500 பேருக்கு வேலை கிடைக்கும்... தொழிற்சாலை கொஞ்சம் பெருசு தான்!! இந்த வாகனங்களை உருவாக்குறது தான் வேலையே!
ஜென் மொபைலிட்டி (Zen Mobility) நிறுவனம் ஹரியானா மாநிலம், குருக்கிராமில் புதிய தொழிற்சாலையை திறந்துள்ளது. ஜென் மொபைலிட்டியின் இந்த தொழிற்சாலையை பற்றியும், இந்த தொழிற்சாலையில் உருவாக்கப்பட உள்ள ஜென் மொபைலிட்டியின் எலக்ட்ரிக் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த சில வருடங்களில் பல்வேறு புதிய இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அந்த வகையில், இந்தியன் மார்க்கெட்டில் வளர்ந்துவரும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம், ஜென் மொபைலிட்டி ஆகும். ஹரியானா மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஜென் மொபைலிட்டி அதன் முதல் எலக்ட்ரிக் வாகனத்தை 'மைக்ரோ பேட்' (Micro Pod) என்கிற பெயரில் கடந்த ஆண்டில் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், ஜென் மொபைலிட்டி நிறுவனம் அதன் முதல் தொழிற்சாலையை திறந்துள்ளது. தலைமையிடத்தை கொண்டுள்ள ஹரியானா மாநிலத்தின் குருக்கிராம், மனேசர் பகுதியில் தனது தொழிற்சாலையை ஜென் மொபைலிட்டி திறந்துள்ளது. மொத்தம் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்தை கொண்ட மெஷின்களை ஜென் மொபைலிட்டி நிறுவனம் நிறுவி உள்ளது.
இந்த தொழிற்சாலையினால் 500க்கும் அதிகமான நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என ஜென் மொபைலிட்டி தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சாலையில் ஜென் மைக்ரோ பேட் வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. தற்போதைக்கு இந்த ஒரு எலக்ட்ரிக் வாகனத்தை மட்டுமே ஜென் மொபைலிட்டி வடிவமைத்து உள்ளதால், இப்போதைக்கு மைக்ரோ பேட் வாகனங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ளன.
ஜென் மொபைலிட்டியின் புதிய தொழிற்சாலையில் முக்கிய சிறப்பம்சம் அதன் உற்பத்தி திறன் ஆகும். அதாவது, இந்த தொழிற்சாலையில் வருடத்திற்கு 50,000 மைக்ரோ பேட் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என ஜென் மொபைலிட்டி தெரிவித்துள்ளது. இந்த நிறுவனத்தின் மைக்ரோ பேட் வாகனங்கள் நகர்புறத்தில் பயன்படுத்துவதற்கு ஏற்றவையாக விளங்குகின்றன.
இந்த தொழிற்சாலைக்குள் ஆராய்ச்சி & மேம்பாட்டு மையத்தையும் ஜென் மொபைலிட்டி நிறுவனம் நிறுவியுள்ளது. இதன் மூலமாக, தனது எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களை வடிவமைக்கும் பணிகளை ஜென் மொபைலிட்டி மேற்கொள்ள முடியும். இதற்காக, வாகனங்களை சோதனை செய்யும் பகுதிகளும் ஜென் மொபைலிட்டியின் தொழிற்சாலையில் இடம்பெற்றுள்ளன.

இந்த டெஸ்ட்டிங் ஏரியாக்களில் ரோலர் டெஸ்ட்டிங் மற்றும் டைனோ டெஸ்ட்டிங் வேலைகளை ஜென் மொபைலிட்டியால் மேற்கொள்ள முடியும். இந்த இவி நிறுவனத்தின் மைக்ரோ பேட் வாகனங்களை பொறுத்தவரையில், இவை ஓர் கஸ்டமைஸ்ட் வாகனங்கள் ஆகும். அதாவது, 3 சக்கரங்கள் மற்றும் டிரைவருக்கான கேபின் உடன் மட்டுமே இந்த வாகனம் ஆரம்பத்தில் உருவாக்கப்படும்.
பின்னர், வாகனத்தை ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த எலக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கி தரப்படும். இதன் காரணமாகவே, இந்த வாகனங்களுக்கு 'மைக்ரோ பேட்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த கஸ்டமைசேஷன் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்றப்படி தொழிற்சாலையை ஜென் மொபைலிட்டி வடிவமைத்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜென் மொபைலிட்டியின் மைக்ரோ-மொபைலிட்டி வாகனங்களுக்கு வரவேற்பும், தேவையும் அதிகரித்து வருகிறது. தற்போது தொழிற்சாலை திறக்கப்பட்டு இருப்பதும் அந்த தேவையை வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது. அத்துடன், எதிர்காலத்தில் புது, புது எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்குவதற்காக R&D மையத்தையும் இந்த தொழிற்சாலை தனது வளாகத்திற்குள் கொண்டிருப்பதை சிறப்பானதாக பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








