இந்த 10 கார்களுள் ஒன்றை கண்ணை மூடிட்டு வாங்கலாம்! அரசாங்கம் சார்பில் முத்திரை குத்தியாச்சு!
புதிய கார்களை விலை மற்றும் மைலேஜ் பார்த்து வாங்கிய காலம் போய் இப்போது எல்லாம் கிராஷ் டெஸ்ட் (Crash Test)-இல் எத்தனை மதிப்பெண்களை கார் வாங்கியிருக்கிறது என்பதையும் கூடுதலாக சேர்த்து பார்க்கின்றனர். இதற்கேற்றவாறு, உலகளாவிய குளோபல் என்சிஏபி (Global NCAP) கிராஷ் டெஸ்ட் அமைப்பு செயல்படுவதுடன், ஆசியா, ஐரோப்பா என தனித்தனியாக கண்டங்களுக்கு என்றும் என்சிஏபி கிராஷ் டெஸ்ட் அமைப்புகள் செயல்படுகின்றன. இதற்கு மத்தியில் நமது இந்திய அரசும் புதியதாக பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
கடந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் இதுவரையில் பல்வேறு புதிய கார்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. மார்க்கெட்டுக்கு மிகவும் புதியதான மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) மற்றும் பி.இ 6 (BE 6) எலக்ட்ரிக் கார்கள் கூட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சிறந்த மதிப்பெண்களை பெற்று பாதுகாப்பான காராக விளங்கும் 10 கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மஹிந்திரா எக்ஸ்.இ.வி 9இ (Mahindra XEV 9e): மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எலக்ட்ரிக் கார் இதுவாகும். மேலும், விலையுயர்ந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காராகவும் விளங்கும் எக்ஸ்.இ.வி 9இ, பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு முழு 32 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது. இதன் மூலமாக, முழு 5-ஸ்டார் ரேட்டிங் இந்த எலக்ட்ரிக் காருக்கு கிடைத்துள்ளது.
மஹிந்திரா பி.இ 6 (Mahindra BE 6): மஹிந்திராவில் இருந்து எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காருடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மற்றொரு எலக்ட்ரிக் கார் இதுவாகும். பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 31.97 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் பெற்றுள்ள பிஇ 6 எலக்ட்ரிக் காருக்கு முழு 5 நட்சத்திர ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.

டாடா பஞ்ச் இவி (Tata Punch EV): இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிறிய அளவிலான எலக்ட்ரிக் கார் இதுவாகும். எம்ஜி கோமெட் இவி காரின் வருகைக்கு முன்பு வரையில் இந்தியாவின் விலை குறைவான எலக்ட்ரிக் காராகவும் பஞ்ச் இவி விளங்கியது. இத்தகைய காருக்கு பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 31.46 மதிப்பெண்களும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களும் வழங்கப்பட்டன. இதன் மூலமாக 5-ரேட்டிங் காராக பஞ்ச் இவி விளங்குகிறது.
மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX): மஹிந்திராவில் சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார்கள் அனைத்தும் பாதுகாப்பானவை ஆக விளங்குகின்றன. அந்த வகையில், கடந்த 2024 ஆகஸ்ட் 15இல் அறிமுகம் செய்யப்பட்ட தார் ராக்ஸ் 5-ரேட்டிங்கை பெற்றிருப்பதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 31.09 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் தார் ராக்ஸ் பெற்றுள்ளது.
ஸ்கோடா கைலாக் (Skoda Kylaq): இந்திய கார்கள் மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வரும் ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கைலாக் கார், பாதுகாப்பில் 5-ஸ்டார் ரேட்டிங்கை கொண்டுள்ளது. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.88 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 45 மதிப்பெண்களையும் இந்த கார் பெற்றுள்ளது.

டாடா கர்வ் இவி (Tata Curvv EV): டாடா மோட்டார்ஸில் இருந்து சமீபத்தில், சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட மாடர்ன் எலக்ட்ரிக் கார் இதுவாகும். பாதுகாப்பு விஷயத்தில் 5-ஸ்டார் ரேட்டிங்கை கொண்டிருக்கும் இந்த புதிய டாடா எலக்ட்ரிக் கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.81 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 44.83 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV): இந்தியாவில் வருடக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் சில எலக்ட்ரிக் கார்களுள் நெக்ஸான் இவி ஒன்றாகும். இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் எலக்ட்ரிக் கார்களுள் ஒன்றாகவும் விளங்கும் இது பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 29.86 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 44.95 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
டாடா சஃபாரி (Tata Safari): டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார், சஃபாரி ஆகும். இருப்பினும், ஒவ்வொரு மாதமும் கணிசமான எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் வாங்கக்கூடிய சஃபாரி கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு முழு 30.08 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 44.54 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
டாடா ஹெரியர் (Tata Harrier): மேலே கண்ட சஃபாரியை விட அளவில் சிறியதான மற்றும் விலை குறைவான காராக இருப்பினும், சஃபாரியை விட கொஞ்சம் குறைவாக தான் ஹெரியர் கார்கள் விற்பனை ஆகின்றன. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சஃபாரி கார் பெற்ற அதே மதிப்பெண்களையும், ரேட்டிங்கையும் தான் ஹெரியரும் பெற்றுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்.இ.வி 400 இவி (Mahindra XEV400 EV): மஹிந்திரா எக்ஸ்யூவி300 என்கிற காம்பெக்ட்டான எஸ்யூவி காரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட எலக்ட்ரிக் கார் இதுவாகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 10வது இடத்தில் இருக்கும் இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் பெரியவர்கள் பாதுகாப்பில் 32க்கு 30.38 மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 49க்கு 43 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மதிப்பெண்கள் யாவும் பல்வேறு விதமான மோதல் சோதனைகளுக்கு கார்களை உட்படுத்தி பெறப்பட்டவை ஆகும். இவற்றில் பெரும்பாலான கார்கள் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் உட்படுத்தப்பட்டு இதே சேஃப்டி ரேட்டிங்கை பெற்றுள்ளன. மதிப்பெண்கள் கொஞ்சம் முன்னும் பின்னும் இருந்தாலும் 5 ஸ்டார்களை பெற்றாலே அந்த காரில் போதுமான பாதுகாப்பு இருக்கிறது என அர்த்தம் ஆகும்.


Click it and Unblock the Notifications









