7 லட்ச ரூபாயில் கிடைக்கும் மாருதி கார் நேரில் இப்படித்தான் இருக்கும்! இதுக்கு மேல குறைவான விலையில் சான்ஸே இல்ல
மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 2025 டிசைர் டூர் எஸ் (Dzire Tour S) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. 2008ஆம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டுவரும் மாருதி சுஸுகி டிசைர் கார் ஆனது தற்போதுவரையில் இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்றாக உள்ளது.
தனிநபர் பயன்பாட்டிற்காக மட்டுமின்றி, டாக்ஸி போன்ற கமர்ஷியல் பயன்பாட்டிற்காகவும் டிசைர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கமர்ஷியல் பயன்பாட்டிற்காக சில சலுகைகள் மூலம் குறைந்த விலையில், குறைந்த வட்டியை கொண்ட மாதத்தவணை திட்டங்களில் டிசைர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கமர்ஷியல் பயன்பாட்டிற்கான டிசைர் கார் ஆனது 'டிசைர் டூர் எஸ்' என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் புதிய 4ஆம் தலைமுறை மாருதி சுஸுகி டிசைர் கார் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய டிசைர் எஸ் கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய 2025 மாருதி சுஸுகி டிசைர் டூர் எஸ் காரை நெருக்கமாக பார்க்கும் வாய்ப்பு வீடியோ ஒன்றின் மூலமாக கிடைத்துள்ளது.
மாருதி சுஸுகி டிசைர் காரின் விலை குறைவான எல்.எக்ஸ்.ஐ (LXi) வேரியண்ட்டின் அடிப்படையிலானதாக வீடியோவில் காட்சித்தரும் இந்த 2025 டிசைர் டூர் எஸ் விளங்குகிறது. முடிந்தவரையில் குறைவான விலையில் டிசைர் டூர் எஸ் வாகனத்தை விற்பனை செய்ய மாருதி சுஸுகி முயற்சிப்பதால், புதிய டிசைர் டூர் எஸ் வாகனத்தில் என்னென்ன மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள வீடியோவின்படி பார்க்கும்போது, புதிய டிசைர் டூர் எஸ் காரின் முன்பக்கத்தில் புரோஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் பெரிய அளவிலான கிரில் வழங்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்கள் மெல்லியதான வடிவத்தில் உள்ள நிலையில், முன்பக்க பம்பர் சூப்பரான தோற்றத்தில் காட்சியளிக்கிறது. அப்படியே காரின் பக்கவாட்டிற்கு சென்றால், அலாய் சக்கரங்கள் வழங்கப்படாமல், 14 இன்ச்சில் இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல், டர்ன் இண்டிகேட்டர்கள் (Turn Indicators) பின்புறத்தை காட்டும் வெளிப்பக்க மிரர்களில் வழங்கப்படாமல், முன்பக்க ஃபெண்டர்களில் (Fenders) வழங்கப்பட்டு உள்ளன. மேலும், காரின் விலையை முடிந்தவரையில் குறைப்பதற்காக கதவு கைப்பிடிகள் காரின் வெள்ளை நிறத்தில் வழங்கப்படாமல், காரில் இருந்து தனியாக தெரியும் வகையில் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளன.
காரின் பின்பக்கத்தில் சுறா துடுப்பு வடிவிலான ஆண்டென்னா, ஸ்பாய்லர், மெல்லியதான எல்இடி டெயில்லைட்கள் மற்றும் ஸ்போர்டியான தோற்றத்தில் பின்பக்க பம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதில் எல்இடி டெயில்லைட்கள் கருப்பு நிற பேனல் மூலமாக ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இந்த 2025 டிசைர் டூர் எஸ் காருக்கு உள்ளேயும் அடிப்படையான அம்சங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இன்றைய கால கார் விரும்பி எதிர்பார்க்கக்கூடிய நிறைய வசதிகள் புதிய டிசைர் டூர் எஸ் காரில் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுள் முக்கியமாக, 6 ஏர்பேக்குகள் இந்த விலை குறைவான மாருதி செடான் காரில் வழங்கப்படுகின்றன. இதனுடன், பயணிகளின் பாதுகாப்புக்கு ரியர் டீஃபாகர் (Rear Defogger), அதிவேகத்தை எச்சரிக்கும் வசதி, அனைத்து இருக்கைகளிலும் 3-பாயிண்ட் சீட் பெல்ட் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெறுகின்றன.
மேலும், பயணிகள் சீட் பெல்ட் அணியவில்லை என்றால் அதுகுறித்து எச்சரிக்கும் வசதி, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் (Electronic Stability Program), காரின் வேகத்தை உணர்ந்து தானாக லாக் ஆகக்கூடிய கதவுகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், இபிடி உடன் ஏபிஎஸ், ரிவர்ஸில் பார்க் செய்வதற்கு உதவியாக சென்சார்கள், ISOFIX குழந்தை இருக்கைக்கான கொக்கிகள், அனைத்து 4 கதவுகளிலும் பவர் ஜன்னல் கண்ணாடிகள் போன்றவையும் புதிய டிசைர் டூர் எஸ் காரில் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முடிந்தவரையில் டிசைர் டூர் எஸ் காரை குறைவான விலையில் விற்பனை செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் முயற்சிப்பதற்கு காரணம், இவ்வாறான கார்களை பெரும்பாலும் டாக்ஸி உள்ளிட்ட தொழிலை நம்பியே மக்கள் வாங்குவதால் ஆகும். இருப்பினும், காரின் அலங்காரங்களை மட்டும் குறைத்து கொண்டு, தொழிற்நுட்ப அம்சங்களை எப்போதும் போல் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியிருப்பது கவனிக்கத்தக்கது ஆகும்.


Click it and Unblock the Notifications








