சீன எலக்ட்ரிக் கார்கள் எல்லாம் இந்தியாவில் தாக்குப் பிடிக்காதுனு யாருங்க சொன்னது? ரூ.30,000 இருந்தால் போதும்..
பி.ஒய்.டி (BYD), சீனாவை சேர்ந்த முன்னணி எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்களுள் ஒன்று. அண்டை நாடாக இருப்பினும், இந்தியாவில் சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் பெரியதாக காலூன்றியது இல்லை. இருப்பினும், பிஒய்டி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நெட்வொர்க்கை வலுப்படுத்திக் கொண்டே வருகிறது. 2007ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய நிறுவனமாக நுழைந்து விட்டாலும், பிஒய்டி நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் காராக இ6 (e6) கடந்த 2021ஆம் ஆண்டில்தான் அறிமுகம் செய்யப்பட்டது.
இ6 எலக்ட்ரிக் காரை தொடர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் அட்டோ 3 (Atto 3), சீல் (Seal) என புது, புது எலக்ட்ரிக் கார்களை பிஒய்டி தொடர்ச்சியாக அறிமுகம் செய்தது. இந்த நிலையில், அட்டோ 3 மற்றும் சீல் எலக்ட்ரிக் கார்களை பிஒய்டி நிறுவனம் புதிய 2025ஆம் ஆண்டை முன்னிட்டு அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது.

இதில், 2025 பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் ரூ.30,000 என்கிற டோக்கன் தொகை உடன் துவங்கப்பட்டுள்ளன. புதிய 2025 அட்டோ 3 எலக்ட்ரிக் காரில் சில அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், காரின் விலையில் எந்த அதிகரிப்பும் கொண்டுவரப்படவில்லை. அதாவது, 2024 அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் விலையில் 2025 அட்டோ 3 எலக்ட்ரிக் காரை வாங்கலாம்.
பிஒய்டி அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் டைனாமிக், பிரீமியம் மற்றும் சுப்பிரீயர் வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.24.99 லட்சம், ரூ.29.85 லட்சம் மற்றும் ரூ.33.99 லட்சமாக தற்சமயம் உள்ளன. ஆனால், இது முதல் 3 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஆகும். 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து தற்போதுவரையில் இந்தியாவில் 3,100க்கும் அதிகமான அட்டோ 3 எலக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
2025 அட்டோ 3 எலக்ட்ரிக் காரில் புதிய அப்கிரேடாக, முன் இருக்கைகளில் வெண்டிலேஷன் செயல்பாடு ஆனது கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம், வெளி வெப்பநிலைக்கு ஏற்றாற்போல் முன் இருக்கைகளில் இருந்து குளிர்ந்த அல்லது சூடான காற்றை பெறலாம். இதனுடன் சேர்த்து, அட்டோ 3 எலக்ட்ரிக் காரின் கேபின் முழுவதுமாக கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இவற்றுடன், புதிய அட்டோ 3 எலக்ட்ரிக் காரில் லித்தியம்-இரும்பு பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. அட்டோ 3 எலக்ட்ரிக் காரில் 49.92kWh மற்றும் 60.48kWh என 2 விதமான பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இவற்றின் மூலமாக முறையே 468கிமீ மற்றும் 521கிமீ வரையிலான ரேஞ்சை பெறலாம் என ARAI சான்றளித்துள்ளது.
மறுப்பக்கம், 2025 சீல் எலக்ட்ரிக் காரை பொறுத்தவரையில், இதன் அனைத்து வேரியண்ட்களிலும் எலக்ட்ரிக் மூலமாக செயல்படக்கூடிய சன்ஷேட் வழங்கப்பட்டுள்ளது. முன்பு இந்த வசதி ஆனது தேவைப்பட்டால் வாங்கக்கூடிய ஒன்றாகவே இருந்தது. அதேபோல், வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இரண்டையும் புதிய சீல் எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது.
இவற்றுடன், மேம்படுத்தப்பட்ட ஏசி மற்றும் காற்று சுத்திகரிப்பானையும் 2025 சீல் பெற்றுள்ளது. புதிய சீல் எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. ரூ.1.25 லட்சம் என்கிற டோக்கன் தொகையை செலுத்தி புதிய சீல் காரை விருப்பப்படுவோர் முன்பதிவு செய்யலாம். ஆனால், இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஏப்ரல் மாதத்தில்தான் அறிவிக்கப்படும் என பிஒய்டி தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புது, புது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் நிறுவனங்களுள் பிஒய்டி ஒன்றாகும். இதன் வெளிப்பாடாகவே, வருடத்திற்கு ஒரு எலக்ட்ரிக் காரை தொடர்ச்சியாக அடுத்தடுத்து அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய 2025 அட்டோ 3 மற்றும் சீல் எலக்ட்ரிக் கார்களினால் பிஒய்டி நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








