நம்ம வீட்டு பெட்ரூமை விட நீளமான ரெண்டு முகம் கொண்ட மாருதி 800.. இரண்டு பக்கமும் எஞ்சினும் உண்டு..
மாருதி 800 (Maruti 800), இந்த கார் மாடலை அறியாதவர்களே இருக்க முடியாது. மலிவு விலை, குட்டியான உருவம் மற்றும் அதிக மைலேஜ் என பலவற்றிற்கு பெயர்போன கார் மாடலாக இது இருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே நீளமான உருவம் கொண்ட லிமோசைன் (limousine) வகை வாகனமாக இளைஞர்கள் சிலர் மாற்றி இருக்கின்றனர். இரண்டு மாருதி 800 கார்களை பயன்படுத்தியே அவர்கள் லிமோசைன் வாகனத்தை தயார் செய்திருக்கின்றனர். பிரபல யுட்யூபரான தில்ராஜ் சிங் ராவத், இவரும் இவருடைய நண்பர்கள் குழுவே இந்த வாகனத்தை தயார் செய்தவர்கள் ஆவர்.
இதற்காக இரண்டு கார்களை மட்டும் அவர்கள் பயன்படுத்தவில்லை. நீளமான உருவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக, இரண்டு மாருதி 800 கார்களுக்கும் இடையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட சேஸிஸையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர். இதன் நீளம் மட்டுமே 22 அடி ஆகும். இதன் வாயிலாகவே அவர்களால் 30 அடி நீளத்திற்கு இந்த காரை தயார் செய்ய முடிந்திருக்கின்றது. இது நம்ம வீட்டு பெட்ரூம் அளவைவிட நீளமானது என்பது கவனிக்கத்தகுந்தது.

30 அடி நீளத்தில் இந்த காரை தயார் செய்திருப்பதனால் உலகின் மிக நீளமான மாருதி 800 காராக இது மாறியிருக்கின்றது. இதுமட்டுமல்ல ரயிலைப் போல இரண்டு பக்கமும் இயங்கும் வசதிக் கொண்ட காராகவும் இது இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் இந்த காருக்கு எது முன் பக்கம், பின் பக்கம் என கண்டுபிடிக்க முடியாத வகையில் இரண்டு பக்கத்திலும் ஆல்டோ 800-இன் முன் பக்கத்தை பயன்படுத்தி இருக்கின்றனர்.
இதுமட்டுமல்ல இரண்டு பக்கத்திலும் எஞ்சின், ஸ்டியரிங் வீல் மற்றும் டிரைவர் இருக்கை உள்ளிட்டவையும் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றது. அனைத்தும் இயங்கக் கூடியவை ஆகும். ஆகையால், இரண்டு பக்கத்திலும் இந்த காரை இயக்கிக் கொள்ள முடியும். இதுமட்டுமல்ல லிமோசைன் வகை வாகனமாக மாற்றப்பட்டு இருக்கும் இந்த ஆல்டோ 800 காரில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் போன்ற வசதிகளையும் அவர்கள் சேர்த்திருக்கின்றனர்.
மேலும், வாகனத்தை முழுக்க முழுக்க கருப்பு நிறத்தாலும் அவர்கள் அலங்கரித்திருக்கின்றனர். இதனால் மாருதி 800 லிமோசைன் கார் கூடுதல் பிரீமியம் லுக்கில் தற்போது காட்சியளிக்கின்றது. இந்த லுக்கிற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக கவர்ச்சியான தோற்றம் கொண்ட வீல்களையும் அவர்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து காரின் உட்பக்கத்தையும் அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்ததாக தில்ராஜ் சிங் ராவத் மாற்றியிருக்கின்றார். குறிப்பாக பெரிய திரையை அவர் அதில் வழங்கி இருக்கின்றார். கேம் விளையாடும் வசதிக் கொண்ட திரையே இது ஆகும். அத்துடன், லூடோ விளையாட்டு ஸ்டிக்கர் போன்றவற்றை காரின் தரை பகுதியில் அவர் ஒட்டியிருக்கின்றார்.
இதனால், சொகுசு அம்சங்கள் நிறைந்த கேமிங் சென்டராக இந்த கார் மாறியிருக்கின்றது. இந்த வாகனம் பலரின் கவனத்தைக் கவர்ந்திருந்தாலும் இந்தியாவில் இதுபோன்று வாகனங்களை மாடிஃபை செய்வதற்கு தடை செய்யப்பட்டு உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது. இருப்பினும், ஒரு சிலர் இந்த செயலில் ஈடுபட்ட வண்ணம் இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இதுபோன்று வழக்கமான கார் மாடல்கள் நீளமான உருவம் கொண்ட லிமோசைன் வகை வாகனமாக மாற்றப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக மஹிந்திரா ஸ்கார்பியோ, ஃபோர்டு என்டீயோவர் மற்றும் ஃபோக்ஸ்வேகன் ஜெட்டா போன்ற கார் மாடல்கள் நீளமான உருவத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றன என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








