2,000 பஸ்களை டெலிவரி செய்வதற்கான ஆர்டரை வென்ற தமிழக நிறுவனம்! வாங்றது யார்னு தெரிஞ்சா இன்னும் சந்தோஷப்படுவீங்க
தமிழகத்தில் ஒரு சில அரசு பஸ்கள், மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பஸ் ஓடி கொண்டிருக்கும்போதே டயர் கழன்று ஓடிய சம்பவங்கள் நிறைய முறை நிகழ்ந்துள்ளன. அத்துடன் படிக்கட்டு போன்ற ஒரு சில பாகங்கள் மட்டும் தனியாக கழன்று விழுந்தது போன்ற சம்பவங்களும் கூட நடைபெற்றுள்ளன.
பெரும்பாலான அரசு பஸ்கள் விபத்தில் சிக்குவதற்கு, அவற்றின் மோசமான கண்டிஷன் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அரசு பஸ்களில் பயணம் செய்வதற்கு மக்கள் பயப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே அரசு பஸ்களை நவீனமாக்கும் முயற்சிகளை, தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக அசோக் லேலண்ட் (Ashok Leyland) நிறுவனத்திடம் இருந்து 1,937 புதிய பஸ்களை தமிழக அரசு வாங்கவுள்ளது. தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு 1,937 அரசு பஸ்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை வென்றுள்ளதாக அசோக் லேலண்ட் நிறுவனம் தற்போது தெரிவித்துள்ளதாக, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் 1,701 டீசல் தாழ்தள பிஎஸ் 6 பஸ்களை, அசோக் லேலண்ட் நிறுவனம், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக டெலிவரி செய்து விடும். எஞ்சிய 236 அரை தாழ்தள டீசல் பிஎஸ் 6 பஸ்களை, அசோக் லேலண்ட் நிறுவனம், 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 2027ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள்ளாக டெலிவரி செய்யும்.

புதிய அரசு பஸ்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதால் இந்த தகவல், தமிழக மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு பஸ்களை கொள்முதல் செய்யவுள்ள அசோக் லேலண்ட் நிறுவனம் தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில்தான் அமைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தை வென்றிருப்பது குறித்து அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் பிரிவின் தேசிய தலைமை விற்பனை அதிகாரியான மாதவி தேஷ்முக் கூறுகையில், ''தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கும், அசோக் லேலண்ட் நிறுவனத்திற்கும் இடையே நீண்ட கால நட்பு உள்ளது.
அதை இந்த ஒப்பந்தம் மூலம், மேலும் வலிமையாக்கியுள்ளதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். தமிழ்நாடு எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு சந்தையாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தை நாங்கள் வென்றிருப்பது, அசோக் லேலண்ட் நிறுவன தயாரிப்புகளின் தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மீது, எங்கள் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு ஒரு சான்றாக உள்ளது.
திறன்மிக்க மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மேம்பட்ட வாகனங்களை உருவாக்கி, பொது போக்குவரத்தின் வளர்ச்சிக்கு சிறந்த முறையில் பங்களிப்பு வழங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். எங்களது இந்த அர்ப்பணிப்பு உணர்வை, தற்போது வென்றுள்ள இந்த ஒப்பந்தம் மேலும் வலிமையாக்கியுள்ளது. தொடர்ந்து அதிநவீன, திறன்மிக்க மற்றும் பாதுகாப்பான வாகனங்களை உருவாக்குவதில் எங்கள் கவனம் இருக்கும்'' என்றார்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தமிழக அரசு போக்குவரத்து கழகம் புதிய பஸ்களை வாங்கவுள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சிகரமான ஒரு விஷயம்தான். இந்த புதிய பஸ்கள், தமிழக மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் என நாம் நம்பலாம். அத்துடன் இந்த புதிய பஸ்கள் மூலம், பயணிகளுக்கு சௌகரியமான பயணமும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








