எத்தனை பேரது தொழிலாக மாறி, வாழ்க்கையை புரட்டி போட போகுதோ! பஜாஜின் முதல் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் ரிக்ஷாவான 'ரிக்கி' (Riki)-ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தி, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா (Autorickshaw) சந்தையில் நுழைந்துள்ளது. நீண்ட தூரம் வாகனத்தை இயக்கி செல்லும் பேட்டரிகள், பாதுகாப்பான சேசிஸ் வடிவமைப்பு மற்றும் வேகமான சார்ஜிங் திறனை கொண்டதாக புதிய பஜாஜ் ரிக்கி விளங்குகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பஜாஜ் ரிக்கி அறிமுகத்தின் மூலம் இ-ரிக்ஷா சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளது. கொரோனா (Corona) பெருந்தொற்றுக்குப் பிறகு இந்தியாவின் இ-ரிக்ஷா துறை வேகமாக வளர்ச்சிக் கண்டு, மாதந்தோறும் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாவதாக பஜாஜ் நிறுவனம் தெரிவிக்கிறது.

இருப்பினும், குறைவான தொலைவிற்கு இயங்கும் திறன், பலவீனமான சேசிஸ், கடினமான பிரேக்கிங் அமைப்புகள் மற்றும் குறைந்த சேவை வசதிகள் போன்ற சவால்களை இந்தத் துறை எதிர்கொண்டு வருகிறது. இந்த நீண்டகால சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் ரிக்கி வடிவமைக்கப்பட்டுள்ளதாக பஜாஜ் கூறுகிறது. இருப்பினும், நமது சென்னை உள்பட எந்தவொரு தமிழ்நாட்டு பகுதியிலும் இப்போதைக்கு இந்த எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா விற்பனைக்கு கிடைக்காது.
பாட்னா, மொராதாபாத், கவுஹாத்தி மற்றும் ராய்பூர் போன்ற நகரங்களில் இந்த தயாரிப்பை விரிவாக சோதனை செய்துள்ள பஜாஜ் நிறுவனம், முதல் கட்டமாக உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் 100-க்கும் மேற்பட்ட நகரங்களில் புதிய ரிக்கி ஆட்டோ ரிக்ஷாவின் சில்லறை விற்பனையைத் தொடங்கவுள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் புதிய பி40 ஆட்டோ ரிக்ஷா வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முதல் மாடல், ரிக்கி பி4005 ஆகும். இது 5.4 kWh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இந்த பேட்டரியை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 149 கிமீ வரை செல்லலாம் என்று பஜாஜ் நிறுவனம் சான்றளித்துள்ளது.
பயணிகளை ஏற்றி செல்லும் இ-ரிக்ஷா வாகனங்களில் இதுவே அதிகபட்ச ரேஞ்சை வழங்கக் கூடியதாக உள்ளதாக பஜாஜ் கூறுகிறது. இதன் விலை ரூ.1,90,890 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு போக்குவரத்தை நோக்கமாகக் கொண்ட புதிய ரிக்கி சி4005 ஆட்டோ ரிக்ஷா ஆனது 164 கிமீ என்ற இன்னும் அதிக ரேஞ்சை வழங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய பஜாஜ் ரிக்கி வாகனத்தின் சரக்கு பொருட்களை கொண்டு செல்லும் வெர்சன் ஆனது பொருட்களை கொண்டு செல்ல ஒரு பெரிய படுக்கையை கொண்டுள்ளது. மேலும், வழக்கத்தை விட 28% கூடுதல் ஏறுமுகமான பாதைகளிலும் ஏறும் திறனையும் ரிக்கி சி4005 ஆட்டோ கொண்டுள்ளது. இதனால், பொருட்களை வைத்துக் கொண்டு செங்குத்தான சாலைகளில் ஏறுவது எளிதாகிறது.

இதன் விலை ரூ.2,00,876 (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பஜாஜ் ரிக்கி ஆட்டோ ரிக்ஷாக்களும் 4.5 மணி நேரத்தில் வேகமான சார்ஜிங் வசதியை வழங்குகின்றன. மேலும், மூன்று வருட பேட்டரி உத்தரவாதத்துடன் வருகின்றன. ரிக்கி, ஒரு மோனோகோக் சேசிஸ் அமைப்பை கொண்டுள்ளது. இதனால், இதன் கட்டமைப்பு ஆனது வாகனத்தின் வலிமை மற்றும் ஆயுளை மேம்படுத்துவதாக பஜாஜ் தெரிவிக்கிறது.
இந்த வகை ஆட்டோ ரிக்ஷாக்களில் அரிதாகக் காணப்படும் சுதந்திரமாக செயல்படக்கூடிய சஸ்பென்ஷன் மற்றும் ஹைட்ராலிக் பிரேக்குகளையும் புதிய பஜாஜ் ரிக்கி கொண்டுள்ளது. இது வாகனத்தின் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், கவிழும் அபாயத்தைக் குறைக்கவும், நகர்ப்புற நெரிசலில் மென்மையான பிரேக்கிங்கை வழங்கவும் உதவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஆட்டோ ரிக்ஷா பயணம் போன்ற லாஸ்ட்-மைல் (Last-mile) போக்குவரத்து ஆனது நகர்ப்புறப் பயணத்திற்கு அத்தியாவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்தக் காலத்தில், ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் நம்பகமான தீர்வுகள் தேவைப்படுகின்றன. அந்த வகையில், பஜாஜ் ரிக்கி சிறந்த சௌகரியம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் அதேவேளையில் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









