என்னது சியோமி எலெக்ட்ரிக் கார் இந்தியா வந்திருக்கா? இனிமேதான் ஆட்டமே இருக்கு! மார்கெட்டே ஒரு வழியாக போகுது!
உலக புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி (Xiaomi), எலெக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தியில் களமிறங்கி வெற்றிநடைப் போட்டுக் கொண்டிருக்கின்றது. நிறுவனத்தின் ஸ்மார்ட்ஃபோன்களுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மிக அமோகமான வரவேற்பு இதன் எலெக்ட்ரிக் காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், இப்போதைக்கு சீன சந்தையில் மட்டுமே சியோமி அதன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணியில் சியோமி களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக சியோமி நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் காரை இந்தியா கொண்டு வந்து இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இந்த காரை, நிறுவனம் அதன் பார்ட்னர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்குக் காட்சிப்படுத்தவே கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகின்றது. பெங்களூரில் வைத்தே சியோமி தன்னுடைய எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்த இருக்கின்றது.

அதேவேளையில், இந்த காட்சிப்படுத்தலைத் தொடர்ந்து விரைவில் அந்த எலெக்ட்ரிக் காரை சியோமி இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என கூறப்படுகின்றது. இதற்கான தொடக்க புள்ளியாகவே எலெக்ட்ரிக் காரை காட்சிப்படுத்த சியோமி திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த காட்சிப்படுத்தலின்போது கிடைக்கும் வரவேற்பைப் பொருத்தே அக்காரை சியோமி விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பிளானை போடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இதுபற்றிய எந்தவொரு தகவலையும் சியோமி இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்திய மின்சார வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவே அது சந்தையில் நுழையும் எனில் அதற்கு சாதகமான சூழலே இந்தியாவில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த சான்றாக பிஒய்டி நிறுவனம் இருக்கின்றது.
இந்த நிறுவனத்தின் அட்டோ 3, இ6 ஆகிய கார் மாடல்களுக்கு இந்தியாவின் சொகுசு மற்றும் பிரீமியம் கார் பிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பையே இந்த சியோமியின் எலெக்ட்ரிக் காருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், சியோமி எலெக்ட்ரிக் கார் சந்தையில் விற்பனைக்கு வந்தால்தான் அதற்கு என்ன மாதிரியான டிமாண்ட் கிடைக்கும் என்பதை நம்மால் அறிய முடியும்.
சியோமியின் இந்த எலெக்ட்ரிக் கார் ஒட்டுமொத்தமாக 3 விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. எஸ்யூ7 (SU7), எஸ்யூ7 ப்ரோ (SU7 Pro) மற்றும் எஸ்யூ7 மேக்ஸ் (SU7 Max) ஆகியவையே அவை ஆகும். இதில் ஆரம்ப நிலை வேரியண்டாக எஸ்யூ7 இருக்கின்றது.
அதற்கு 215,900 யுவான்கள் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் தோராயாமாக ரூ. 25.36 லட்சமே எஸ்யூ7 தேர்வின் விலை ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 700 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேவேளையில், எஸ்யூ7 ப்ரோவில் ஓர் முழு சார்ஜில் 830 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
ஆனால், உயர்நிலை தேர்வான எஸ்யூ7 மேக்ஸோ ஓர் முழு சார்ஜில் 800 கிமீ ரேஞ்ஜையே வழங்கும். மிக அதிக கருவிகளைக் கொண்டிருப்பதாலும், அதீதிறனை வெளியேற்றும் என்பதாலும் மற்ற தேர்வுகளைக் காட்டிலும் சற்று குறைவான ரேஞ்ஜை எஸ்யூ7 மேக்ஸ் வெளியேற்றக் கூடியதாக இருக்கின்றது.
அந்தவகையில், 4.6 லிட்டர் அளவுள்ள சிறிய ஃப்ரிட்ஜ், ஓர் லேப்டாப்பை வைத்துக் கொள்கின்ற அளவிற்கு பெரிய குளோவ் பாக்ஸ், 5 திரைகள் உள்ளிட்ட அம்சங்கள் இந்த எலெக்ட்ரிக் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று இன்னும் பல்வேறு அம்சங்களை சியோமி எஸ்யூ7 எலெக்ட்ரிக் கார் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் எலெக்ட்ரிக் கார் மாடலாக டாடா நெக்ஸான் இவி இருக்கின்றது. ஆனால், இந்த காருக்கு சியோமி எஸ்யூ7 காரின் வருகை எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், பிஒய்டி, எம்ஜி மற்றும் பிற சொகுசு கார் பிராண்டுகளின் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையில் மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தும் என யூகிக்க முடிகின்றது.


Click it and Unblock the Notifications








