தூத்துக்குடியை உலகமே பார்க்கும் அளவுக்கு மாற்ற போகும் கார் கம்பெனி! டெஸ்லாவை எதிர்பார்த்தது எல்லாம் போதும்
வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த இந்த நிறுவனம் உலகளவில் தனது கால் தடத்தை பதித்துள்ளது. அந்த வகையில், இந்தியாவிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட நினைக்கும் இந்த வியட்நாம் நிறுவனம், டெல்லியில் நடைபெற்றுவரும் பாரத் மொபிலிட்டி ஆட்டோ 2025 கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியில் வின்ஃபாஸ்ட்டில் இருந்து விஎஃப்7 (VF7), விஎஃப்6 (VF6) என இரு எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வியட்நாம் நாட்டில் இருந்து வந்தாலும், வின்ஃபாஸ்ட் தமிழ்நாட்டின் தத்து பிள்ளையாகவே மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இதன் வெளிப்பாடாகவே, 2025 ஆட்டோ எக்ஸ்போவில் வின்ஃபாஸ்ட்டின் மூத்த அதிகாரி ஒருவர் 'குடும்பம்' என தமிழில் பேசி ஆச்சிரியப்படுத்தி உள்ளார். நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் மிகவும் தீவிரமாக உள்ளார். அந்த வகையில், நம் முதலமைச்சர் வீசிய வலையில் சிக்கிய மிக பெரிய மீன் தான், வின்ஃபாஸ்ட் ஆகும்.

வியட்நாம் ஆனது பொருளாதாரத்தில் பெரிய அளவில் வளர்ந்த நாடு கிடையாது என்றாலும், வின்ஃபாஸ்ட் ஆனது ஓர் பன்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ளன. அதுமட்டுமின்றி, வின்ஃபாஸ்ட் நிறுவனம் கார்கள், டிரக்குகளில் இருந்து ஸ்கூட்டர்கள் வரையில் பல்வேறு விதமான வாகனங்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குகிறது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நம்ம ஊரில் மாருதி சுஸுகியை போன்று, வியட்நாமில் வின்ஃபாஸ்ட் ஆகும். இந்த அளவிற்கான பெரிய மீனின் முதலீட்டை தான் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக நம் தமிழ்நாடு பெற்றுள்ளது. வின்ஃபாஸ்ட்டின் வாகன உற்பத்தி தொழிற்சாலை தூத்துக்குடியில் சிலநாதம் என்கிற கிராமத்தில் சுமார் 380 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த சிலநாதம் கிராமம் ஆனது தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன்னேற்றத்திற்கான பகுதிகளுள் ஒன்றாக உள்ளது.

இந்தியாவில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் கடந்த 5 வருடங்களில் சுமார் ரூ.4,000 கோடியை முதலீடு செய்துள்ளது. தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளதால், வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் முதலீடுகள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட தொழிற்சாலை கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த தொழிற்சாலையில் ஒரே வருடத்தில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது. இந்த 2025ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை முழுவதுமாக கட்டியெழுப்பப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தனது 2வது தொழிற்சாலையை ஆந்திராவில் கட்டியெழுப்பும் திட்டத்திலும் வின்ஃபாஸ்ட் உள்ளது. ஆந்திராவில் பேட்டரி உற்பத்தி தொழிற்சாலைக்கும் வின்ஃபாஸ்ட் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் தற்போதைக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஷோரூம்கள் அதிகமாக இல்லை. ஆனால், தற்போது எலக்ட்ரிக் கார்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளதால் வரும் மாதங்களில் ஷோரூம்களின் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தும் முயற்சிகளில் வின்ஃபாஸ்ட் இறங்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலகின் பெரும் எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லாவுக்கு வெளிநாடுகளில் போட்டியாக வின்ஃபாஸ்ட் எலக்ட்ரிக் கார்கள் விளங்குகின்றன. இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வின்ஃபாஸ்ட் நிறுவனம் நம் நாட்டில் வலுவான காலடி தடத்தை பதிக்க அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









