பழைய ஹூண்டாய் வென்யூ காரையே வாங்கலாமா? புக்கிங் போட, புதிய கார் எப்படி இருக்கு?
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், சப் 4-மீட்டர் எஸ்யூவி கார் பிரிவில், 2026 வென்யூவை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வென்யூ மாடல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், முழுமையாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, பெரிய அளவில் மாற்றங்களை பெற்றுள்ளது. இந்த தொகுப்பில், 2026 வென்யூவின் புதிய வடிவமைப்பு அம்சங்களை, தற்போது விற்பனையில் உள்ள வென்யூ மாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கப் போகிறோம்.
வென்யூ கார், இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் உள்ளது. கடைசியாக 2022ல் ஃபேஸ்லிஃப்ட் அப்டேட்டைப் பெற்றது. ஹூண்டாய் வாகனங்களில், வென்யூ மாடலுக்கு ஒரு முழுமையான மறுசீரமைப்பு தேவை என்ற நிலையில், 2026 வென்யூ வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்புகளில் பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளது.

2026 வென்யூவின் ஒட்டுமொத்த தோற்றம், முன்பை விட சதுர வடிவம் பெற்று, ஸ்போர்ட்டியான கவர்ச்சியை வழங்குகிறது. முன்பக்கத்தில், இணைக்கப்பட்ட எல்இடி லைட் பார் கொண்ட முற்றிலும் புதிய கிரில் இடம்பெற்றுள்ளது. முன்பக்க முகப்பின் பாதி உயரத்திற்கு குவாட்-பேரல் எல்இடி ஹெட்லைட்களுடன் டிஆர்எல்கள் நவீன தோற்றத்தை தருகின்றன.
முன்பக்க பம்பர் பகுதியில் உள்ள சில்வர் ஸ்கிட் பிளேட்கள், இப்போது பெரிதாக உள்ளன. அவை, ஒரு கிடைமட்ட கீழ் கிரில்லுடன், இருபுறமும் இரண்டு செங்குத்து கிரில்லை கொண்டுள்ளன. பொனெட்டில், தனித்துவமான மஸ்குலர் கோடுகளும், செவ்வக வடிவில் சக்கர ஆர்ச் கிளாடிங்குகளும் அமைந்துள்ளன.

முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட வென்யூ கார் என்பதால், புதிய வென்யூவில் பக்கவாட்டு வடிவமைப்பிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய 2026 வென்யூவில், ரூஃப் ரெயில்கள் உயரமாக உள்ளன. மேலும், புதிய டிசைனிலான ஜன்னல் கண்ணாடிகள் உடன் புதிய பின்பக்க கதவுகள் மற்றும் பெரிய C-வடிவ பில்லருக்குப் பதிலாக, புதிய பின்பக்க குவார்ட்டர் கிளாஸ் பேனல் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.
முன்பக்க ஸ்கிட் பிளேட்டில் உள்ள செங்குத்தான கருப்பு ஹைலைட்கள், பின்பக்க பம்பர்களிலும் பிரதிபலிக்கின்றன. டெயில் லைட்கள் வழக்கம்போல் இணைக்கப்பட்டிருந்தாலும், புதிய வென்யூவில் 'VENUE' என்ற எழுத்துக்களுடன் கூடிய கருப்பு நிற இணைப்புத் தகடு இடம்பெற்றுள்ளது. காரின் பின்புறத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளில் கேமராக்கள் இருப்பதால், 360-டிகிரி கேமரா வசதி உடன் லெவல்-2 அடாஸ் அம்சமும் உள்ளது. மேலும், சக்கரங்களும் புதிய வடிவமைப்பைப் பெற்றுள்ளன.

உட்புற வடிவமைப்பை பொறுத்தவரையில், புதிய வென்யூ முழுமையான மேம்பாட்டைப் பெற்றுள்ளது. இதனால் 2026 வென்யூவில், ஹூண்டாய் நிறுவனம் எந்தவொரு ஏமாற்றத்தையும் அளிக்கவில்லை. வெளிப்புறங்களைப் போலவே, வட்டமான வடிவமைப்பு போய், கூர்மையான மற்றும் நேரான கோடுகள் கேபினுக்குள் ஆங்காங்கே இடம்பிடித்துள்ளன.
டேஷ்போர்டு தட்டையாக உள்ளது. அதில் ஒரு சப்வூஃபரும் பொருத்தப்பட்டுள்ளது. டேஷ்போர்டின் மையப் பகுதி, சுவாரஸ்யமான மெட்டீரியலைக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட சுற்றுப்புற விளக்குகளும் (அம்பியன்ட் லைட்டிங்) உள்ளன. ஏசி கண்ட்ரோல் இப்போது வட்டமாக இல்லாமல், சிங்கிள்-ஸோனாக வந்துள்ளது. ஸ்டீயரிங் சக்கரம், மூன்று-ஸ்போக் வடிவமைப்புடன், ஹூண்டாயின் புதிய குவாட் டாட் லோகோவை கொண்டுள்ளது.

2026 வென்யூ காரில் முக்கிய கவர்ச்சி அம்சமாக, புதியதாக 12.3 அங்குலத்தில் இரு வளைந்த திரைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே மற்றும் மேம்பட்ட டெலிமேடிக்ஸ் சூட் ஆகியவற்றிற்கான சப்போர்ட் உடன், நவீன கனெக்டட் அனுபவத்தை வழங்குகின்றன.
இவற்றுடன், ஆட்டோ-டிம்மிங் வசதியுடன் காரின் பின்புறத்தை காட்ட காருக்குள் வழங்கப்படும் கண்ணாடி, முன் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கான சென்டர் ஆர்ம்ரெஸ்ட்கள் மற்றும் பின்பக்க ஏசி வென்ட்கள் ஆகிய வசதிகளும் உள்ளன. போஸ் சவுண்ட் சிஸ்டம், பின்பக்க சன்ஷேட் கவர் மற்றும் புதிய டூயல்-டோன் அப்ஹோல்ஸ்டரி ஆகியவை புதிய வென்யூ காருக்கு புதிய தொழில்நுட்ப-சார்ந்த மற்றும் நவீன கவர்ச்சியை அளிக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்சமயம் விற்பனையில் இருக்கும் வென்யூவில் இருந்து பல்வேறு அம்சங்களை மாற்றியமைத்து புதிய வென்யூ காரில் ஹூண்டாய் சேர்த்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், 2026 ஹூண்டாய் வென்யூவின் ட்ரிம் நிலைகளின் பெயர்கள் கூட எச்.எக்ஸ்2, எச்எக்ஸ்4, எச்எக்ஸ்5, எச்எக்ஸ்6, எச்எக்ஸ் 6டி, எச்எக்ஸ்7, எச்எக்ஸ்8 மற்றும் எச்எக்ஸ்10 என திருத்தப்பட்டுள்ளன. புதிய வென்யூ காருக்கான முன்பதிவுகள் ரூ.25,000 முன் தொகை உடன் துவங்கப்பட்டுள்ளன. விலைகள் அறிவிக்கப்பட்டு கார் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications









