500கிமீ-க்கு சார்ஜ் போட்டதையே சுத்தமா மறந்திடுவோம்... விலையை மட்டும் பார்க்கலனா சூப்பரான எலக்ட்ரிக் கார்!!
ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனம் டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி குளோபல் ஆட்டோ எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Auto Expo 2025) கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளது. கண்காட்சியில் ஸ்கோடா நிறுவனத்தில் இருந்து பல்வேறு வாகனங்கள் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று, எல்ராக் (Elroq) என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி கார் (Electric SUV Car) ஆகும். இந்த ஸ்கோடா எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல தரமான கார்களை விற்பனை செய்து முன்னணி கார் நிறுவனமாக விளங்குகிறது. மற்ற கார் நிறுவனங்களை போன்று ஸ்கோடாவும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் வெளிப்பாடாகவே ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் தனது புதிய எல்ட்ராக் எலக்ட்ரிக் காரை பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தியுள்ளது.

இருப்பினும், ஸ்கோடா எல்ராக் எலக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து ஸ்கோடா நிறுவனம் சார்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தோற்றத்தை பொறுத்தவரையில், எல்ராக் ஸ்கோடாவின் லேட்டஸ்ட் மாடர்ன் டிசைனை கொண்டுள்ளது. எலக்ட்ரிக் கார் என்பதால், முன்பக்கத்தில் கிரில் பகுதி முழுவதும் மூடப்பட்டதாக காட்சியளிக்கிறது. இருப்பினும், இந்த கிரில் பகுதி பட்டாம்பூச்சி டிசைனில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
காரின் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-கள் 4 பகுதிகளாக வழங்கப்பட்டுள்ளன. இந்த டிஆர்எல்-களுக்கு கீழே ஹெட்லைட்கள் பம்பரின் மீது வழங்கப்பட்டுள்ளன. இந்த ஹெட்லைட்கள் எல்இடி மேட்ரிக்ஸ் டெக்னாலஜியை கொண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக எல்ராக் காரின் தோற்றத்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால், இது ஸ்கோடா கோடியாக் காரை ஒத்துக் காணப்படுகிறது. ஸ்கோடா கோடியாக் எஸ்யூவி காரும் ஆட்டோ எக்ஸ்போ 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

எல்ராக் எலக்ட்ரிக் காரில் 21 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எல்ராக் காரின் பின்பகுதி கூட ஸ்கோடாவின் மாடர்ன் எஸ்யூவி காரை ஒத்துக் காணப்படுகிறது. காரின் பின்பக்கத்தில் அனிமேஷன் எஃபெக்ட் உடன் C-வடிவில் எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலக்ட்ரிக் காரின் முன் மற்றும் பின்பக்கங்களில் சில்வர் நிறத்தில் ஸ்கிட் பிளேட் வழங்கப்பட்டுள்ளது.
எல்ராக் காருக்கு உள்ளே டேஸ்போர்டு ஆனது லேயர்களினால் ஆன டிசைனில் உள்ளது. இவ்வாறான டேஸ்போர்டு டிசைனை தான் ஸ்கோடா நிறுவனம் அதன் சூப்பர்ப், ஆக்டேவியா மற்றும் என்யாக் கார்களிலும் வழங்குகிறது. காரின் டேஸ்போர்டில் 13 இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் டிரைவரின் தலைக்கு மேலே டிஸ்பிளேவையும் கூடுதல் பணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.

வெளிநாடுகளில் எல்ராக் 50, எல்ராக் 60 மற்றும் எல்ராக் 85 என 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் இந்த ஸ்கோடா எலக்ட்ரிக் காரில் வேரியண்ட்களை பொறுத்து, 52kWh, 59kWh மற்றும் 77kWh திறன் கொண்ட பேட்டரிகள் பொருத்தப்படுகின்றன. அதேபோல், 100% சார்ஜில் கார் அதிகப்பட்சமாக செல்லக்கூடிய தொலைவும் பேட்டரியை பொறுத்து வேறுப்படுகிறது. ஸ்கோடா எல்ராக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் மோட்டாரின் பவர் ஆனது காரின் பின் சக்கரங்களுக்கு செல்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தனது எலக்ட்ரிக் கார்களுக்கு மக்களிடம் இருந்து எந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது என்பதை அறிவதற்காகவே எல்ராக் எலக்ட்ரிக் காரை ஸ்கோடா நிறுவனம் காட்சிப்படுத்தி உள்ளது. மற்றப்படி, இந்த ஸ்கோடா எலக்ட்ரிக் கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்குவர இன்னும் பல மாதங்கள் ஆகலாம். இந்தியாவில் விற்பனைக்கு வரும் சமயத்தில் இந்த எலக்ட்ரிக் காரின் விலை ஆனது ரூ.50 லட்சம் என்கிற அளவில் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications









