உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த சியோமி (Xiaomi) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. எவ்வளவு ரூபாய்க்கு இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது? அதன் சிறப்பம்சங்கள் என்ன? உலகின் எந்தெந்த நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது? என்பது போன்ற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனத்திற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது சீன மின்சார கார் உற்பத்தி நிறுவனமான பிஒய்டி (BYD). இந்த நிலையில் டெஸ்லா (Tesla)-விற்கு இன்னும் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் விதமாக மற்றுமொரு சீன நிறுவனமான சியோமியும் அதன் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

முன்னதாக வீட்டு உபயோகப் பொருட்கள், ஸ்மார்ட்ஃபோன் மற்றும் முக்கிய மின்சாதன பொருட்கள் தயாரிப்பில் மட்டுமே முக்கியத்துவம் செலுத்தி வந்த இந்த நிறுவனம் தற்போது தன்னுடைய பார்வையை மின்சார வாகனத்தின் பக்கமும் திருப்பி இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தற்போது நிறுவனம் அதன் முதல் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
எஸ்யூ7 (SU7) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. இது முதல்கட்டமாக சீன சந்தையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். விரைவில் உலக நாடுகளிலும் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. ஆனால், இதுபற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் இதுவரை சியோமி வெளியிடவில்லை.

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் சியோமி எஸ்யூ7 விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்யூ7 (SU7), எஸ்யூ7 ப்ரோ (SU7 Pro) மற்றும் எஸ்யூ7 மேக்ஸ் (SU7 Max) ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில் ஆரம்ப நிலை வேரியண்டே ஓர் முழு சார்ஜில் 700 கிமீ ரேஞ்ஜை தரும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
மலிவு விலையில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கும் அடிநிலை தேர்வே மிக அதிக ரேஞ்ஜை தரும் என்பது மின்சார கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், மின்சார வாகன உலகில் மிகப் பெரிய புரட்சியைச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கேற்ப, உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை இந்த கார் கிளப்பி இருக்கின்றது. எஸ்யூ7 தேர்வின் சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 73.6 kWh திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரும் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 220kW பவரையும், 400 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இவ்வளவு சூப்பரான பவரையும், ரேஞ்ஜையும் வழங்கக் கூடிய இந்த தேர்விற்கு 215,900 யுவான்களே விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் 25.36 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது தோராய மதிப்பு மட்டுமே ஆகும். இரண்டாவது இடத்தில் எஸ்யூ7 ப்ரோ இருக்கின்றது. இதற்கு 245,900 யுவான்கள் (ரூ. 28.85 லட்சம்) நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 830 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக 94.3 kWh பேட்டரி பேக் எஸ்யூ7 ப்ரோவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இதனை வெறும் 15 நிமிடம் சார்ஜ் செய்தாலே 350 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. உயர்நிலை தேர்வான எஸ்யூ7 மேக்ஸிற்கு 299,900 யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் முழு சார்ஜில் 800 கிமீ ரேஞ்ஜை தரும்.
இதற்காக 101 kWh கிரின் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை அதி-வேக சார்ஜிங் கருவியைக் கொண்டு சார்ஜ் செய்யும்பட்சத்தில் வெறும் 15 நிமிடங்களில் 510 கிமீ தூரம் பயணிப்பதற்கான ரேஞ்ஜை ஏற்றிக் கொள்ள முடியும். இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளைத் தாங்கியதாகவே சியோமியின் எஸ்யூ7 எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, தொழில்நுட்பம் விஷயத்தில் அனைவரையும் வாயடைக்கச் செய்திருக்கின்றது இந்த கார் மாடல். அந்தவகையில், 4.6 லிட்டர் அளவுள்ள சிறிய ஃப்ரிட்ஜ், ஓர் லேப்டாப்பை உள்ளடக்கிக் கொள்ளும் வகையில் பெரிய குளோவ் பாக்ஸ் ஆகியவை இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, ஐந்து திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஓர் திரை 16.1 அங்குலம் கொண்டது. அது ஸ்நேப்டிராகன் 8295 வசதிக் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகும். சியோமி ஹைப்பர் ஓஸ் மற்றும் ஒரே தொடுதலில் ஃபோனின் திரையை மிர்ரர் செய்யும் வசதிக் கொண்ட திரையும் இந்த காரில் வழங்கப்பட்டு இருப்பதாக சியோமி தெரிவித்து இருக்கின்றது.
இத்துடன், டிஜிட்டல் டிரைவர் திரையும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இரண்டு டேப் வகை திரைகள் பயணிகளுக்காக இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும். இது பயணிகளின் பொழுதுபோக்கிற்காக வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன், 56 அங்குல ஹெட்ஸ் அப் திரை, ஆக்டீவ் சீல் போல்ஸ்டர், ஆட்டோ பைலட் மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் ஆகியவையும் சியோமி எஸ்யூ7 இல் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, மிகுந்த பொழுதுபோக்கான ரைடு அனுபவத்தைப் பெறும் விதமாக இந்த எலெக்ட்ரிக் காரில் 25 ஸ்பீக்கர்கள் கொண்ட டால்ஃபி அட்மாஸ் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், எஸ்யூ7 எலெக்ட்ரிக் காரில் பயணிக்கும்போது மிகுந்த அலாதியான ரைடு அனுபவம் கிடைக்கும் என தெளிவாக தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சியோமி எலெக்ட்ரிக் காரின் வருகை டெஸ்லாவிற்கு மிகப் பெரிய அளவில் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. நிறுவனம் ஏற்கனவே விற்பனைக்கு குறைவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதன் உற்பத்தி பணிகளைக் குறைத்திருக்கின்றது. மேலும், வேலை ஷிஃப்ட்டுகளையும் குறைத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









