10 வருஷத்துக்கு மெக்கானிக் ஷாப் போகுற வேலையே இல்ல! புதுசா ஆடி கார் வாங்குறவங்க கொடுத்து வெச்சவங்க!
ஆடி (Audi), இந்தியாவின் முன்னணி லக்சரி கார் (Luxury Car) நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஆடி உள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக ஆடி நிறுவனம் தொடர்ந்து புது, புது அறிவிப்புகளை அதன் கஸ்டமர்களுக்காக வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது, கஸ்டமர்களை கவரும் முயற்சியாக கார்களுக்கான உத்தரவாத காலத்தை 10 வருடங்கள் வரையில் ஆடி இந்தியா நிறுவனம் உயர்த்தி உள்ளது. இதன் மூலமாக இந்தியாவில் இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகப்படியான உத்தரவாதம் ஆடி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. 10-வருட உத்தரவாதம் ஆனது இந்தியாவில் அனைத்து ஆடி கார்களுக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

10 வருட உத்தரவாதம் அல்லது 2 லட்ச கிமீ உத்தரவாதம் இதன்படி கிடைக்கும். அதாவது, 2 லட்ச கிமீ தொலைவிற்கு காரை ஓட்டவில்லை எனில், 10 வருடங்களுக்கு உத்தரவாதம் கிடைக்கும். அதுவே, 2 லட்ச கிமீ தொலைவிற்கு காரை ஓட்டி வீட்டீர்கள் எனில், அப்போதே உத்தரவாத காலம் முடிவுக்கு வந்துவிடும்; அது 4 அல்லது 5 வருடங்களாக இருந்தாலும் சரி.
இருப்பினும், 10-வருட/ 2 லட்ச கிமீ உத்தரவாதம் என்பது ஆடி போன்ற விலையுயர்ந்த லக்சரி கார்களில் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த உத்தரவாத காலக்கட்டத்தில், ஆடி நிறுவனத்தின் உற்பத்தி கவனக்குறைவால் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இலவசமாக பழுதுப் பார்த்துக் கொள்ளலாம். இந்த 10-வருட உத்தரவாதத்தை கூடுதல் கட்டணம் செலுத்தி கூடுதலாக 1- 2 வருடங்கள் கூட நீட்டித்துக் கொள்ள முடியும்.
இந்த நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன், 15 வருடங்களுக்கு சாலையில் பயணிக்கும் போது ஏற்படும் பழுதுகளுக்கு தேவையான உதவிகளை கஸ்டமர்கள் பெறும் வசதியையும் ஆடி நிறுவனம் புதியதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த சாலையோர உதவிகளை வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணிநேரமும் பெறலாம் என ஆடி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆடி நிறுவனத்தின் புதிய 15-வருட சாலையோர உதவிக்கான பேக்கேஜில் அவசரகாலத்தில் கார் பிரேக் டவுனின் போது தேவைப்படும் உதவிகளை செய்தல் மற்றும் காரை அருகில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட வொர்க் ஷாப்பிற்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட வசதிகள் அடங்குகின்றன. சிறிய மெக்கானிக்கல் & எலக்ட்ரிக்கல் பிரச்சனைகளுக்கு தொழிற்நுட்பம் சார்ந்த உதவிகள் வழங்கப்படும்.
எரிபொருள் இல்லாமல் கார் நின்றாலோ, பேட்டரியில் சார்ஜ் இல்லையென்றாலோ மற்றும் டயர் பஞ்சராகினாலோ ஒரு போன் செய்தாலே போதும். வாட்ஸ்-அப் (WhatsApp) மூலமாகவும் கஸ்டமர் சர்வீஸை தொடர்பு கொள்ளலாம். வீட்டில் இருந்து 100கிமீ-க்கு அதிகமான தொலைவில் சர்வீஸ் செண்டர் இருந்து, 72 மணிநேரத்திற்கும் அதிகமான நேரத்திற்கு கார் பழுது பார்க்கப்பட்டால், கஸ்டமர் தங்குவதற்கான ஓட்டலையும் ஆடி நிறுவனம் புக் செய்துக் கொடுக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நீட்டிக்கப்பட்ட 10 வருட உத்தரவாதம் மற்றும் சாலையோர உதவிகளை பெற காரை வாங்கும்போதே அதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியதாக இருக்கும். இந்த புதிய திட்டங்கள் இரண்டுமே இனி ஆடி காரை வாங்கும் புதிய கஸ்டமர்கள் அனைவருக்கும் கிடைக்கும். அதேநேரம், ஏற்கனவே ஆடி காரை வாங்கி பயன்படுத்தி வருபவர்களுக்கு அவர்களது காரின் வயது மற்றும் தற்போதைய வாரண்டி நிலை சார்ந்து வாரண்டி அப்கிரேட் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








