இந்த காருக்கு பதிவெண்ணும் தேவயில்ல, லைசென்ஸும் தேவயில்ல.. பைக் விலையில் இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிடலாம்!
இந்தியாவில் ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்க வேண்டும் என்றாலே ரூ. 1 லட்சம் வரை கொடுக்க வேண்டியிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் ஒரு நபர் 1 முதல் 2 லட்சம் ரூபாய் செலவிலேயே இந்த எலெக்ட்ரிக் காரை வாங்கிவிட முடியும் என கூறி இருக்கின்றார். இது உண்மைதானா? அது எப்படி சாத்தியம் ஆகும் என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க் உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
யகுசா இவி (Yakuza EV) இது ஓர் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மின்வாகன உற்பத்தி ஆலை ஹரியானா மாநிலத்தில் உள்ளது. இதுதவிர, மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் உற்பத்தி ஆலைகளை அது செயல்படுத்தி வருகின்றது.

இந்த நிறுவனத்தின் தயாரிப்பே கரிஷ்மா (Karishma EV) ஆகும். இது ஓர் இரண்டு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இந்த காரையே ரூ. 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய்க்குள் வாங்கிவிட முடியும் என ஒருவர் தெரிவித்து இருக்கின்றார்.
இதை கூறியவர் வேறு யாருமல்ல யகுசா இவி பிராண்டின் டீலர் ஆவார். இந்த நிறுவனத்தின் மலிவு விலை தயாரிப்பை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலேயே அவர் இந்த வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கின்றார். பார்க்க மிகவும் குட்டியான தோற்றத்தைக் கொண்டிருக்கும் இந்த காரில் டிரைவருடன் சேர்த்து மூன்று பேர் வரை அமர்ந்து பயணிக்க முடியும்.
ஆட்டோவைவிட குட்டியான தோற்றத்திலேயே இந்த கார் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. என்னதான் குட்டியான தோற்றத்தில் இந்த கார் மாடல் இருந்தாலும் பார்க்க மிகவும் அழகானதாக காட்சியளிக்கின்றது. குறிப்பாக, தனித்துவமான தோற்றத்தை அதுக் கொண்டிருக்கின்றது. புதிய கிரில், பெரிய எல்இடி பகல் நேர மின் விளக்குகள், ஸ்டைலான அலாய் வீல் பலதரப்பட்ட சிறப்புகளை கரிஷ்மா தன்னுள் தாங்கி இருக்கின்றது.
எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கே வெறும் 25கிமீ முதல் 30 கிமீ வரை மட்டும்தான் என கூறப்படுகின்றது. எனவே இதை பதிவு செய்யவும் தேவையில்லை, மேலும், இந்த காரை ஓட்ட ஓட்டுநர் உரிமமும் தேவைப்படாது. 1250W எலெக்ட்ரிக் மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டாருக்கு ஓராண்டு வாரண்டியை நிறுவனம் வழங்குகின்றது. இந்த காலகட்டத்தில் மோட்டாரில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்ட முழுமையாக ரீ-பிளேஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பேட்டரி பேக்கை பொருத்தவரை 60v 45ah திறன் கொண்ட பேட்டரி பேக்கே கரிஷ்மா இவியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதில் ஓர் முழுமையான சார்ஜில் 50 கிமீ முதல் 60 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும். மேலும், இந்த பேட்டரி பேக்கை சார்ஜ் செய்ய 6 மணி நேரம் முதல் 7 மணி நேரமே போதுமானது என கூறப்படுகின்றது. பவர் ஸ்டியரிங், சிறிய டிஜிட்டல் திரை, ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பட்டன், ஓடோ மீட்டர், பவர் விண்டோ உள்ளிட்ட வசதிகளும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அனைத்து தரப்பு மக்களும் பயன்படும் நோக்கில் இந்த எலெக்ட்ரிக் காரை விற்பனைக்கு யகுசி விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதாக அதன் டீலர் தெரிவித்து இருக்கின்றது. இதன் துள்ளியமான விலையை அவர் அறிவிக்கவில்லை. சலுகையை பொருத்து ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரையில் அதன் விலை இருக்கும் என்று அவர் கூறியிருக்கின்றார். ஓர் பைக்கை வாங்கும் விலையில் இந்த காரை வாங்கிவிட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பார்க்க டாடா நானோ காரைப் போல் இருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் நானோவின் நினைவுகளை திரும்பக் கொண்டு வரும் வகையில் உள்ளது. விலையும் டாடா நானோவைப் போலவே மிகவும் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களின் விலையை 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது. இந்த நிலையிலேயே யாரும் நம்ப முடியாத விலையில் யகுசி கரிஷ்மா விற்பனைக்கு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








