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 15ம் தேதி இந்நிறுவனம் தனது எஸ்யூஸ் 7 காரின் அல்ட்ரா என்ற புதிய வேரியண்ட்டை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த கார் வரும் 2025ம் ஆண்டு மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகமாக வாய்ப்பிருக்கிறது. இந்த காரின் விலையை பொருத்தவரை இந்திய மதிப்பில் ரூபாய் 95 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷாவ்மி நிறுவனம் இந்த 2024ம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் கார்களை விற்க வேண்டும் என்று இலக்க வைத்திருந்த நிலையில், அந்த இலக்கை இந்த நவம்பர் மாதமே எட்டியுள்ளது. சமீபத்தில் தனது ஒரு லட்சமாவது காரை தயாரித்து வெளியிட்டு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தனது டார்கெட்டை மாற்றி அமைத்து இந்த 2024ம் ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் கார்களை தயாரிக்க முடிவு செய்துள்ளது.

ஷாவ்மி நிறுவனம் தனது வாகனத்தை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது முதல் ஒவ்வொரு மாதமும் தனது விற்பனையை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் மாதம் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாக்கின. கடந்த அக்டோபர் மாதம் 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மாதம் 24 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் விற்பனையாகும் என கணக்கிடப்பட்டுளளது.
ஷாவ்மி நிறுவனம் பீஜிங் பகுதியில் ஆலை அமைத்து இந்த வாகனங்களை தயாரித்து வருகிறது. தற்போது உள்ள ஆலையில் ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்கள் தயாரிக்க முடியும் என்ற நிலையில், தனது இரண்டாவது ஆலையை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பட்சத்தில் அந்நிறுவனத்தின் தயாரிப்பு எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
சீனா உலகின் மிகப்பெரிய வாகன விற்பனை சந்தையில் முக்கிய நாடாக இருப்பதால் இந்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்ய முடிகிறது. ஷாவ்மி நிறுவனத்தின் வாகனங்கள் சற்று விலை அதிகமாக இருந்தாலும், இதில் உள்ள அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் மக்களை ஈர்ப்பதால் இந்த காரின் விற்பனை அதிகரித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டெஸ்லா நிறுவனத்தின் வளர்ச்சியை பார்த்து பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு களமிறங்கினார்கள். இதில் ஷாவ்மி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது என்று சொல்லலாம். இந்நிறுவனம் சீனாவை தாண்டி உலக அளவிலும் தனது வாகனங்களை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இந்தியாவும் அதற்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









