20 வருட பழைய கார் என்றதும் ஓனரால் கூட சுத்தமா நம்ப முடியல... இந்த மாருதி காரை ரோட்டில் பார்ப்பது மிகவும் அரிது
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து கடந்த காலங்களில் பல்வேறு தரமான கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, எஸ்டீம் (Esteem)-ஐ சொல்லலாம். கார்கள் உற்பத்தியில் ஓரளவிற்கு நல்ல அனுபவம் பெற்ற பின் 1990ஆம் காலக்கட்டத்தில் மாருதி சுஸுகி உருவாக்கிய கார் எஸ்டீம் ஆகும். அந்த சமயத்தில் வாங்கப்பட்ட 20 வருடம் பழமையான எஸ்டீம் காரை இங்கு ஒருவர் ஷோரூமில் இருந்து கொண்டுவரப்பட்டது போல் புத்தம் புதியதாக மாற்றியுள்ளார். இந்த குறிப்பிட்ட எஸ்டீம் காரை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பழமையான காரை புத்தம் புதிய தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளதை இதற்குமுன் பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். பழைய காரை விற்கவும், அல்லது மொத்தமாக ஓரங்கட்டவும் மனம் இல்லாதவர்கள் இவ்வாறான செயல்களில் ஈடுப்படுகின்றனர். குறிப்பாக, இளமை காலத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தான் இவ்வாறு அதிக செலவு செய்யப்பட்டு மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.

அந்த வரிசையில், இங்கு ஒரு பழைய எஸ்டீம் கார் புதியது போன்று மாற்றப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் எஸ்டீம் கார்களை உற்பத்தி செய்வதை 2007-08ஆம் ஆண்டு சமயத்திலேயே நிறுத்தி விட்டது. இந்த குறிப்பிட்ட எஸ்டீம் கார் ஆனது 2005ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 20 வருட பழைய கார் ஆகும்.
இப்போதும் இந்தியாவில் சில பகுதிகளில் அரசாங்க வாகனங்களாக எஸ்டீம் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், எஸ்டீம் காரை இப்போது சாலையில் காண்பது மிகவும் அரிதாகிவிட்டது. அவ்வாறான அரிதான எஸ்டீம் காரான இதனை எவ்வாறு பளபளப்பான தோற்றத்திற்கு மாற்றினோம் என்பதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளனர்.

முதலில், கார் மொத்தத்திற்கும் பெயிண்ட் கொடுத்துள்ளனர். இதற்காக காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் உள்ள எலிமெண்ட்கள் அகற்றப்பட்டன. பிரைமர், துருப்பிடித்தலுக்கு எதிரான கெமிக்கல்கள் என பல்வேறு விதமான லேயர்களில் பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கிரே நிறத்திலான பெயிண்ட் இந்த காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய கிரே நிறத்தை பிஎம்டபிள்யூ (BMW) கார்களில் பரவலாக காண முடியும். இந்த எஸ்டீம் காரில் அலாய் சக்கரங்களையும் மாற்றியுள்ளனர். வெளிப்பக்கத்தை போலவே, காரின் உட்புறத்திலும் நிறைய வேலைப்பாடுகளை செய்துள்ளனர். வெளிப்புறத்தின் கிரே நிறத்திற்கு ஏற்ப காருக்கு உள்ளேயும் கருப்பு & பிரவுன் நிறத்தில் கேபின் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இது பார்க்க பிரீமியம் தரத்தில் காட்சியளிக்கிறது. இருக்கைகள் மற்றும் டேஸ்போர்டு உள்ளிட்டவை இந்த கருப்பு & பிரவுன் நிறத்தில் காட்சியளிக்கின்றன. இந்த நிறங்களுக்கு ஏற்ற நிறத்தில் கையால்-தையலிடப்பட்ட கவரினால் ஸ்டேரிங் சக்கரம் மூடப்பட்டுள்ளது. சிறந்த சவுண்ட் சிஸ்டத்திற்காக, அல்பைன் & பியோனிர் ஸ்பீக்கர்கள் உடன் சோனி ஆடியோ சிஸ்டம் புதியதாக வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிகம் செலவு செய்து இவ்வாறு மாற்றுவதற்கு பதில் புதியதாக ஒரு காரையே வாங்கிவிடலாமே என தோன்றலாம். ஆனால், இதில் இருந்து இந்த எஸ்டீம் கார் மீது அதன் உரிமையாளர் வைத்திருக்கும் நெருங்கிய பிணைப்பை அறிய முடிகிறது. இந்தியாவில் கார் மாடிஃபிகேஷன்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இருப்பினும், இவ்வாறு காரின் நிறத்தை மட்டும் மாற்றிக் கொள்வதற்கு பெரியதாக எந்த தடையும் கிடையாது.


Click it and Unblock the Notifications









