தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் ஆடி! சம்பளம் கொடுக்க கூடவா பணம் இல்லை? காரணம் என்ன தெரியுமா?
ஆடி (Audi), ஜெர்மனி (Germany) நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான சொகுசு கார் (Luxury Car) நிறுவனம். இந்தியாவில் மெர்சிடிஸ் (Mercedes) மற்றும் பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனங்களுக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக ஆடி விளங்குகிறது. இந்தியாவில் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் நிறுவனமாக விளங்கினாலும், உலகளவில் ஆடி நிறுவனத்திற்கு நிறைய பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, ஐரோப்பா (Europe)-இல் ஆடி நிறுவனத்தின் கார்கள் விற்பனைக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக, விரைவில் ஒரு அதிரடியான நடவடிக்கையில் ஆடி நிறுவனம் இறங்க உள்ளது.
அது என்னவென்றால், பணியாட்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகும். பொதுவாகவே, தனியார் நிறுவனங்கள் நஷ்டத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தால் வேலையாட்களின் எண்ணிக்கையை குறைத்து, நிலைமையை ஓரளவிற்கு சமாளிக்க முயற்சிப்பதை பார்த்திருக்கிறோம். அப்போதும் கூட நிலைமையை சமாளிக்க முடியவில்லை என்றால், மொத்தமாக இழுத்து மூடப்பட்ட நிறுவனங்கள் கூட உள்ளன.

அவ்வாறுதான், ஆடி நிறுவனம் தனது நிலைமையை சீர்படுத்த குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாட்களை வேலையை விட்டு நீக்கும் முடிவிற்கு வந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால், பணியாட்களை வேலையை விட்டு நீக்கும் பணியை ஏற்கனவே ஆடி நிறுவனம் துவங்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதுகுறித்து ஆடி நிறுவனத்தில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, 2029ஆம் ஆண்டிற்குள் மொத்தம் 7,500 பணியாட்களை வேலையில் இருந்து நீக்க ஆடி திட்டமிட்டுள்ளது.
இது ஜெர்மனி நாட்டில் ஆடி கொண்டுவரும் மாற்றம் ஆகும். ஜெர்மனி உள்பட ஐரோப்பிய கண்டத்தின் நிறைய பகுதிகளில் மக்களின் பொருளாதார நிலை கடந்த சில வருடங்களில் சரிந்துள்ளது. இதனால், எலக்ட்ரிக் வாகனங்களில் பணத்தை செலவு செய்ய ஐரோப்பிய மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், ஐரோப்பா முழுவதுமே எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை கணிசமாக குறைந்துள்ளது.

இது, எலக்ட்ரிக் வாகனங்களை நம்பி எதிர்காலத்தை அமைக்க திட்டமிட்டு இருந்த ஆடி போன்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. இந்த நிலைமையை சீராக்கும் முயற்சிகள் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்க, மறுப்பக்கம் சீனாவில் இருந்து நிறைய எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனங்கள் ஐரோப்பாவில் நுழைய ஆரம்பித்துள்ளன.
அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில், அந்த கொஞ்ச கஸ்டமர்களிலும் பங்கு கேட்டு சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்கள் நிற்கின்றன. இது எல்லாம்தான், ஆடி நிறுவனத்தை ஜெர்மனியில் 2029ஆம் ஆண்டிற்குள் 7,500 பணியாட்களை வேலையில் இருந்து நீக்க வைத்துள்ளது. ஜெர்மனியில்தான் இந்த நடவடிக்கை கொண்டுவரப்படுகிறது, மற்ற நாடுகளில் பிரச்சனை இல்லையே என நீங்கள் நினைக்கலாம்.

உலகின் ஆட்டோமொபைல் பிறப்பிடமாக கருத்தப்படும் ஜெர்மனி ஆனது ஆடி நிறுவனத்திற்கு மட்டுமில்லை, பிரம்மாண்டமான ஃபோக்ஸ்வேகன் க்ரூப் (Volkswagen Group)-க்கும் தாயகம் ஆகும். ஆதலால், சொந்த நாட்டிலேயே பணியாட்களை வேலையை விட்டு நீக்கும் நிறுவனம், அண்டை நாட்டில் தனது நிறுவனத்திற்கு கீழ் பணியாற்றுபவர்களை வேலையை விட்டு நீக்க தயங்காது.
அதுமட்டுமின்றி, ஆடி நிறுவனத்திற்கு ஜெர்மனி மிக முக்கியமான சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. உலகளவில் நெட்வொர்க்கை கொண்டுள்ள ஆடி நிறுவனம் ஜெர்மனியில் வெறும் 7,500 பேரை மட்டுமே வேலையில் இருந்து நீக்க போவதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த 7,500 ஆனது ஆடி நிறுவனத்தின் உலகளாவிய மொத்த பணியாட்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 8% ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பணியாட்களை வேலையை விட்டு நீக்குவது என்பது நிறுவனத்தின் பெயருக்கு மக்கள் மத்தியில் களங்கம் விளைவிக்கக் கூடியது ஆகும். இருப்பினும், இந்த நடவடிக்கையை ஆடி நிறுவனம் கையில் எடுத்துள்ளது என்றால், அந்த நிறுவனத்தின் நிலைமையை அறிய முடிகிறது. மக்கள் மத்தியில் மீண்டும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஆர்வத்தை கொண்டுவருவது கூட ஆடி நிறுவனத்திற்கு பெரிய விஷயமாக இருக்காது. ஆனால் சீன எலக்ட்ரிக் கார் நிறுவனங்களின் போட்டியை சமாளிப்பது ஆடி நிறுவனத்துக்கு பெரும் சவாலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









