இதுதான் உண்மையான சந்தோஷம்... அவ்வளவு கோடி சொத்து வைத்திருந்தும் ஆனந்த் மஹிந்திராவுக்கு இதுவே மகிழ்ச்சி
மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்று என தாராளமாக சொல்லலாம். சமீபத்தில் எலக்ட்ரிக் கார் (Electric Car) மார்க்கெட்டிலும் நுழைந்துள்ள மஹிந்திரா நிறுவனம், முதற்கட்டமாக பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) என இரு எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து மார்க்கெட்டை தெறிக்க விட்டது. மஹிந்திராவின் இந்த புதிய எலக்ட்ரிக் கார்களை பார்த்து, நம் இந்தியர்கள் மட்டுமில்லாமல் வெளிநாட்டினரும் அசந்துப்போய் உள்ளனர்.
அதனை வெளிக்காட்டும் வகையில், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சில படங்கள் உடன் பதிவு ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

உலகமே பார்த்து வியக்கும் அளவிற்கு 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சி கடந்த ஜனவரி மாதத்தில் தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று முடிந்தது. இந்த கண்காட்சியின் ஒருபகுதியாக நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) மோட்டார் கண்காட்சியில் பல நிறுவனங்களில் இருந்து புதிய வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டன.
அந்த வகையில் மஹிந்திரா நிறுவனமும் அதன் பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்களை காட்சிக்கு நிறுத்தி பார்வையாளர்களை கவர்ந்தது. ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சிக்கு உலகம் முழுவதில் இருந்தும் பார்வையாளர்கள் வந்தனர். அந்த வகையில் கண்காட்சிக்கு வந்த ஜப்பானிய மற்றும் கொரிய நாட்டை சேர்ந்த பார்வையாளர்கள் மஹிந்திராவின் புதிய எலக்ட்ரிக் கார்களை பார்வையிட்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட படங்களை தான் ஆனந்த் மஹிந்திரா தற்போது தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், "பல தசாப்தங்களுக்கு முன்பு, நான் ஆட்டோமொபைல் துறையில் எனது வாழ்க்கையை தொடங்கிய போது, வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட மேம்பட்ட கார்களை புகைப்படம் எடுக்கவும் ஆய்வு செய்யவும் சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சிகளுக்கு நமது இந்திய பிரதிநிதிகள் செல்வார்கள்.
டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி கண்காட்சியில் ஜப்பானிய மற்றும் கொரிய பார்வையாளர்கள் எங்கள் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிகளை பார்த்து வியப்பதை பார்க்கும்போது எனக்கு ஏற்படும் உணர்ச்சிகளை நீங்களே கற்பனை செய்து பார்க்கலாம்" என குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த இரு எலக்ட்ரிக் கார்களையும் இன்க்லோ (INGLO) என்கிற பிளாட்ஃபாரத்தில் மஹிந்திரா உருவாக்கி உள்ளது.

கடந்த டிசம்பர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகளை அதிகாரப்பூர்வமாக வருகிற பிப்.14 காதலர் தினத்தின் போது துவங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் சமீபத்தில் பிஇ 6 மற்றும் எக்ஸ்.இ.வி 9இ எலக்ட்ரிக் கார்களின் முழு விலை பட்டியல் வெளியிடப்பட்டதை நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் கூட பார்த்திருந்தோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு தொடர்ந்து வரவேற்பு அதிகரித்து வருவதினால், இந்த இரு புதிய எலக்ட்ரிக் கார்கள் மீதும் மஹிந்திரா நிறுவனம் மிகுந்த நம்பிக்கையில் உள்ளது. அதன் வெளிப்பாடாகவே மஹிந்திரா & மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவின் இந்த எக்ஸ் பதிவை பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









