36 வருஷம் கழிச்சும் குதிரை மாதிரி ஓடும் பழைய மாருதி கார்! 4 ஓனர்களிடம் கை மாறிடுச்சி
நம் நாட்டு மிடில்-கிளாஸ் மக்களின் கார் ஆசையை நிறைவேற்றிய கார், மாருதி 800 (Maruti 800) ஆகும். அதாவது, குறைந்த விலையில், கச்சிதமாக சிறிய அளவில் எவரொருவராலும் வாங்கக்கூடிய காராக மாருதி 800 அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது எல்லாம் மாருதி 800 கார்களை அதிகமாக காண முடிவதில்லை. மாருதி சுஸுகி ஆல்டோ கார்கள் அந்த இடத்தை நிரப்பிவிட்டன. இருப்பினும், இங்கு ஒரு மாருதி 800 இன்னமும் நல்ல கண்டிஷனில் ஓடிக் கொண்டுள்ளது. அதிலிலும், இந்த குறிப்பிட்ட பழைய மாருதி 800 காரில் மேலும் ஒரு சிறப்பம்சமும் உள்ளது.
அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க உள்ளோம். மாசு உமிழ்வு கட்டுப்பாட்டு விதிமுறைகளினாலும், மாடர்ன் தரத்திலான கார்களை வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்க ஆரம்பித்ததாலும் மாருதி 800 காரின் பயணம் முடிவுக்கு வந்தது. 2014ஆம் ஆண்டு வரையில் மாருதி 800 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.

ஒரு சமயத்தில் தெரு முழுக்க ஓடிய கார் என்றாலும், இவ்வாறான ஒரு மாருதி 800 காரை பார்த்திருக்க மாட்டீர்கள். ஏனெனில், இந்த குறிப்பிட்ட மாருதி 800 காரில் இரு ஆக்ஸலரேட்டர் பெடல்கள் உள்ளன. இரு ஆக்ஸலரேட்டர் பெடல்கள் உடன் எந்தவொரு காரும் விற்பனை செய்யப்படுவது இல்லை. ஆனால், வலது காலில் பிரச்சனை உள்ளவர்களுக்காக மட்டும் இவ்வாறு இரு ஆக்ஸலரேட்டர் பெடல்கள் உருவாக்கப்படுகின்றன.
நாம் இந்த தொகுப்பில் பார்க்கும் மாருதி 800 காரின் முதல் உரிமையாளருக்கும் காலில் அப்படி ஏதோ ஒரு பிரச்சனை இருந்துள்ளது. இதனால், தனது பயன்பாட்டிற்கு என பிரத்யேகமாக ஜப்பானில் இருந்து இந்த டபுள் ஆக்ஸலரேட்டர் பெடல்களை கொண்ட மாருதி 800 காரை இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளார்.

இதுபோல் அந்த காலத்தில் இந்தியாவில் மேலும் சிலரும் இவ்வாறான மாருதி 800 காரை வைத்திருந்தனர். இந்த காரில் சிவிடி டிரான்ஸ்மிஷன் உள்ளதால், நகர்புற சாலைகளில் காரை ஓட்டுவது எளியதாக உள்ளதாக தெரிவிக்கும் இந்த மாருதி 800 காரின் தற்போதைய ஓனர், இந்த காரை பார்க் செய்வதும் எளியதாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த காரில் உள்ள 'ஸ்போர்ட்' டிரைவிங் மோடில் காரின் பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கும் காரின் ஓனர், இந்த காரை தன்னிடம் இருந்து பெறுவதற்கு சிலர் சுமார் ரூ.18 லட்சம் வரையில் கூட செலவு செய்ய தயாராக உள்ளதாகவும், இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள நம்பர் பிளேட்டின் வாகன பதிவெண்ணை பெறுவதற்காக மட்டும் ரூ.1.5 லட்சம் வரையில் செலவு செய்ய தயாராக உள்ளனராம்.
இந்த பழைய மாருதி 800 கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், 2 ஆக்ஸலரேட்டர் பெடல்கள் உடன் கார் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஓட்டி காண்பித்துள்ளனர். மேலும், காரின் வாகன பதிவு அட்டையையும் பார்க்க முடிகிறது. அதில், வாகனம் 1989 மே மாதத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மாருதி 800 கார் பழைய சட்டீஸ்கர் மாநில நம்பர் பிளேட்டை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன பதிவு அட்டையை வைத்து பார்க்கும்போது இந்த கார் இதுவரையில் 4 உரிமையாளர்களிடம் கை மாறியுள்ளது. 1989இல் பதிவு செய்யப்பட்ட கார் என சொன்னால் நம்பவே முடியவில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு இந்த பழைய மாருதி 800 காரின் தோற்றம் இப்போதும் புத்துணர்ச்சியானதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








