பெட்ரோல் பங்க்களை இழுத்து மூட காலம் வந்தாச்சு! ஆடி ஆழம் பார்த்துடுச்சு... கோடிகளை முதலீடா கொட்டுது!
ஆடி (Audi), இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) புதியது, புதியதாக அறிமுகம் செய்வதில் தீவிரமாக உள்ள நிறுவனங்களுள் ஒன்று. ஆனால் நாட்டில் எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை மெதுவாகவே அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் கார் மார்க்கெட்டை விரிவுப்படுத்த வேண்டுமெனில், அதற்கேற்ப, அவற்றை சார்ஜிங் செய்யும் வசதியையும் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். இந்த விஷயத்தில் ஆடி இந்தியா நிறுவனம் கடந்த சில வருடங்களாகவே தீவிரமாக இருந்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் சார்ஜர்களை நிறுவிவரும் ஆடி நிறுவனம், அவ்வாறு சார்ஜர்களை நிறுவுவதில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது.
ஜெர்மனியில் தோன்றிய ஆடி நிறுவனத்தின் கார்களுக்கு பல நாடுகளில் நல்ல மார்க்கெட் உள்ளது. இந்தியாவிலும் கூட மெர்சிடிஸ் (Mercedes), பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனங்களுக்கு அடுத்து 3வது மிகப்பெரும் சொகுசு கார் உற்பத்தி நிறுவனமாக ஆடி விளங்குகிறது. கடந்த 2024ஆம் ஆண்டில்தான், இந்திய சாலைகளுக்கு பயன்பாட்டுக்கு வந்த ஆடி கார்களின் எண்ணிக்கை 1 லட்சம் என்கிற இமாலய மைல்கல்லை கடந்தது.

இந்தியாவில் மாதத்திற்கு சராசரியாக 400 விலையுயர்ந்த கார்களை ஆடி விற்பனை செய்து விடுகிறது. இந்த 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் இந்தியாவில் 1,223 ஆடி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2024ஆம் ஆண்டை காட்டிலும் 17% அதிகமாகும்.
ஆடி நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்கள் என்று பார்த்தால், க்யூ7 (Q7) மற்றும் க்யூ8 (Q8)-ஐ சொல்லலாம். பிராண்ட்-நியூ கார்கள் விற்பனையில் மட்டுமின்றி, ப்ரீ-ஒவ்ண்டு கார்கள் விற்பனையிலும் ஆடி நிறுவனத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது, ஏற்கனவே வேறு ஒருவரால் பயன்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையிலும்.

கடந்த 2024ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் உடன் ஒப்பிடுகையில், இந்த 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் ப்ரீ-ஒவ்ண்டு கார்கள் விற்பனையில் 23% வளர்ச்சியை ஆடி நிறுவனம் பதிவு செய்துள்ளது. ப்ரீ-ஓவ்ண்டு கார்களை விற்பனை செய்வதற்காக இந்தியாவில் 26 ஷோரூம்களை பிரத்யேகமாக ஆடி நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நாடு முழுவதும் தனது எலக்ட்ரிக் கார்களுக்காக நிறுவிவரும் சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கையில் 6,500 என்கிற மைல்கல்லை ஆடி தற்போது கடந்துள்ளது. இந்தியாவின் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 850க்கும் அதிகமான நகரங்களில், 4,700க்கும் அதிகமான பகுதிகளில் ஆடியின் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன.
இந்த சார்ஜிங் நிலையங்களில் இருப்பவற்றில் 75% ஆனது நேர்திசை மின்சாரத்தில் (DC) இயங்கக்கூடிய ஃபாஸ்ட்-சார்ஜர்கள் (Fast-chargers) ஆகும். ஆடி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களை வாங்கிய கஸ்டமர்களுக்கு சவுகரியமான, குறைந்த சார்ஜிங் நேரத்தை கொண்ட சேவையை வழங்கி இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பது ஆடி நிறுவனத்தின் கொள்கை ஆக உள்ளது.
'சார்ஜ் மை ஆடி' (Charge My Audi) என்கிற பெயரில் சார்ஜிங் நிலையங்களை இந்தியா முழுவதும் ஆடி நிறுவி வருகிறது. சார்ஜிங் நிலையங்களை நாடு முழுவதும் நிறுவுவது என்பது ஆடி என்கிற ஒற்றை நிறுவனத்தால் மட்டும் முடியாது. ஒவ்வொரு மாநிலத்திலும், நகரத்திலும் வெவ்வேறான தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் உடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டால்தான் முடியும்.
ஏற்கனவே அமைக்கப்பட்ட 6,500 சார்ஜிங் நிலையங்களுக்காக ஏகப்பட்ட நிறுவனங்கள் உடன் ஹூண்டாய் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டுள்ளது. அந்த லிஸ்ட்டில் தற்போது புதியதாக மேலும் 16 நிறுவனங்கள் இணைந்துள்ளன. நெடுஞ்சாலைகள், நகரத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஆடி நிறுவனத்தின் சார்ஜிங் நிலையங்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சார்ஜிங் நிலையங்களில் சார்ஜை ஆடி நிறுவனம் இலவசமாக ஒன்றும் தருவதில்லை; கட்டணம் உண்டு. ஆனால் கட்டணம் அதிகமாக இல்லை. எதிர்காலத்தில் பெட்ரோல் பங்க்களை போன்று இவி சார்ஜிங் நிலையங்களுக்கான தேவை அதிகமாக இருக்கும் காலத்தில் 6,500 என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








