38 வருட பழைய அம்பாசிடர் கார்னு சொன்னால் இந்துஸ்தான் கம்பெனி கூட நம்பாது! குதிரை மாதிரி இப்பவும் சாலையில் ஓடுது
ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador), இந்தியாவின் தேசிய கார் என சொல்லும் அளவிற்கு ஒரு சமயத்தில் நாடு முழுவதும் அதிக பேரால் வாங்கப்பட்ட கார். இப்போது இருக்கும் மாடர்ன் கார்கள் அனைத்திற்கும் மூதாதையர் என அம்பாசிடரை சொல்லலாம். அந்த அளவிற்கு, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் உருவாக்கிய அம்பாசிடர் காரை மனதில் வைத்துதான் இன்றைய கால பெரும்பாலான கார்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் விற்பனையில் பெரிதும் வரவேற்பை பெற்றுவந்த மோரிஸ் ஆக்ஃபோர்ட் சீரிஸ்-3 (Morris Oxford Series-3) காரின் அடிப்படையில் இந்தியாவிற்கான அம்பாசிடர் கார் உருவாக்கப்பட்டது.
மோரிஸ் ஆக்ஃபோர்ட் சீரிஸ்-3 கார் இங்கிலாந்து நாட்டில் வெறும் 4 வருடங்கள் மட்டுமே விற்பனையில் இருந்தது என்றாலும், மறுப்பக்கம் இந்தியாவில் அம்பாசிடர் கார் சுமார் 57 வருடங்களுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்டு நாட்டின் அசைக்க முடியாத காராக உருவெடுத்தது. 1957இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார் 2014ஆம் ஆண்டு வரையில் உற்பத்தியில் இருந்தது.

கடந்த 11 வருடங்களுக்கு முன்பு வரையில் உற்பத்தி செய்யப்பட்டதால், இப்போதும் சில அம்பாசிடர் கார்களை சாலையில் காண முடிகிறது. குறிப்பாக, கொல்கத்தாவில் ஆயிரக்கணக்கிலான அம்பாசிடர் கார்கள் டாக்ஸி (Taxi) தொழிலில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு பயன்படுத்தப்படும் அம்பாசிடர் டாக்ஸி கார்களை அவற்றின் வயதை காரணம் காட்டி பயன்பாட்டில் இருந்து நீக்க முயற்சிகள் நடைபெற்று வருவது எல்லாம் தனி கதை.
நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது, கேரளாவில் பயன்படுத்தப்படும் 1987ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பழமையான அம்பாசிடர் காரை பற்றி ஆகும். சுமார் 38 வருடங்கள் பழமையான அம்பாசிடர் காரை இப்போது வரையிலும் நல்ல நிலையில் வைத்திருப்பது மிகவும் சிரமம் ஆகும். நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் இந்த அம்பாசிடர் காரும் 38 வருடங்களில் பாழடைந்து கிடந்துள்ளது.

அதனை பட்டி, டிங்கரிங் பார்த்து ஷோரூமில் இருந்து கொண்டுவரப்பட்ட கார் போன்று புத்தம் புதியதாக, பளபளப்பானதாக மாற்றி உள்ளனர். இதனாலேயே இந்த 1987 அம்பாசிடர் கார் தொடர்பான தற்போதைய படங்களும், வீடியோக்களும் இணையத்தில் பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளன. இதில் ஒரு வீடியோவில், இந்த அம்பாசிடர் கார் எவ்வாறு இப்படி மாற்றப்பட்டது என்பது விரிவாக விளக்கி காட்டப்பட்டுள்ளது.
கேரளாவின் இரிஞ்சலகுடா என்கிற பகுதியை சேர்ந்த இந்த 1987 அம்பாசிடர் கார் புதிய தோற்றத்திற்கு மாற்றப்பட்டு இருப்பினும், காரின் பெரும்பாலான பாகங்கள் அப்படியே தொடரப்பட்டுள்ளன. அதாவது, உண்மையான அம்பாசிடர் கார் பாகங்கள் தான் இந்த காரில் உள்ளன. 1987ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் அம்பாசிடர் காரின் 4ஆம் தலைமுறை மாடலை 'மார்க்-4' என்கிற குறியீட்டு பெயருடன் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் விற்பனை செய்தது.
1979ஆம் ஆண்டில் இருந்து 1990ஆம் ஆண்டு வரையில் சுமார் 11 வருட காலத்திற்கு 4ஆம் தலைமுறை அம்பாசிடர் கார் விற்பனையில் இருந்தது. 2014ஆம் ஆண்டில் அம்பாசிடர் கார் விற்பனை நிறுத்தப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்பு அம்பாசிடர் கிளாசிக் என்கிற காரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அறிமுகம் செய்தது. தற்போது மார்க்கெட்டில் கிடைப்பது இந்த அம்பாசிடர் கிளாசிக் காரின் பாகங்கள் ஆகும்.
ஆதலால், இந்த 1987 அம்பாசிடர் காரில் சேதமடைந்த பாகங்களை அம்பாசிடர் கிளாசிக் காரின் பாகங்கள் மூலமாக மாற்றியுள்ளனர். அத்துடன், மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) போன்ற இன்றைய கால மாடர்ன் கார்களின் சில பாகங்களும் இந்த 1987 அம்பாசிடர் காரில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1987ஆம் ஆண்டில் இந்த அம்பாசிடர் காரில் பொருத்தப்பட்ட என்ஜின் இன்னமும் இயங்கும் நிலையில் இருந்தாலும், என்ஜின் சிஸ்டத்தில் கியர்பாக்ஸ் மட்டும் இசுஸு (Isuzu) நிறுவனத்தின் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த 1987 அம்பாசிடர் காரின் வெளிப்பக்க மற்றும் உட்புற உடலில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படவில்லை. அதாவது, அந்த அளவிற்கு அவை தற்போதும் நல்ல நிலையில் உள்ளன. ஆனால், காரின் எலக்ட்ரிக்கல் பாகங்கள் சேதமடைந்து இருந்ததால் அவற்றைய இன்றைய கால மாடர்ன் கார்களின் பாகங்களாக மாற்றியுள்ளனர். ஏனெனில், அம்பாசிடர் கார்களுக்கான பாகங்கள் நாளுக்கு நாள் அரிதாகிக் கொண்டே வருகிறது.


Click it and Unblock the Notifications








