புது கார் வாங்குறதை எல்லாம் பொங்கல் வரை தள்ளி போடுங்க! கார் கம்பெனிகள் அனைத்தும் ரெடி ஆகுது!
2026 ஜனவரி பொங்கல் சமயத்தில், இந்திய வாகனச் சந்தை புதிய எஸ்யூவி (SUV) கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் அதிகப்படியான அறிமுகங்களால் சுறுசுறுப்படைய உள்ளது. ஏனெனில், அந்த அளவிற்கு பல முக்கிய வாகன வெளியீடுகள் இந்தக் காலகட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
முதலாவதாக, இரண்டாம் தலைமுறை கியா செல்டோஸ் (Kia Seltos) கார் மிக விரைவில் 2026 ஜனவரி 2 அன்று கே3 பிளாட்ஃபார்ம் மற்றும் மேம்பட்ட உட்புறத்துடன் வரவுள்ளது. புதிய செல்டோஸ் காரின் உற்பத்தி நேற்று (டிச.23) தான் ஆந்திர பிரதேசத்தின் அனந்தபூரில் உள்ள கியா தொழிற்சாலையில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனான எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (XUV 7XO), 2026 ஜனவரி 5 அன்று மூன்று திரை டாஷ்போர்டு மற்றும் திருத்தப்பட்ட LED விளக்குகளுடன் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய மஹிந்திரா காருக்கான முன்பதிவுகள் கடந்த டிசம்பர் மாதத்தில்தான் ரூ.21,000 என்கிற டோக்கன் தொகை உடன் துவங்கப்பட்டது.
இவற்றை காட்டிலும் மார்க்கெட்டில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் மாருதி சுஸுகியின் முதல் பெரிய எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) காரான இ-விட்டாரா (e-Vitara), 500 கி.மீ-க்கும் அதிகமான ரேஞ்ச் உடன் 2026 ஜனவரியின் நடுப்பகுதியில் விலை அறிவிப்புடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் (Tata Punch Facelift) ஜனவரியில் வெளியிடப்பட்டு, தற்போதைய பன்ச் இவி எலெக்ட்ரிக் காரின் ஸ்டைல் மற்றும் காற்றோட்டமான வெண்டிலேட்டட் (Ventilated) இருக்கைகள் போன்ற அம்சங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மார்க்கெட்டில் அதிகம் பேர் வாங்கும் பன்ச் காரின் புதிய அப்கிரேட் வெர்சனான இது சரியாக ஜனவரி 15 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவற்றுடன், ரெனால்ட் டஸ்டர் (Renault Duster) காரின் மூன்றாம் தலைமுறை 2026 ஜனவரி 26 தேசிய குடியரசு தினத்தன்று சி.எம்.எஃப்-பி (CMF-B) பிளாட்ஃபார்ம் மற்றும் ஹைப்ரிட் (Hybrid) ஆப்ஷன்களுடன் அறிமுகமாகிறது. தற்போதைய ரெனால்ட் கைகர் காரை காட்டிலும் அளவில் பெரியதாக, பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா மற்றும் விரைவில் அறிமுகமாகும் புதிய கியா செல்டோஸ் காருக்கு போட்டியாக இது விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

கச்சிதமான 7 இருக்கைகள் கொண்ட புதிய நிசான் கிராவிட் (Nissan Gravite) என்கிற எம்பிவி (MPV) காரும் 2026 ஜனவரியில் வெளியீடு செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற ஜனவரியில் கார் வெளியீடு செய்யப்பட்டாலும், விலைகள் உடன் அறிமுகம் 2026 மார்ச்சில் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாருதி இ-விட்டாராவின் மறுபெயரிடப்பட்ட பதிப்பான டொயோட்டா அர்பன் க்ரூஸர் இவி (Toyota Urban Cruiser EV), இந்தியாவில் டொயோட்டாவின் முதல் எலெக்ட்ரிக் காராக 2026 ஜனவரியில் வெளியீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கிறோம். இந்த காரின் விற்பனைக்கு அறிமுகமானது 2026 மார்ச் அல்லது ஏப்ரலில் இருக்கலாம்.

இவை மட்டுமின்றி, ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் (Skoda Kushaq Facelift) காரும் 2026 ஜனவரியின் நடுப்பகுதியில் லெவல்-2 அடாஸ் (ADAS) மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற மேம்பாட்ட அம்சங்களுடன் வெளிவருகிறது. இதன் அறிமுகமும் வருகிற ஜனவரியில் இருக்குமா என்பது சந்தேகத்திற்கு உரியதாகவே உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா, உலகின் மிக முக்கியமான கார் சந்தை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதனாலேயே ஒவ்வொரு வருடமும் பல பிராண்ட்களில் இருந்து புதிய கார் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அதிலிலும் குறிப்பாக, வருடத்தின் துவக்க மாதமான ஜனவரியை எல்லா கார் கம்பெனிகளும் டார்க் செய்கின்றன. அந்த வகையில், வருகிற 2026ஆம் ஆண்டிலும் ஜனவரியிலேயே தங்களது புதிய கார்களை அறிமுகம் செய்ய பல்வேறு கார் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.


Click it and Unblock the Notifications









